இன்றைய சினிமாவில் கதை சொல்லும் திறன் குறைந்துவிட்டது. எப்போதோ அத்திப் பூத்தது போல் ஒரு சில திரைப்படங்கள்தான் நம் மனதை கதை சொல்லும் திறனால் கட்டிப் போடுகின்றன.
இதற்குப் பொதுவான காரணம், சினிமாவை அணுகும் முறை மாறிவிட்டதுதான். பிரதானமாக சினிமாவை கதைச் சொல்லியாக யாரும் அணுகுவதில்லை. மாறாக, விறுவிறுப் பான காட்சிகள், சுவையான திருப்பங்கள், அதற்கேற்ற அலங்காரங்கள், பிரம்மாண்டங்கள் என்றுதான் அணுகுகிறார்கள். இதையும், கதையின் நாயகனாக நடிக்கும் நடிகனின் / நட்சத்திரத்தின் தன்மை மற்றும் அந்தஸ்துக்கேற்ப வடிவமைக் கிறார்கள். இதனால் கதை என்பது அங்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.
கதை என்பது கற்பனையில் உருவாகிறது என்று பலர் சொல்லலாம். இது ஒரு விதத்தில் உண்மை. இன்னொரு விதத்தில் உண்மையல்ல. கட்டுப்பாடற்ற கற்பனையில் உதிக்கும் கதைகள் பெரும்பாலும் நீர்த்துப் போயிருக்கும். கட்டுப்பாடோடு உருவாகும் கற்பனைகள் கூர்மையாக இருக்கும்.
கதைக்குக் கட்டுபாடுகளை விதிப்பவை எவை? கதையை உருவாக்குவதற்கு முன்னால், கதையின் கருப்பொருள், மையக் கருத்து, நோக்கம், யாருக்காக இந்த கதை? எந்தச் சூழலில் இதைச் சொல்லப் போகிறோம்? எத்தனை பேருக்குச் சொல்லப் போகிறோம்? எந்த ஊடகத்தின் வழியாகச் சொல்லப் போகிறோம்? சினிமாவாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு செலவழித்து சொல்லப் போகிறோம்? போன்ற கேள்வி களுக்கான விடைகளைத் தெளிவாகத் தீர்மானித்த பின்னரே கதைக்கான கற்பனையில் இறங்க மானது என்று. வேறு எந்தத் துறையில் இருப் பவர்களைக் காட்டிலும் கதாசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அதிக நேரம் உழைக்கிறார்கள். உழைக்கும் நேரத்தை அடிப்படையாக வைத்துத் தான் சம்பளம் தரப்படுகிறது என்றால், கதா சிரியன்தான் அதிகச் சம்பளம் பெறுபவனாக இருக்கவேண்டும். ஏனெனில், அவன் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறான்.
உறங்கும்பொழுதுகூட அவன் கனவில் உழைத்துக் கொண்டிருப்பான். இந்திய சினிமா வை, குறிப்பாகத் தமிழ் சினிமாவை பொறுத்த வரை குறைவாக ஊதியம் பெறுபவன் கதா சிரியன்தான். கதாசிரியனை குறைவாக மதிப்பிடு கிறார்கள் என்றால், அவர்கள் கதையை, கதையின் பங்கை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு நடிகனுக்கு ஐந்து கோடி தர தயாராக இருப்பார்கள். ஆனால், அந்த நடிகன் நடிக்கும் படத்திற்கு கதை எழுதுபவனுக்கு ஓரிரு லட்சம் தரவே தயங்குவார்கள். தமிழ் சினிமாவில் கதையின் வீழ்ச்சிக்கு இது வெளிப்படையான குறியீடு.
தமிழ் சினிமாவில் கதாசிரியன் என்ற பிரிவே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலும் இயக்குநரே கதையை உருவாக்குகிறார். சில நேரங்களில் வசனம் எழுதுவதற்கு மாத்திரம் எழுத்தாளர்களை நியமிப்பர். தமிழில் ஓரளவு நன்றாக எழுதும் எழுத்தாளர்கள் கூட இயக்கு நர்களின் கதைக்கு, காசுக்காக வசனம் எழுதும் அவல நிலையைத்தான் இங்குப் பார்க்க முடிகிறது.
