நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
நக்சல்கள் எல்லாம் தீவிரவாதிகள் அவர்களை ஒடுக்கவே நாங்கள் அவர்களுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறும் இந்திய பாதுகாப்பு(!) படையின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகின்றது இக்கட்டுரை. வீரப்பனின் தேடுதல் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த சோளகர் பழங்குடி இன மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ச.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி என்ற நாவல் மிக தெளிவாக பதிந்துள்ளது.அதைப் போலவே மாவோவினர்களை தேடும் வேட்டையில் பாதிக்கப்படும் பழங்குடி இனமக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள இக்கட்டுரை ஒரு சிறிய அளவிலாவது உங்களுக்கு உதவும். மேலும் இதுபோல பாதிக்கப்படுகின்ற பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக போராடும் பினாயக் சென் போன்றோர் அரச நிறுவனங்களால் ஒரு தேசதுரோகியைப் போல சித்தரித்து கைது செய்யப்பட்டு அடைப்பது அவரை மட்டும் தண்டிப்பதற்காக அல்ல…குறிப்பாக மக்களுக்காக வேலை செய்பவர்களிடம் ஒரு அச்ச உணர்வை எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த அச்சத்தின் மூலமாக மக்களை ஆட்சி செய்வது தான் இராணுவ ஆட்சி, இந்தியாவிலும் இந்த முறையிலான இராணுவ ஆட்சியே நடக்கின்றது…..இந்த கட்டுரையின் இறுதியில் கோவசி அத்மா என்ற பழங்குடி விவசாயி கூறுவது போல இங்கு இரண்டு வேறுபட்ட அரசுகள் உள்ளன (ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா)என்பதை தனது அண்மைய தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் வேறுவழியில்லாமல் உறுதி செய்துள்ளது.காவல் துறையின் இயக்கல்களுக்கு(operation) நடுவே தாண்டேவாடாவில் வாழுகின்ற மனிதர்களான பழங்குடிகளின் உண்மையான நிலையைப் பற்றியும், அங்கு மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற படுகொலை நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கின்றது இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதியவர் தெகல்கா நாளிதழின் நிருபரான துசா மிட்டல்…
______________________________________________
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோவினர் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது நடத்திய மிக மோசமான தாக்குதல் நடைபெற்று இன்றோடு(6 ஏப்ரல் 2011) ஒர் ஆண்டு ஆகின்றது. கடந்த ஆண்டு இதே நாளில் தான் சட்டீசுகரின் வனப்பகுதியில் 76 எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலை மாவோவினர் மீதான எதிர் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கான காரணியாக ஆனது. ஓர் ஆண்டுக்கு பின்னர் அதே வனம் இன்னொரு படுகொலை நிகழ்வைச் சந்தித்துள்ளது. ஆனால் இந்த முறை படுகொலையை செய்தது நாம் எதிரிகளாகக் கருதும் மாவோவினர் அல்ல, இந்திய பாதுகாப்பு படைகள் என்பது தெகல்கா நாளிதழின் விசாரணையிலிருந்து தெரிய வருகின்றது. இதில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் இந்தியாவில் உள்ள சகமக்களின் கண்களுக்கு (தெரிந்தும்)தெரியாத பழங்குடிகளே.
மார்ச் இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு படை நடத்திய இயக்கல் ஐந்து நாட்கள் நீடித்தது. இதில் இந்திய பாதுகாப்பு படை தாண்டேவாடா மாவட்டத்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள மூன்று கிராமங்களை முற்றிலுமாக தீவைத்து கொளுத்தியுள்ளது. இதில் மொத்தம் முன்னூறு குடிசைகள் எறிந்து சாம்பலாயின. நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் வீடிழந்தார்கள். மூன்று பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். மூன்று பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பழங்குடிகளின் தானிய சேமிப்புகள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ளன. பழங்குடிகள் சேமித்து வைத்திருந்த(மொத்த இருப்பு) தங்க நகைகள், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட ஒருவரின் உடல் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டும், மற்ற ஒருவரின் உடல் கோடாரியால் இரண்டாக பிளக்கப்பட்டும் கிடந்தது. அவர்களின் வாழ்வாதாரமான கோழி, ஆடு, உணவுப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதைப் பற்றிய செய்தி “Rajastan Patrika” என்ற ஒரே ஒரு இந்தி நாளிதழலும், “இந்து” நாளிதழிலும், சில உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வெளிவந்ததை தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தாண்டேவாடாவில் காவல்துறை தலைமை அதிகாரியான கல்லுரி என்பவரின் தலைமையில் தான் இந்திய துணை இராணுவமும், மற்ற படைகளும் இயங்குகின்றன. இவர் இந்த படுகொலையும், தீ வைப்பும் “மாவோவினரின் பரப்புரை யுத்தி” என்கின்றார். சட்டீசுகர் மாநில உள்துறை மந்திரி நன்கிராம் கன்வாரோ இந்த தீ வைப்புகளுக்கு காரணம் மாவோவினர் தான் எனக் குற்றம் சாட்டுகின்றார்.
