Sunday 18 December 2011

முதுமையைக் கொண்டாட வைக்கும் உணவுகள்

அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலினை நன்கு அறிந்தவனாகவும் புரிந்தவனாகவும் இருப்பான் என்றார் மகாத்மா காந்தி.அதனால் தான் தன் ஆன்ம பலத்துக்கு ஆதாரமாக எளிய, தனக்கேற்ற உணவிலும் கடைசிவரை பிடிவாதமாகவும் இருந்தார் காந்தி.ஆனால் தற்போதைய உணவுக் கலாச்சாரம் மாறும் வேகம் பயமுறுத்துகிறது. 

சமீபத்தில் ஒருமுறை ஒரு உணவுக் கருத்தரங்கில் ஏராளமான உணவியல் மாணவ மாணவியர் இருக்கும் போது ஒரு பேராசிரியர் பேசும் போது தினசரி ’வைன்’ குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று பேசினார். எந்த அளவு என்பதில் மாணவரும் ஆசிரியரும் விவாதிக்கின்றனர். இன்னொரு முறை மருத்துவத்திற்கு வந்த ஒரு கல்லூரி மாணவியிடம் பத்தியப்பொருட்களாய் ”கத்தரிக்காய் வேண்டாம். பாகக்காய் வேண்டாம்; மஞ்சள் பூசணிக்காய் வேண்டாம்; என்று பட்டியலிட, “அது ஒகே அங்கிள்! வாரம் ஒருமுறை பீர் சாப்பிடலாமல்லவா?,” என்றார். கோட்ஸே குண்டுகளை விட பலமானவை அந்த நிகழ்வுகள். தமிழகத்தில் மதுபானத் தட்டுப்பாடு கோடையில் மிக அதிகமாக உள்ளதென கிட்டத்தட்ட 9 புது மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு லைசன்ஸுகள் வழங்கப்பட்டுள்ளதாம். குடி 300% பெருகி தமிழக அரசின் வருமானம் எக்குத்தப்பாய் ஏறியிருக்கிறதாம். எங்கே செல்கிறோம்? நவீனம் என்பது மேற்கத்தியம் அல்ல என்பதை என்று புரிய போகிறோம்? 

இப்போதல்லாம் ”அறிவியல்” சாயங்கள் அதிகம் பயன்படுவது சந்தையை பலப்படுத்துவதற்குத் தான். என்னையும் உங்களையும் பலப்படுத்த அல்ல என்பதை என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்? சட்டைப்பை முதல் சமையல்தட்டு வரை ஆக்ரமிக்கும் இந்த போலி நவீனம் நம்மை வீழ்த்திடாதிருக்க பாரம்பரிய அறிவு பலம். அதை அவசரத்திலோ அலட்சியத்திலோ தொலைத்துவிடாமல் ஒவ்வொரு மவுனமான சமயத்திலும், நிதானமாய்ப் புரிந்து நடைமுறைப்படுத்த எத்தனியுங்கள். ஏனென்றால், இப்போதே காலை நேர இட்லி தோசை இழுக்காகிப் போய், ஃப்ளேக்ஸும் ஓட்ஸும் ஒய்யாரத்திற்குப் போகிறது. சட்னி சாம்பார் இடத்திற்கு சாஸும் ஷ்க்குவாஷும் சண்டையிடுகின்றன. மதிய உணவு பர்கருக்கும் இரவு உணவு பிட்சாவிற்கும் இடம்பெயர்கின்றன. 

விரித்த விழிகளால் நகரத்தை ஓசி டிவியில் ஒரு வேலையும் இல்லாமல் பார்க்கும் கிராமத்து குடியானவன் ’இது தான் நவீனம் போலும்; நல்லது போலும்’, என்று மலைத்துப் போய் தன் இலவசங்களை மீண்டும் காசாக்கி, ”ஏ சாமி! இது நம்ம ஊர்ல எப்ப வரும் புள்ள..?”என அதை வாங்கத் தயாராய்க் காத்து நிற்கிறான்.அட! பெரிய பேச்செல்லாம் ரொம்ப வேணாம். முதியோருக்கான நல்லுணவு குறித்து மட்டும் பார்ப்போம். 

முதுமைப்பருவம் என்பது இரண்டாம் குழந்தைப்பருவம் என்ற வழக்குமொழி அறிந்ததே. வயசான காலம் என்பது வியாதிக் காலம் என்ற அவல நிலை அவசரமாக உருவாகியோ/உருவாக்கப் பட்டோ வரும் நிலைமை இப்போது. ரிடய்ரமண்ட் பென்ஷன் பலமோ இல்லையோ ரிடய்ர்மண்ட் காலத்தில் வியாதி இல்லாமல் இருப்பது மட்டும்தான் மிகப்பெரிய பலம். வரும் முன் காக்க வேண்டும் எனில் நடுவயதிலேயே நல அக்கறை மிக மிக அவசியம்.
நாற்பதைத் தொட்டுவிட்டால் முதுமையின் வாசற்கதவைத் தொடத் துவங்கி விட்டோம் என்று பொருள். முதலில் உணவில் புளிப்பு, உப்பு, இனிப்பைக் குறைக்க வேண்டும். கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு மட்டுமே அதிகம் சாப்பிட வேண்டும். நாளொன்றுக்கு 3-4 லிட்டர் தண்ணிர் சாப்பிட மறக்க கூடாது. மனச்சிக்கலையும் மலச்சிக்கலையும் நீர் நீக்கும். கவிதைவரி கதை வரி இல்லை.பாரம்பரிய மருத்துவ நெறி.