உலக சினிமாவில் எழுத்தாளர்களுக்கு, கதாசிரியர்களுக்கு இன்னமும் ஓரளவு மரியாதை இருக்கிறதென்றால், அது நிச்சயமாக ஹாலிவுட் சினிமாதான். அங்குதான் ஆயிரக்கணக்கான கதைகளும், திரைக்கதைகளும் படத்தயாரிப்புக்காக தயாரிப்பாளர்களால், தயாரிப்பு நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. வாங்கப்படும் எல்லா கதைகளும், திரைக்கதைகளும் அங்கு திரைப்பட மாக எடுக்கப்படுவதில்லை. ஆனாலும், வாங்கப்படும் எல்லா கதைகளுக்கும், திரைக்கதை களுக்கும் பெரும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பல கதாசிரியர்கள் / எழுத்தாளர்கள் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் ஒரு கதைகூட படமாய் வந்திருக்காது. ஆனால், அவர்களின் சில கதைகளை, திரைக் கதைகளை ஸ்டுடியோக்கள் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருப்பதுதான் காரணம்.
நம் தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு கடைசியாகத் தேடுவது கதையாக இருக்கிறது. அல்லது நடிகனுக்குக் கதை என்ற பெயரில் எதையோ விவரித்துவிட்டு, அவர் சரி என்றவுடன் நடிகனின் சந்தை மதிப்பை வைத்து தயாரிப்பாளர் வருகிறார். பின்னர் மற்ற விஷயங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பின்னர் படப்பிடிப்புக்குச் சற்று முன்பு திரைக்கதை என்ற ஒன்று உருவாக்கப்படுகிறது. அல்லது திரைக்கதை இல்லாமலே படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. நிலைமை இப்படி இருந்தால், கதையின் வீழ்ச்சியும், கதை சொல்லும் திறனின் வீழ்ச்சியும் ஏன் இருக்காது? வணிக சினிமா என்ற பெயரிலே எடுக்கப்படும் படங்களில் கூட பத்தில் ஒன்பது படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், கதை மற்றும் திரைக்கதையின் வீழ்ச்சிதான்.
சமீபத்தில் மும்பையிலிருந்து ஒரு நண்பர் நகர வாழ்க்கையைச் சித்திரிக்கும் படங்களின் திரைப்பட விழா நடத்தவிருப்பதாகவும், அதற் காக சமீபத்திய தமிழ் படம் எதையாவது பரிந்துரைக்க முடியுமா? என்று மின்னஞ்சல் அனுப்பினார். யோசித்துப் பார்த்து ‘அங்காடி தெரு’ படத்தைப் பரிந்துரை செய்தேன். பின்னர் அப்படம் நகர வாழ்க்கையையா சித்திரிக்கிறது என சிறிய சந்தேகம். பிழைப்புத் தேடி நகரத்திற்கு வந்த சில இளைஞர் இளைஞிகளின் வாழ்க்கையை அல்லவா சித்திரிக்கிறது அது. ஆனால், படம் பெரும்பாலும் நகரத்தில்தானே நிகழ்கிறது என சமாதானம் செய்துகொண்டேன். பின்னர் படத்தைத் திரையிட்ட நண்பர், படம் பிரமாதமாக இருந்தது என்றும், நகரம் என்பதே நகரத்தின் வெளியேயிருந்து வருபவர்களால்தான் உருவாக்கப் படுகிறது என்பதை படம் அழகாகக் காட்டுவதாகச் சொன்னார்.
அவர் சொன்ன கருத்து எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. பல நேரங்களில் படங்களில் சொல்லப் படும் கதையை நாம் வாழ்க்கையின் கதையாகத் தான் பார்க்கிறோம். நல்ல கதை மட்டும் இருந்தால் போதுமா? சிறந்த கதைகள் மட்டுமே சிறந்த படங்களை கொடுத்துவிட முடியுமா? சிறந்தக் கருப்பொருள் மட்டுமே சிறந்தப் படங்களை கொடுத்துவிட முடியுமா?. இது போன்ற கேள்விகளை பல நேரங்களில் எதிர்கொண்டிருக்கிறேன்.
சில நண்பர்கள் / மாணவர்கள் மிகமுக்கிய மான பிரச்சினை குறித்து படம் ஒன்றை எடுக்க விரும்புவதாகச் சொல்வர். ஆனால், அதற்கு நல்ல கதைதான் கிடைக்கமாட்டேனென்கிறது என்பார் கள். அப்படியே அப்பிரச்சினை குறித்து சில கதைகள் கிடைத்தாலும், திருப்தியில்லை என்பார்கள்.
நாட்டையே உலுக்கிய, உலுக்கிக் கொண் டிருக்கிற விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் என்பது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையைக் குறித்து பல கட்டுரைகள் தொடர்ந்து இந்திய பத்திரிகை களிலும், இணையத்திலும் வந்து கொண்டிருக்கின்றன.