இந்த படுகொலை நிகழ்வுக்கு பின்னரான மார்ச் இறுதி வாரங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நுழைவதற்கு பல தனிப்பட்ட விசாரணை குழுக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. சட்டீசுகர் மாநில முதல்வர் இராமன் சிங்கின் உத்திரவாதத்தின் பேரில் காவல்துறையினரின் பாதுகாப்போடு சென்ற சமூக செயல்பாட்டாளரான சுவாமி அக்னிவினேசு வெறி கொண்ட ஒரு கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவல்துறையால் மிரட்டப்பட்டுமுள்ளார்கள்.
தாண்டேவாடா மாவட்ட ஆட்சியர் கொடுத்த நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சுமையுந்தின் ஓட்டுநர், கர்தம் சூர்யா என்ற சிறப்பு காவல்துறை அதிகாரியினால் தாக்கப்பட்டார். இந்த காதம் சூர்யா இதற்கு முன்னர் ஒரு கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது. பாதுகாப்பு பிரச்சனை என்ற பெயரில் சட்டீசுகர் மாநில எதிர் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல விதமான இழுத்தடிப்புகளுக்கு பின்னர் வேலை செய்யத்துவங்கிய மாநில நிர்வாகம் தாண்டேவாடா மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி கல்லுரியை இடமாற்றம் செய்து, மேலும் இந்த படுகொலை தொடர்பான நீதி விசாரணை நடக்கும் என்று உத்திரவாதத்தையும் வழங்கியுள்ளது.
கடந்த வாரம் காவல்துறையின் அரண்களை தாண்டி செல்வதற்காக மிகவும் தொலைவான காட்டுப்பகுதியின் மூலமாக பாதிக்கப்பட்ட கிராமங்களை தெகல்கா குழுவினர் சென்றடைந்தனர். மத்திய காவல் படை வீரர்கள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து தான் இந்த படுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிகழ்வை நேரில் கண்ட சாட்சிகள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்கள். மேலும் இவர்களுக்கு உறுதுணையாக உடுப்பு அணிந்தும், பொது மக்களைப் போன்ற உடையணிந்தும் இருந்த சிறப்பு காவல்துறை அதிகாரிகளும் இருந்துள்ளார்கள்.
“இந்தப் பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக காவல்துறை கருதியிருந்தது. மேலும் கிடைத்திருந்த உளவுத்தகவல்களின் படி முக்கியமான மாவோவினர் இந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன” என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மேலும் கூறுகையில் “இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் நக்சல் ஆதரவாளர்கள், தெரிந்தோ, தெரியாமலோ நக்சல்களுக்கு அவர்கள் உடந்தையாகவும், 76 படை வீரர்கள் கொல்லப்படுவதற்கு உதவியும் உள்ளார்கள்”.
தீ வைத்து கொழுத்தப்பட்ட மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராமங்கள் மயான பூமியைப் போல எங்களுக்கு காட்சியளித்தன. அந்த நிலப்பகுதி மொத்தமும் எரிந்த குடிசைகளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானியங்களைக் கொண்ட பழங்கால தாழிகளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்தது. இது சல்வா சூடும் நடைபெற்ற ஆரம்ப கால கட்டத்தை எமக்கு நினைவூட்டியது. 2005-ல் தொடங்கிய சல்வா சூடும் இயக்கலினால் மொத்தம் 645 கிராமங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டது, மொத்தம் 60,000 மக்கள் உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்த சல்வா சூடும் இயக்கல் அரச உதவி பெற்ற ஒரு ஆயுதப்படை இயக்கல் என்பது பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அது போல ஒரு பெரிய இடப்பெயர்வு இப்பொழுது நடக்கவில்லை என்றாலும், இது போன்ற நிகழ்வுகளால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பழங்குடிகள் ஆந்திர மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு கூலி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதை விடுத்த அந்த கிராமங்களிலேயே வாழ்ந்து வருபவர்கள் வீடுகள் இல்லாத காரணத்தினால் பெரிய மரங்களின் கீழ் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த கொடூர நிகழ்வை செய்தது சீருடை அணிந்த மாவோவினர் என்று முதலில் கருதப்பட்டது.