வயதாகும் போது மூட்டுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு புளிப்பைக் குறைக்க வேண்டும். (புளிக் குழம்பு, காரக் குழம்பு, வத்தக் குழம்பு இதையல்லாம் தவிர்க்க வேண்டும்).குளிர்பானங்கள் கூடியவரை கூடாது! வாரம் இரு முறை முடக்கறுத்தான் அடை,வாய்விடங்க கசாயம் என சாப்பிட வேண்டும். கால்சிய சத்து அதிக முள்ள மோர், கீரை கம்பு, ராகி உணவுகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். 

கொலஸ்டிரால் குறித்த அலாதி அக்கரை பெருகி உள்ளது. கொஞ்சம் வரவேற்கக் கூடியதனினும், அது முழுமையாய் புரிந்து கொள்ளாமல் கொலஸ்டிராலை விஷம் போல் பார்க்கும் சாமனியர் இன்று பலர். கொலஸ்டிரால், இரத்த குழாய்களின் உள்சுவர்களின் கீறல்களை ரிப்பேர் செய்யும் சிமெண்ட் போன்றது. அளவுக்கு அதிகமாகக் கூடாதே தவிர; ஒழித்துக்கட்டுவது சொந்த செலவில் சூன்யம் வைப்பது போன்றது. பல சர்க்கரையைக் குறைக்கும் நவீன மருந்துகள் கூட நல்ல கொலஸ்டிராலைக்(HDL) குறைக்கக் கூடியது. உடனே அதுக்கு ஒரு மாத்திரை, பின் அதற்கு சாப்பிடும் மாத்திரை ஈரலை கெடுக்காமல் இருக்க, வயிற்றுப்புண் வராமலிருக்க என பக்கம் பக்கமாய் எழுதிய மாத்திரை பொரியலை சாப்பிடாது உணவிலும் உடற்பயிற்சியிலும் அக்கறை காட்டுவது அவசியம். மீனிலும், ஃப்ளேக் விதையிலும் உள்ள ஒமேகா 3 அமில சத்து HDL-ஐ கூட்ட உதவும். வெந்தயமும், வெள்ளைப்பூண்டும் இரத்த ட்ரை கிளிசரைடு மற்றும் இரத்த கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். IGT (Impaired Glucose tolerance) எனும் இரத்தச் சர்க்கரை வருமா வராதா எனும் பார்டர் சர்க்கரைக்கும் வெந்தயம் வேலை செய்யும். முருங்கைக் கீரை ஆடாதொடைஇலை போட்டு தயாரிக்கப்படும் சூப்பில் இரத்தக் கொதிப்பும் குறையும். 

நல்ல தூக்கம் வயோதிகத்தின் வரப்பிரசாதம். அதற்கு இரவில் கொஞ்சம் சாதிக்காய்த் தூள் 1 சிட்டிகை இரவில் பாலில் சாப்பிட வேண்டும்.காலை எழுந்தவுடன் எவ்வித சிரமமும் இன்றி மலம் கழிய முதுமையில் முனகவும் முழுமையாய் வருந்தவ்ய்ம் செய்பவர்கள் இன்று ஏராளம். அதற்கு இரவில் கண்டிப்பாய் பழ உணவு ஒரு பகுதி இருக்க வேண்டும். கடுக்காய் தூள் (விதை நீக்கியது) 1டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.முதுமையில் கடுக்காய் மிடுக்காய் இருக்க உதவுவது உறுதி.

”நல்லா மலம் கழியும்;தூக்கம் நல்லா வரும்;துக்கம் மற்கக்கலாம்”-எறெல்லாம் சொல்லி, நடுத்தர வயதிலும், முதுமையிலும் மது அருந்தும் பழக்கம் தமிழகத்தில் பெருகி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களில் இவ்வேதனையான விஷயம் தெரிய வந்துள்ளது. மருத்துவத் தொழில் கொழிக்க மூலதனமாய் இருப்பதை தவிர மதுவில் எவ்வித பயனும் இல்லை. இருதய நோய், சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்று நோய் என முதுமையில் வரும் பல வாழ்வியல் நோய்க்கும் மது முக்கிய காரணம். அது தெரியாமல், ’வைன் நல்லது; அதில் பாலிஃபீனால் இருக்கிறது,’ என்னும் வாதம் வயிற்றெரிச்சலைத் தருகிறது. அபினிலும் கஞ்சாவிலும் கூட மருத்துவக் கூறுகள் உள்ளது. அதற்காக...?

முன்பெல்லாம், ”என் கணவ்ர் மது அருந்துகிறார் என்பதை பெருத்த வேதனையுடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள், இன்று ’அவ்ர் ஒரு சோஷியல் ட்ரிங்க்கர்..அளவோடு தான்” என நாகரீகமாக மருத்துவரிடம் பேசும் வாதம் வலி தருகிறது. நாளைய முதுமையை முழுமையாய் முடக்கப் போவது இந்த மது. மேற்கத்தியம் சொல்வது போல், வியாபாரிகள் விரும்புவது போல், அதனை கனவிலும் உணவாய் ஒத்துக் கொள்ள முயலக் கூடாது. அலட்சியப்பட்டால் முதுமையில் ஆரோக்கியத்திற்கு மிக விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment