Friday, 12 August 2011

பாரதியின் தலித் விரோதம்


‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 7
இரண்டாவது அத்தியாயம்
dalit_women.jpg

‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்த்தமிருக்கும்.

‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு `வீர உணர்ச்சி` ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.
‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’
‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சர்க்ள் – வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.
‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’
இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,
‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’
பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத – ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் – அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும் – அவர்
 எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேரசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?
பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையான பார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
-தொடரும்

No comments:

Post a Comment