ஆனால் இதில் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரச படையைச் சேர்ந்தவர்களே என்றும், அவர்களில் சிலரது பெயர்களையும் கூறினார்கள்: நகரம் பகுதியைச் சேர்ந்த இரமேசு என்ற மத்கம் பீமா, லேகாபரோ பகுதியைச் சேர்ந்த தெலம் அன்ட, மோர்பளி பகுதியைச் சேர்ந்த புத்கே மரா, குர்ராபரோ பகுதியைச் சேர்ந்த கிச்சே நந்தா (இவர் ஏற்கனவே சிங்காரம் என்ற பகுதியில் 19 பழங்குடியினரைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்), மிசுமா பகுதியைச் சேர்ந்த கர்தம் சூர்யா (இவர் ஏற்கனவே 4 பழங்குடி இன பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்). மேலும் நந்தா, சூர்யாவைக் கைது செய்யச் சொல்லி நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ஒன்றும் நிலுவையில் உள்ளது. வழமை போலவே இவர்களை எல்லாம் காணவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
இவர்களில் சிலர் சரணடைந்த மாவோவினர் (பின்னர் அரச தரப்பால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்), சிலர் சல்வாசூடும் இயக்கலில் பணியாற்றி பின்னர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக ஆனவர்கள், சிலர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி “கோய”அதிரடிப்படை அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள். அரசு சல்வா சூடும் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுகின்றது, ஆனால் அந்த இயக்கலில் பணியாற்றியவர்கள் தான் அதிரடி படைகளிலும், சிறப்பு காவல்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றார்கள். சல்வா சூடும் இயக்கல்…துணைப் பாதுகாப்பு படை இயக்கல் என்று பெயர் மாற்றம் தான் அடைந்திருக்கின்றதே தவிர சல்வா சூடும் முடிந்து, துணை இராணுவப்படையின் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் தென்படவே இல்லை.
மேலும் இங்கு தனிப்பட்ட பகை நடவடிக்கைகள் நடக்கின்றதா இல்லை மாவோவினருக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்கின்றதா என்பதும் தெளிவாக தெரியாத நிலையே நிலவுகின்றது. இந்த படுகொலை நிகழ்விற்கு உடந்தையாக இருந்த தன் மகன்(புத்கே மற) சாக வேண்டும் என்று நினைக்கும் மோர்பளி வாசியான புத்கே லச்சாவை நீங்கள் சந்திந்தால் தான் இங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர் எந்தளவு மக்களை பாதித்துள்ளது என்பது உங்களுக்கு தெரிய வரும். புத்கே லச்சா மேலும் கூறுகையில் தொடக்கத்தில் புத்கே மற குடிப்பழக்கத்தில் ஈடுபட்டு பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டான், பின்னர் ஒரு பெண்ணை கற்பழித்து எனக்கு தீராத களங்கத்தை உண்டாக்கிவிட்டு இந்த கிராமத்தை விட்டே வெளியேறிவிட்டான்.
“அவன் ஆந்திராவில் கூலி வேலை செய்வதாகவும், எங்கேயாவது அவன் தங்க நேர்ந்தால் அங்குள்ள பசு, உணவு தானியங்கள், பணத்தை திருடி வருவதாகவும்” நான் கேள்விப்பட்டேன் என புத்கே லச்சா கூறுகின்றார். இதன் பின்னர் கடந்த ஆண்டு(2010)சத்தீசுகர் வந்த தன் மகன் நேரடியாக கோன்டா பகுதியில் உள்ள சல்வா சூடும் குழுவிற்கு தலைமை பொறுப்பு வகித்ததாகவும், இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சிறப்பு காவல்துறை அதிகாரியானான், அவனுக்கு அரச படைகளின் சீருடையும், ஒரு துப்பாக்கியும், மாதம் 3,000 ரூபாய் சம்பளமும் அரசால் வழங்கப்பட்டது. அவன் மட்டும் தனியாக இந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தால் இங்கிருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவனை கொன்று விடுங்கள் என்று நான் இங்குள்ள மக்களிடம் கூறுவேன் என்கிறார் புத்கே லச்சா.
படுகொலையை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறியதன் அடிப்படையில் அந்த நாட்களில் நிகழ்ந்தவை…..