டாக்டர் பினாயக் சென் தற்போதைய விவசாய மற்றும் உணவு பிரச்சினையைப் பற்றி பேசும்போது மிக அழகாகச் சொன்னார், “நம் அருகே நம்மைத் தொடர்ந்து நாம் அறியா வண்ணம் ஒரு பெரிய பஞ்சம் நடந்து வந்து கொண்டிருக்கிறது.” இந்த வாக்கியத்தைப் படித் ததும் என்னுள் பல கதைகள் உருவாவதற்கான அடிப்படை கருத்துத் திட்டங்கள் தோன்றின.
40களில் இந்தியாவில், வங்காளத்தில் லட்சக்கணக்கானோர் இறந்துபோவதற்கு காரண மான வங்க பஞ்சம் (க்ஷநபேயட கயஅiநே) என்றறியப் பட்ட கடும் உணவுப் பஞ்சத்தைக் குறித்து பல புத்தகங்கள் இருந்தாலும், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சத்யஜித் ராயின் ‘அஷானி சங்கெட்’ என்கிற படம். இப்படத்தில் ஒரு சிறு கிராமத்திற்கு வரும் ஓர் இளம் படித்த பிராமண புரோகிதரின் கதையின் மூலம், மாபெரும் வங்கப் பஞ்சத்தை சத்யஜித் ராய் அழகாக உணர்த்துவார்.
புத்தரைப் பற்றிய எத்தனையோ படங் களைப் பார்த்திருக்கிறோம்; புத்தகங்களைப் படித்திருக்கிறோம். ஒரு நடுநிசியில் வாழ்க்கையின் ஸ்திரமற்ற தன்மையை உணர்ந்த சித்தார்த்தன், தனது இளம் மனைவியையும், குழந்தையையும் விட்டுவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேறு கிறான். பின்னர் முக்தி பெற்று புத்தனாகிறான்.
‘சித்தார்த்தன் தனது மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டு சென்றது சரி தானா?’ என்ற கேள்வியை பலர் கேட்டிருக் கின்றனர். இந்தக் கேள்வியின் அடிப்படையில் பல படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சித்தார்த்தன் செய்தது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாவிட்டால், நமக்கு ஒரு புத்தர் கிடைத்திருக்கமாட்டார் என்றுகூட ஒருவர் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேள்வியின் அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் அமைவது போன்ற ஒரு கதையை அற்புதமான தத்துவ விசாரணையாக, காதல் கதையாக, பான் நலின் என்ற இந்தியர் 2001ஆம் ஆண்டு ‘சம்சாரா’ என்ற படத்தை எடுத்தார். முழுக்க முழுக்க லடாக்கில் எடுக்கப் பட்ட இப்படம் 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்று, நாடு, மொழி, கலாச்சாரங் களைக் கடந்து எல்லா நாடுகளிலும் மக்கள் இப்படத்தை விரும்பி பார்த்தனர். பான் நலின் இதற்கு முன்பு பல ஆவணப்படங்களை எடுத்தவர். இதுதான் இவரின் முதல் முழுநீள கதைத் திரைப் படம். இவர் சொல்கிறார், “எந்தப் படம் எடுத் தாலும், அதற்காக முதலில் நான் தேடுவது, அதற் கான கதையை. அந்தக் கதையைத் தொடங்கு வதற்கான கருத்துத் திட்டத்தைத் (ஐனநய) தான்”.
இப்படத்திற்கான அவரது ஐனநய (கருத்துத் திட்டம்) என்பது ‘ஒருவன் உலகை, அன்பைத் துறந்து முக்தியைத் தேடுகிறான். ஒருத்தியோ உலகிலும் அன்பிலும் முக்தியைத் தேடுகிறாள். இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தால் எப்படி இருக்கும்?’
இந்தக் கருத்துத் திட்டத்திலிருந்துதான் அவருக்கு ‘சம்சாரா’ கதை பிறக்கிறது.
சினிமாவைப் பொருத்தவரை, அது ஆவணப் படமாக இருந்தாலும் சரி அல்லது கதைப் படமாக இருந்தாலும் சரி, அதற்குத் தேவை ஒரு கருப்பொருளோ அல்லது படத்தில் அலசப்படும் பிரச்சினையோ அல்ல. மாறாக, அதற்குத் தேவை ஒரு கதை. அந்தக் கதையைத் தொடங்க ஒரு மிபீமீணீ - கருத்துத் திட்டம்.
சினிமாவைப் பொருத்தவரை சரியான கருத்துத் திட்டம் கிடைப்பதுதான் பிரச்சினை. கதை கிடைத்துவிடும். கருப்பொருள் கிடைத்துவிடும். ஆனால் படத்திற்கான கதையைத் தொடங்க கருத்துத் திட்டம் (ஐனநய) கிடைக்காது.
