Saturday 3 December 2011

உப்பு, புளி, மிளகா விற்கவும் வெளிநாட்டுக்காரனாம்!நாம இதுல நோஞ்சானாம்!



சிறுவணிகத் துறையில் அதாவது மளிகைப் பொருட்களை விற்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இந்த அனுமதியை அளித்துள்ள மத்திய ஆட்சியாளர்களின் செயலைப் பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தமது ஓட்டு சீட்டு அரசியலுக்கு ஏற்ப பல வண்ண கருத்துகளை தெரிவித்துள்ளன. இதன் மூலம் மத்திய அரசு எந்த கொள்கையின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவமாக உள்ளனர்.

”காங்கிரசு ஆட்சியாளர்கள் என்பதனால்தான் இந்த அனுமதியை அளித்துள்ளனர். நாங்கள் ஆட்சி ஆண்டால் இப்படி ஒரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டோம்”, என்பதை போன்று நமது காதில் பூ சுற்றுகின்றனர். தாங்கள்தான் மக்கள் நலனிலும், நாட்டின் நலனிலும் அக்கறை உள்ளவர்களைப் போன்று நாடகமாடுகின்றனர்.

அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதில் காங்கிரசு கட்சிக்கும், ஏனைய கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரசு அரசின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆளும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசலில் தவமிருக்கிறார். மேற்குவங்கத்தை ஆண்ட போலிகம்யூனிஸ்டு முதல்வர் அமெரிக்காவிற்கே சென்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுந்துவிட்டு வந்தார்.

தமிழக முதல்வர் ஜெயா மக்களுக்கே மின்சாரம் இல்லாவிட்டாலும், பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக, தடையில்லாமல் மின்சாரம் தந்து தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்தான் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி. ஆனால் இவர்களோ சில்லரைவணிகத்துறையில் தங்களது மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்!

எந்த உலகமயமாக்களின்படி சிறப்பு பொருளாதாரமண்டலங்களை கொள்கை ரீதியாக இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கொள்கையின் இன்னொரு பகுதிதான் சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதுமாகும்.

மளிகைக்கடை வைக்க அன்னிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை, மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்கிறார் மத்திய மந்திரி மாமா நாராயணசாமி. மாமாவின் இந்த பேச்சு மத்திய அரசின் ஜனநாயகத் தன்மையை காட்டுவதாக தவறாக நினைத்துவிடாதீர்கள்! இந்த அறிவிப்பு நயவஞ்சகம் நிறைந்தாகும். மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தைப் பற்றியும், சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.


அ.பல நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை விற்கும் கடைகள் என்றால் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்யலாம்.

ஆ.ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பதாக இருந்தால் 100 சதவீதம் முதலீடு செய்யலாம்...

என்று மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்தியவணிகத்துறை அமைச்சர் மாமா ஆனந்த் சர்மா, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஏற்படப் போகும் நன்மைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டார்.அதே நேரத்தில்பன்னாட்டு நிறுவனங்களை கட்டுபடுத்தும் விதிமுறைகளையும் வகுத்துள்ளதாகவும் கூறினார்!

அ. பத்துலட்சம் மக்கள் தொகைக்கும்  மேற்பட்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

ஆ.ரூபாய் 300/- கோடி முதலீடு செய்ய தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இ.பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விவசாயிகளிடம்தான் பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். போன்ற நிபந்தனைகளை நமது மாமாக்கள் விதித்துள்ளார்களாம்!

*”10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் மளிகை கடை வைக்க அனுமதிப்போம்”, என்பது முதற்கட்ட நடவடிக்கைதான்.அன்னிய நிறுவனங்களை முதலில் பெரிய நகரங்களில் அனுமதித்த பின்னர்,அந்த நகரங்களில் உள்ள சிறுவியாபாரிகளை விட சிறிது குறைவான விலைக்கு பொருட்களை அவர்கள் விற்பார்கள்.இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அந்நகரங்களில் சிறுவணிகர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள்.

பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளில் குறைவான விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அறிந்துகொள்ளும் ஏனைய நகரங்களில் உள்ள  மக்களும், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டுள்ள தூண்டிலில் சிக்கிக்கொள்வார்கள்.இதன் பிறகு அனைத்து இடங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிடும்.சிறிது காலத்தில் இங்கே உள்ள சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.இதன் பிறகு உலகில் உள்ள மாபெரும் நிறுவனங்களாக உள்ள ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே சில்லரை வணிகத்தில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