11 மார்ச், காலை 8.00 மணி – இடம். மோர்பளி
அரச படை இரண்டு பிரிவுகளாக மோர்பளி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மத்வி கங்காவின் குழந்தைகள் தண்ணீர் எடுக்கச் சென்ற குளத்தை ஒட்டிய பாதை வழியாக முதல் அணி வந்தது. அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு தன் குடும்பத்தை எச்சரிக்க சென்றார் மத்வி கங்கா(வயது 40), ஆனால் அவர்கள் அதற்குள்ளாக அங்கு வந்துவிட்டார்கள். மத்வி கங்காவையும், அவரது மகள் லக்கேவையும்(17 வயது), மகன் பீமா மூவரையும் தாக்கியுள்ளார்கள், பின்னர் அவர்களை கட்டி கிராமத்திற்குள் இழுத்து வந்துள்ளார்கள். பின்னர் அவர்களிடம் “மாவோவினர் எங்கே என்று? கேட்டுள்ளார்கள்.
முதல் அணி மோர்பளி கிராமத்திற்குள் வருவதற்கு முன்னதாகவே அந்த கிராமத்தில் வசித்த 200 பேரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அரச படைக்கு மாவோவினரோ, மக்கள் தயாரிப்பதாக சொன்ன நாட்டு துப்பாக்கிகளோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மாவோவினர் மாவீரர்களுக்காக கட்டிய 15 அடி உயர நினைவுச் சின்னம் மட்டுமே. அந்த கிராமத்தில் மாவோவினரின் நினைவுச் சின்னம் இருப்பதாலேயே அந்த கிராமவாசிகள் அனைவரும் மாவோவினர் என்று கூறி விடமுடியாது.
மறு புறம், இரண்டாவது அணி வரும் பொழுது, 40 வயதான ஐம்லா என்பவர் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள் “எழுந்து, அந்த பக்கமாகச் செல், நாங்கள் எல்லோரும் ஆந்திர பிரிவைச் சேர்ந்த நகசல்கள், நாங்கள் அவசரமாக ஒரு சந்திப்பிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். அவர் அங்கிருந்து நகர மறுக்கவே, அவரை தங்கள் கைகளிலிருந்த இலத்தி கம்பைக் கொண்டு தாக்கி, அவர் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவரது வாழ்நாள் சேமிப்பான ரூ. 10,000த்தை அவரிடம் இருந்து பரித்து, அவரது இரு பெண் குழந்தைகளின் கண் முன்பே அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார்கள். (சல்வா சூடும் காலத்தில் அடிக்கடி வீட்டிற்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியதால் இங்கு வாழும் பழங்குடிகள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளான தங்க நகைகளையும், பணத்தையும் எங்கு சென்றாலும் தங்களுடனே எடுத்துச் செல்லத்தொடங்கினார்கள்..இல்லையென்றால் அவையும் எரிந்து சாம்பலாகிவிடும்)
அந்த கிராமத்தில் உள்ள 35 வீடுகளிலுள்ள பொருட்களையும் களவாடி, அங்கிருந்த மக்களை அடித்து துன்புறுத்திய இரு அணிகளும், கையில் தீக்குச்சி மற்றும் கல்லெண்ணெய்(petrol) மூலம் அந்த கிராமத்தை எரித்து விட்டுச் சென்றார்கள். விவசாயியான கர்த்தி லச்சாவின் மண் குடிசை இதற்கு முன்பே ஒருமுறை சல்வா சூடும் படையினரால் 2006ல் எரிக்கப்பட்டது. இது இரண்டாவது முறை. “எத்தனை முறை தான் நான் எனது குடிசையும் மீளக்கட்டுவது?, மீண்டும் அவர்கள் வந்து எனது குடிசையை கொளுத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று?” அவர் கேட்கின்றார்.
அங்கன்வாடி பணியாளரான சோடி சான்டோவின் குடிசையும் இதில் எரிக்கப்பட்டது. இவரது குடிசையில் தான் கர்ப்பிணி பெண்களுக்காக அரசினால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சோடி சாண்டோவின் குடிசை தான் இந்த கிராமத்திலிருந்த ஒரே அரச அலுவலகம். பள்ளிக்கூடங்கள், நியாய விலைக் கடைகள், குடி நீர் என்று எல்லா அடிப்படை தேவைகளுக்கும் இவர்கள் தங்கள் கிராமத்திருந்து நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் இது போன்ற இடங்களைச் சுற்றி மத்திய பாதுகாப்பு படையின் முகாம்களும், காவல்துறை நிலையங்களும் இருந்தன.
புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆசிரம பள்ளிக்கூடங்கள் கூட இந்த கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. சல்வா சூடுமினால் வனப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்கள் தீ வைத்து காலி செய்யப்படுவதற்கும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகங்கள் முக்கிய சாலைகளின் அருகிலேயே அமைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. முதலில் அவர்களது இடங்களிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி காவல்துறை, மற்ற படைகளின் கண்காணிப்பிலேயே வைப்பது தான் அவர்களின் உத்தி.
மோர்பளி கிராமத்தை தீவைத்து கொளுத்திய பின்னர் ஒரு குழு கங்கா, மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள சிந்தல்நர் காவல்நிலையம் நோக்கி புறப்பட்டது. போகின்ற வழியில் படையினர் வண்டியை நிறுத்தி தாங்கள் கொள்ளையடித்து வந்திருந்த 50 கோழிகளையும்(இதில் இரண்டு கோழிகள் கங்காவிற்கு சொந்தமானவை) சமைத்து உண்டு, பின் ஓய்வெடுத்த பின்னரே சென்றார்கள். காவல்துறை நிலையத்தில் கங்காவும், அவரது இரண்டு பிள்ளைகளும் சிறப்பு கால்துறை அதிகாரிகளால் மீண்டும் தாக்கப்பட்டார்கள். “ஏன் அங்கிருந்து ஓடினீர்கள்? என்று அவர்கள் கேட்டதற்கு, அவர் தனது கிராமத்தில் நடந்த கொள்ளை, தீவைப்பு சம்பவங்களை அவர்களிடம் கூறினார், ஆனால் அவர்கள் பதிவு செய்தது என்னவோ கங்கா குடும்பத்தினரின் பெயர்களை மட்டுமே.
இதற்கிடையில் கங்காவின் 17வயது பெண்னை அருகிலிருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள், அடுத்த நாள் காலையில் கிழிந்து போன உள்ளாடைகளுடன் அரை நிர்வாணமாக அவள் வெளியே வந்தாள். “அவளை அடித்து துன்புறுத்தி கற்பழித்துள்ளார்கள்” என்று கூறுகின்றார் கங்கா. தெகல்கா குழுவினர் மோர்பளி கிராமத்திற்கு சென்ற பொழுது அந்த பெண் தனக்கு புதுத்துணிகள் வாங்குவதற்காக கூலி வேலை செய்ய ஏற்கனவே ஆந்திராவிற்கு சென்றிருந்தாள்.
மோர்பளியில் இருந்த இரண்டாவது அணி அங்கிருந்து வனப்பகுதியை சோதனை செய்யச் சென்ற பொழுது 35 வயதான மத்வி உங்கி மவுவா விதைகளை பிரித்து வைத்துக்கொண்டிருந்தார், அவரது கணவரான மத்வி சுக்கா (40 வயது) அருகிலுள்ள புளியமரத்தில் நன்றாக பழுத்திருந்த புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார். அரசபடையின் காலணி சத்தத்தை கேட்ட உடனே மரத்தில் இருந்து கீழே இறங்கிய மத்வி சுக்கா இலைகள் அதிகமாக இருந்த டெண்டு மரத்தில் ஏறி மறைந்து கொண்டார். மத்வி உங்கி அங்கிருந்து ஓடி தனது குடிசைக்குள் சென்று விட்டார். அவரது ஒரு வயது மகளை தூக்கி வைத்துக் கொண்டார். அவரது வீட்டிற்குள் புகுந்த அரசபடையினர் அவரை தாக்கி அவளது மேல்சட்டையை கிழித்துள்ளார்கள்.
படையினர் அங்கிருந்து நகர்ந்து செல்லும் போது துப்பாக்கி சத்தம் கேட்க, தனது குடிசையில் இருந்து வெளியே தவழ்ந்த படியே(நடக்க முடியாததால்) வந்த உங்கி தனது கணவரை தேடிச்சென்றார். அவரது கணவர் இருந்த இடத்தில் ஒரே இரத்தமாக இருந்தது ஆனால் அவரது உடல் அங்கில்லை, சற்று நிமிர்ந்து மேலே பார்த்தால் அவரது கணவரின் உடல் மரக்கிளைக்கு இடையில் குத்தப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. “இங்கே தான் பாதுகாப்பு படையினர் எனது கணவரை சுட்டுக் கொன்றார்கள்” என்று ஒரு காலத்தில் தான் வழிப்பட்ட வந்த அந்த மரத்தைக் நம்மிடம் காட்டுகின்றார்.