நாம் சற்று முன்பு பேசிய இந்திய விவசாயி களின் தொடர் தற்கொலை என்பது ஒரு பிரச்சினைதான். அப்பிரச்சினை குறித்த ஆய்வில் உருவான கருத்துத் திட்டத்தில் உதித்ததுதான் சமீபத்தில் வெளியான பீப்லீ (நேரலை) - என்கிற திரைப்படம். பிரபல நடிகர் அமீர்கான் தயாரித்த இப்படம் பரவலாக பாராட்டப் பட்டாலும், மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. காரணம், படத்தில் பிரபல நடிகர்கள் இல்லாதது அல்ல. படத்தின் கதையும்தான். விவசாயியின் தற்கொலை என்கிற முக்கியப் பிரச்சினையை ஒருவித நையாண்டித்தனத்தோடு எடுத்திருப்பது கூட பிரச்சினை அல்ல. மாறாக, இந்திய தனியார் தொலைக்காட்சிகள் தங்களிடையே உள்ள போட்டி காரணமாக எப்படி இப்பிரச்சினையை வியாபார பொருளாக்குகிறது என்பதையும் சேர்த்து நையாண்டி செய்ததால் முக்கிய பிரச்சினை படத்தில் நீர்த்துப் போய் விட்டது. கதையும் வலுவிழந்து விட்டது.
சினிமாவைப் பொருத்தவரை கருப்பொருளுக்கோ, கதைகளுக்கோ கூட பிரச்சினையில்லை. ஆனால், கதையை எப்படி வடிவமைப்பது? எப்படி கொண்டு செல்வது? என்பதுதான் பிரச்சினை. எனவே, கதை, திரைக்கதைக்கான தொடக்கம் என்பதே கதைக்கான சரியான கருத்துத் திட்டம் தான்.
ஒரே பிரச்சினையை அல்லது கருப் பொருளைக் கொண்டு பல படைப்புகள் வரு கின்றன. சில படைப்புகள் மாத்திரம் நம்மை ஏன் அதீதமாக கவருகின்றன. காரணம், அப்படைப்பின் கதையில் உள்ள கருத்துத் திட்டம் தான்.
பல குறும்பட அல்லது வரைபட போட்டிகளில் தலைப்பு அல்லது கருப் பொருள் தரப்படும். பல நூறு பேர் தங்கள் படைப்பு களை அனுப்புவர். ஆனால் ஒரு படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். எல்லா படங்களும் ஒரு தலைப்பை, ஒரே கருப் பொருளைத்தான் கை யாண்டுள்ளன. ஆனால், அந்த ஒரு படத்துக்கு மட்டும் ஏன் பரிசு கிடைக் கிறது? காரணம், அப்படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்துத் திட்டம் தான்.
பல நேரங்களில் படைப்பாற்றல் என்பதே மிகச்சிறந்த ஐடியாக்களை பெறுவதில்தான் தொடங்குகிறது. பல விளம்பர நிறுவனங்களில் மிகச்சிறந்த கருத்துத் திட்டங்களைத் தருவதற் கென்றே ஆட்கள் இருப்பர். இவர்களுக்கு நல்ல சம்பளம் இருக்கும். தேவைப்படும் நேரத்தில் ஒரு பொருளை விளம்பரப்படுத்த கருத்து திட்டங் களைத் தருவது மட்டும்தான் இவர்களின் வேலை. அதுபோல் சில பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் கருத்துத் திட்டங்களை தருவதற் கென்றே ஆட்களை வைத்திருப்பர். இவர்களை படைப்பாற்றல் குழு (ஊசநயவiஎந வநயஅ) என்ற ழைப்பது உண்டு.
ஒரு முறை இப்படித்தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் புகழ் பெற்ற பேராசிரியரைப் பார்த்து கேட்டார், “என் பத்திரிகையில் வேலை செய் பவர் களுக்குச் சிறந்த கருத்துத்திட்டங்களை வகுப்பதற் காக அவர்களுக்கு ஏதாவது பயிற்சி வகுப்பு எடுக்க முடியுமா?”
பேராசிரியரோ “படைப்பாற்றல் என்பது தானாக வருவது. இயற்கையாக இருக்க வேண்டி யது. அதற்காகப் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டுமா என்ன?” என பதிலுரைத்தார்.