சில்லரை வணிகத்தில் உள்ள கோடிக்கணக்கான வணிகர்கள் மட்டுமல்ல,அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள பரந்து, விரிந்த வலைப்பின்னலும் முற்றாக அறுத்தெரியப்பட்டுவிடும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும், இந்த வலைப்பின்னலைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.சிறுவணிகர்கள் ஒழித்துக்கட்டப் படுவதை விட, இந்த வலைப்பின்னலை அறுத்தெறிவதுதான் மிகவும் அபாயகரமானதாகும்.இந்த வலைப்பின்னலில் நான்கு கோடி சிறு வணிகர்கள்,அக்கடைகளில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,80 கோடி விவசாயிகள்,லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள்,லாரி ஓட்டுனர்கள்,சுமை தூக்கும் தொழிலாளார்கள்,சிறு தொழில் துறையில் உள்ள கோடிக்கணக்கானோர்,நெசவாளர்கள் என்று நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்த வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் அனைவரின் வாழ்க்கையையும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு சூறையாடிவிடும்.

* இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதால்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,இதனால் மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் மாமா ஆனந்த் சர்மா நமக்கு பொறி வைக்கிறார்.

மாமாவின்  இந்த வாதம் முழு பொய்யுமல்ல,முழு உண்மையும் அல்ல.அரை உண்மையாகும்.முழு பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லரை வணிகத்துறைகளில் அனுமதிப்பதன் மூலம் சிறு வணிகர்கள் முற்றாக ஒழிக்கப் படும் வரை, ஒப்பீட்டளவில் இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் சிறிது விலை குறைவாக மக்களுக்கு கிடைக்கும்.விவசாயிகளுக்கும் இதே போன்று சிறிது கூடுதல் விலை கிடைக்கும்.

சிறு வணிகத்துறை மூலம் பிணைக்கப்பட்டுள்ள வலைப்பின்னல் அறுத்தெரியப் பட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்று விடுவார்கள்.இதனால் இப்போது இருப்பதைவிட பன்மடங்கு பொருட்களின் விலையை அதிகரித்து விடுவார்கள்.விவசாயிகளின் விளை பொருட்களின் விலையையும்,தங்களின் விருப்பத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் ஏற்ப குறைத்து விடுவார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும்,தமது பிடிக்குள் கொண்டுவந்து அவர்கள் விரும்புகிற படிதான் உற்பத்தி செய்ய ஆட்டுவிப்பார்கள்.இவர்களின் நிபந்தனைகளை நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகள் ஏற்க முடியாமல் ஒன்று விவசாயத்தில் இருந்தே விரட்டி அடிக்கப்படுவார்கள்.அல்லது தமது நிலங்களிலேயே பன்னாட்டு 
நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள்.

இதன் பிறகு ஆட்சியாளர்களே நினைத்தாலும் இவர்களைகட்டுப்படுத்த முடியாது.ஏனேன்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சில்லரை வணிகத்திற்கும்,விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்குமான வலைப்பின்னல் அறுத்தெறியப்பட்டு, இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.இந்த சூழலில் ஆட்சியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால்,தாங்கள் உருவாக்கிய வலைப்பின்னலை அவர்கள் சிறிது சிக்கலுக்கு உள்ளாக்கினாலும், நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.இதை தவிர்ப்பதற்கு மீண்டும் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதும் உடனடி சாத்தியம் இல்லை.ஏனென்றால் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான மூலதனம் உட்பட அனைத்து ஆற்றலையுமே  அப்போது நாம் நாம் இழந்து போயிருப்போம்.

எனவே பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டின் சமூகம்,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும்,கட்டுப்படுத்தும் சக்திகளாக உருவெடுத்திருப்பார்கள்.
நாட்டின் தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.தொழிற்துறையில் சில கோடி தொழிலாளர்கள்தான் பாதிக்கபடுவார்கள்.தொழிற்துறையின் வலைப்பின்னல் எப்போதுமே ஏகாதிபத்தியங்களோடுதான் பிணைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒட்டுமொத்த நாட்டையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கு அது வலிமையானது அல்ல.    

ஆனால்,சில்லரை வணிகத்தின் வலைப்பின்னலோடு ஏறத்தாழ நூறுகோடி மக்களும் பிணைக்கப்பட்டுள்ளதால், நாடே அன்னிய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அதிகாரத்திற்குள்ளும் சென்றுவிடும்.ஆகவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்பது நாட்டை மீண்டும் காலணியாக்கும் உச்சகட்ட செயலாகும்.1947-க்கு முந்தைய காலணி ஆதிக்கத்தை விட இப்போதைய இந்த வடிவிலான காலணி ஆதிக்கம் கோரமானதும்,அழிவை மட்டுமே உள்ளடக்கியதுமான செயலாகும்.

எனவே மத்திய அரசின் இந்த துரோகத்திற்கு எதிராக இந்த நிமிடமே மக்களை   அமைப்பாக அணிதிரட்டி போராடுவது அவசர,அவசிய தேவையாகும்.   

http://suraavali.blogspot.com                                                               

No comments:

Post a Comment