13 மார்ச், மதியம் 12 மணி, புத்தாம்படு கிராமம்
அன்று மதியம் சிந்தல்நர் மத்திய ஆயுதப் படைப்பிரிவு முகாமில் இருந்த 300 பேர் திமாபுரை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். அந்த பகுதியில் மாவோவினர் முகாம் அமைத்திருப்பதாக காவல்துறை தரப்பு கூறியது. திமாபுர் செல்லும் வழியில் புத்தாம்படு கிராமத்தை அவர்கள் சுற்றி வளைத்தார்கள். சற்று தூரத்தில் அரச படையினர் வருவதைக் கண்ட அந்த கிராம மக்கள் பயத்தில் ஓடத் தொடங்க, உடனடியாக படையினர் அவர்களை நோக்கி சுடத்தொடங்கினார்கள். இதில் பாதிக்கப்பட்ட மத்கம் கித்மீ கூறுகையில் “அவர்கள் என்னை கொன்று விட்டார்கள் என்றே நினைத்தேன், ஆனால் நல்வாய்ப்பாக(luckily) அந்த குண்டு என் காலில் பாய்ந்ததனால் நான் தப்பித்தேன்”. இப்பொழுது அவர் தனது கால்களை இழுத்துக் கொண்டே காட்டிற்குள் செல்கின்றார். தலையில் டெண்டூ இலைகளை ஒரு கூடையில் சுமந்து கொண்டும், காலில் துப்பாக்கி குண்டோடும் அவர் வாழ்ந்து வருகின்றார்.
ஆனால் கித்மீயைப் போல பத்சே பீமாவிற்கும்(வயது 40), மன்னு ராமிற்கும் நல்வாய்ப்பு கை கொடுக்கவில்லை. அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்து கொண்டு படையினர் திமாபுர் நோக்கி பயணித்தார்கள். தனது கணவன் பீமாவை விட்டு விடுமாறு அவரது மனைவி பத்சே லக்மீ படையினரிடம் கெஞ்சினாள், இன்னும் ஒரு நாளில் அவரை விடுவித்து விடுவோம் என படையினர் அவருக்கு உறுதியளித்தார்கள். ஆனால் இரண்டு நாள் கழித்து திமாபுரில் முழங்காலிடபட்டு தொழுகை செய்யும் நிலையில் அவரது கணவரின் உடலை இரத்த வெள்ளத்தில் மட்டுமே லக்மீயால் காணமுடிந்தது. அப்போதும் கூட அவரது கணவரைக் கொன்ற கோடாரி அவரது முதுகுப்பகுதியின் உள்ளே இருந்தது, அவரது கைகளே ஒரு கயிற்றின் மூலமாக பின்னால் கட்டப்பட்டிருந்தது.
13 மார்ச், மாலை 3 மணி, திமாபுர் கிராமம்….
மாலை 3 மணியளவில் பாதுகாப்பு படையினர் திமாபுர் கிராமத்திற்குள் நுழைந்தனர். திமாபுர் கிராமம் அரசினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமமாகும், பள்ளிக் கூடங்கள் கிடையாது, நியாய விலைக் கடைகள் கிடையாது, குடிநீர் வசதியும் கிடையாது. அங்கு இருந்த ஒரு தொடக்கப்பள்ளியும் சல்வா சூடும் தொடங்கிய பிறகு முற்றிலுமாக செயல்படுவதில்லை (சல்வா சூடும் படையினரால் ஆசிரியர்கள் யாரும் வனப்பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று மிரட்டப்பட்டார்கள்) மேலும் திமாபுர் கிராமத்திற்கு பஞ்சாயத்து உறுப்பினரும் கிடையாது. முன்னர் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த மத்கம் மசுகா இப்பொழுது தோர்நபல் பகுதியில் உள்ள சல்வா சூடும் முகாமில் உள்ளார். 2006ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த ஒரு பஞ்சாயத்து உறுப்பினரும் இந்த கிராமத்திற்கு வருவதும் கூட கிடையாது.
13 மார்ச் அன்று சில குடிசைகளை எரித்துக் கொண்டே அரச படை திமாபுர் கிராமத்திற்குள் மாவோவினரையோ அல்லது கிராமவாசிகளையோ தேடியபடியே உள்ளே நுழைந்தது. ஆடுகளும், கோழிகளும் மட்டுமே அங்கிருந்த உயிருள்ள பொருட்களாகும். வழமை போலவே அவற்றை கொன்று தங்களின் இரவு உணவாக்கிக் கொண்டார்கள். இரவு அவர்கள் அங்கேயே தங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து வெளியே செல்லும் வழியில்(2கிலோ மீட்டர் தொலைவில்) மாவோவினரின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
“அங்குள்ள கிராமங்களை பாதுகாக்கவே எங்களது மக்கள் விடுதலை கரந்தடி இராணுவம்(people liberation guerrills Army) அவர்களை தாக்கியது” என்ற கையெழுத்து பிரதி ஒன்று தெகல்கா குழுவினருக்கு வந்தது. இந்த கையெழுத்து பிரதியின் கீழே – மாவோவிவனரின் தெற்கு பாசுடர் படையணியின் தலைமை அதிகாரி – வெங்கடேசு என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் “கல்லுரிக்கும்(மாநில காவல்துறை தலைமை அதிகாரி) அவரது படைகளுக்கும் இந்த கிராமவாசிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் வன மிருகங்கள் ஆகிவிட்டார்களா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவரை அவர்கள் பார்த்தாலும், அவரை தாக்கியோ, கொன்றோ, அல்லது அவரது பொருட்களை கொள்ளையடித்தோ செல்கின்றார்கள். அரச நிர்வாகம் ஆதிவாசிகளுக்கான அபிவிருத்தி(development) திட்டங்களைப் பற்றி பேசி வருகின்றது. ஆனால் நீங்கள் பார்த்துவரும் இந்த கிராமவாசிகள் ஆதிவாசிகளைப் போலவா நடத்தப்படுகின்றார்கள்?” என்று எழுதப்பட்டுள்ளது.
“அங்குள்ள கிராமங்களை பாதுகாக்கவே எங்களது மக்கள் விடுதலை கரந்தடி இராணுவம்(people liberation guerrills Army) அவர்களை தாக்கியது” என்ற கையெழுத்து பிரதி ஒன்று தெகல்கா குழுவினருக்கு வந்தது. இந்த கையெழுத்து பிரதியின் கீழே – மாவோவிவனரின் தெற்கு பாசுடர் படையணியின் தலைமை அதிகாரி – வெங்கடேசு என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் “கல்லுரிக்கும்(மாநில காவல்துறை தலைமை அதிகாரி) அவரது படைகளுக்கும் இந்த கிராமவாசிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் வன மிருகங்கள் ஆகிவிட்டார்களா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவரை அவர்கள் பார்த்தாலும், அவரை தாக்கியோ, கொன்றோ, அல்லது அவரது பொருட்களை கொள்ளையடித்தோ செல்கின்றார்கள். அரச நிர்வாகம் ஆதிவாசிகளுக்கான அபிவிருத்தி(development) திட்டங்களைப் பற்றி பேசி வருகின்றது. ஆனால் நீங்கள் பார்த்துவரும் இந்த கிராமவாசிகள் ஆதிவாசிகளைப் போலவா நடத்தப்படுகின்றார்கள்?” என்று எழுதப்பட்டுள்ளது.
மாவோவினரின் தாக்குதலில் 3 “கோயா” அதிரடிப்படை அதிகாரிகளும், 1 மாவோவினரும் கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் பாதுகாப்பு படை மீண்டும் திமாபுர் கிராமத்திற்கு திரும்பியது. அடுத்த நாள் முழுவதும் அங்கே தங்கியிருந்த படையினர், 15 மார்ச் அதிகாலையில் கிராமத்தை விட்டு சிந்தல்நர் நோக்கி புறப்பட்டார்கள். வழமை போலவே அங்கிருந்த 50 குடிசைகளை தீவைத்து கொளுத்தி, தாங்கள் கைது செய்து கொண்டு வந்த பத்சே பீமாவை அங்கேயே கொன்றுவிட்டு சென்றார்கள். மன்னு ராமை அவர்கள் தங்களுடனே சிந்தல்நர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் தனது கணவரான மன்னு ராமைத் தேடி சிந்தல்நர் வந்தார் மங்கலி. “காவல்நிலையத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தொலைவில் ஒரு இரத்த வெள்ளம் படிந்திருந்தது” என அவர் எம்மிடம் கூறினார். அந்த இடத்தில் தான் மன்னு சுட்டு கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் கிராமவாசிகளும் கூறினார்கள். காவல்துறை இந்த தாக்குதலில் 35 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு நக்சலின் உடல் கிடைத்துள்ளதாகவும் கூறியது. 35 நக்சல்கள் கொல்லப்பட்டதை மாவோவினர் மறுத்துள்ளார்கள். காவல்துறை கூறும் அந்த ஒரு உடலும் கண்டிப்பாக மன்னு ராமுடையதாகத்தான் இருக்கும்.
16 மார்ச், காலை 5 மணி, தர்மத்லா கிராமம்
நான்கு பக்கமும் இருந்த வருகின்ற படையினரின் சத்தத்தை கேட்டு அந்த கிராமம் அன்று விழித்தது. “எப்படி நீங்கள் நக்சல்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கலாம்? எப்படி அவர்களுக்கு சமைத்து கொடுத்தீர்கள்? என்று சத்தம் போட்டு கொண்டே படை சீருடையும், கருப்பு முகமூடியும் அணிந்த ஒருவர் மத்வி முக்காவை அவரது மண்குடிசையில் இருந்து வெளியே இழுத்து வந்தான். மற்றுமொரு படைக்குழு அவருக்கு பின்னால் தீக்குச்சிகளோடு நின்று கொண்டிருந்தது, இன்னொரு படையணியோ தீயை பற்றவைத்து ஒருபுறம் எறிந்து கொண்டிருந்தார்கள்.
ஓடி தப்பிக்க முடியாதவர்கள் படையினரிடம் மாட்டிக்கொண்டார்கள். அவர்களில் 30 வயதான் ஐம்லா சோகியும் ஒருவர். அவர்கள் என்னை துப்பாக்கி முனையில் வைத்து வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றார்கள். சற்று தூரம் சென்ற பின்னர் அவரை துப்பாக்கியின் கனமான பின்புறப்பகுதியின் மூலம் அடித்து தாக்கி, கற்பழித்துள்ளார்கள். பலமாக தாக்கப்பட்டதினால் சில நிமிடங்களில் அவர் மயங்கியுள்ளார். அன்று நடந்ததை அவர் நினைவு கூறுகையில் ஒருவர் கத்தியை எடுத்து அருகில் வந்ததாகவும் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்று தனக்கு நினைவில்லை என்றும் அவர் எம்மிடம் கூறினார். ஆனால் அவரது கண்ணிற்கு சற்று கீழே ஆழமான வெட்டுக்காயங்கள் உள்ளன. அவரால் தற்பொழுது சரியாக பார்க்க முடிவதில்லை. மயக்கம் தெளிந்து ஒருமணி நேரம் கழித்து அவர் எழுந்து பார்க்கும் பொழுது அவர் இடுப்பில் முடிந்து வைத்திருந்த வாழ்நாள் சேமிப்பான ரூ.8,000மும், தங்க காதணிகளும், மூக்குத்தியும் காணாமல் போயிருந்தன. மேலும் அவரது வீடும் தீக்கிரையாகி இருந்தது.
“நான் மயக்கமடைந்து விட்டதால் என்னை யார் கற்பழித்தார்கள் என்று என்னால் அடையாளம் காட்ட இயலவில்லை, எனக்கு நீதி கிடைக்க வாய்ப்புள்ளதா?, எனக்கு என்ன நடைபெற்றது என்று நான் இந்த உலகத்திற்கு கூற வேண்டும், என்னை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என கூறுகின்றார் ஐம்லா சோகி.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தர்மத்லா கிராமத்தை விட்டு பாதுகாப்பு படை வெளியேறியது. அவர்கள் செல்லும் போது தர்மத்லா கிராமவாசிகளான மத்வா ஆன்டாவையும், மத்வா ஐதாவையும் கயிற்றினால் கட்டி தங்களுடன் இழுத்துச் சென்றார்கள். இந்த இரண்டு மணி நேரத்தில் மொத்தம் 207 குடிசைகள் இடிக்கப்பட்டிருந்தன. மத்வி முகா தனது வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது தனது சில லுங்கிகளையும், வாழ்நாள் சேமிப்பான ரூபாய், 2,000த்தையும், 60 அரிசி மூட்டைகளையும், 20 விதை மூட்டைகளும் கொண்டிருந்த அந்த வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
ஒரு வாரத்திற்கு பின்னர் அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு போன்றவைகளும், எரிந்த குடிசைகளுக்கு ரூபாய். 3,000மும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “இரண்டு மாறுபட்ட அரசுகள் இங்கு உள்ளனவா? (ஒரு அரசு எங்கள் வீடுகளை இடித்து தீக்கிரையக்குகின்றது, மற்றொன்று நிவாரணமாக அரிசியும், பணமும் கொடுக்கின்றது), எப்படி இந்த இரண்டு அரசுகளும் ஒன்றாக இருக்க முடியும்?” என்று விவசாயியான கௌவாசி அத்மா கேட்கின்றார்.
______________________________________________________________________________
செய்தி/படங்கள் – நன்றி : துசா மிட்டல், தெகல்கா
செய்தி/படங்கள் – நன்றி : துசா மிட்டல், தெகல்கா
மொழியாக்கம்: நற்றமிழன்.ப