பேராசிரியர் அப்படி சொல்லிவிட்டதும் மிகச்சிறந்த கருத்துத் திட்டங்களைப் பெற வழி முறை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வி அவர் மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது. சிறந்த படைப்பாளிகள் எப்படி வேலை செய்கின்றனர் என்பதைக் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சிறந்த படைப்பாளிகள், சிறந்த கருத்துத் திட்டங்களை தருபவர்களின் வேலை முறைகளில் ஒரு பொதுத்தன்மை இருப்பதை உணர்ந்தார். இறுதியாக, படைப்புத்திறன் என்பது அவரவரர் களின் தனித்தன்மையைப் பொறுத்து இருந்தாலும், அவர்களின் பணியாற்றும் முறையில் உள்ள சில ஒத்த தன்மைகளைக் கொண்டு சில வழிமுறைகளை வகுத்தார். அவ்வழிமுறைகளை மேலும் பகுத் தாராய்ந்து சிறந்த கருத்துத் திட்டங்களைப் பெற அடிப்படையான நான்கு செயல்திட்டங்ளை வகுத்தார். பின்னர் இந்த நான்கு திட்டங்களை விளக்கி அவர் உரை நிகழ்த்தினார். பின்னர், அவரின் அந்த உரைக்காக பல நிறுவனங்கள் அவரை போட்டி போட்டுக் கொண்டு அழைத்தன. படைப்புத் தொழிலை ஓரளவு சிறப்பாகச் செய்ய விரும்பும் எல்லோருமே தெரிந்தோ தெரியா மலோ இந்த நான்கு திட்ட அடிப்படையில்தான் வேலை செய்கின்றனர். அதை விளக்கிச் சொல் லும்பொழுது, இவ்வளவுதானா? எனத் தோன்றும். ஆனால், படைப்புத் தொழில் என்பதும் கடும் உழைப்பு என்பதைப் புரிய வைக்கும்.
அந்த நான்கு செயல் திட்ட முறைகள் என்ன?
முதல் செயல்திட்டம் “விவரங்களைத் திரட்டுவது”.
எந்த ஒரு கருப்பொருளை அல்லது தலைப் பை எடுத்துக் கொண்டாலும் முதலில் செய்ய வேண்டியது, அது குறித்த விவரங்களைத் திரட்டுவது.
விவரங்களைத் திரட்டுவதற்கு இன்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இன்றைய நவீன உலகில், கணினிக்கும் இணையத்துக்கும் பழக்கப் பட்டவர்கள் முதலில் விவரங்களைத் தேடுவது கூகுளில்தான் (ழுடிடிபடந). இன்று இணையத்தில் கிடைக்கும் விவரங்களை யெல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமானால், நமக்கு வாழ்நாள் போதாது. எனவே, இன்று இணையத்தில் இருந்து தேவையான, சரியான விவரங்களைப் பெற ஒருவித பக்குவமும், பழக்கமும் தேவைப் படுகின்றன.
அடுத்தபடியாக அந்தக் கருப்பொருள் / தலைப்பு குறித்த விவரங்களைப் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் தேடுவது. நமக்கு அது குறித்து தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் கேட்டு தகவல் மூலங்களை பெறுவது. சிலர் அந்த கருப்பொருள் / தலைப்பு குறித்து ஏற்கனவே நிறைய அறிந்து விற்பன்னர்களாக இருப்பர். அத்தகைய வர்களைத் தேடிப் பிடித்து அவர்களோடு உரை யாடுவது.
தகவல்களைப் பெற இன்னொரு சிறந்த முறை களப்பணி (குநைடன றுடிசம) ஆகும். நேரடியாக களத்திற்கே சென்று அது குறித்து தகவல்களைத் திரட்டுவது, ஆய்வது. இந்த முறையில் பல நேரங்களில் சுவையான தகவல்கள் கிடைக்கும். உங்கள் படைப்புத் திறனின் ஆரம்பப் புள்ளியைக் கூட இங்கே கண்டெடுக்கலாம்.
உதாரணமாக, பெருகி வரும் விவாகரத்து குறித்து ஓர் ஆவணப்படமோ அல்லது கதைப் படமோ எடுக்க நினைக்கிறீர்கள். அதற்குப் புத்தகங் களும், இணையங்களும் ஓரளவு பயன்பட லாம். ஆனால் நேரடியாக புதிய விவரங்களை உள் வாங்கிக் கொள்ள களப்பணியே சிறந்தது. ஒரு விதத்தில் பார்த்தால் புத்தகங்களிலும், பத்திரிகை களிலும் கிடைக்கும் விவரங்கள் கூட ஏற்கனவே சிலர் செய்த களப்பணியின் விளைவுதான். எனவே, விவரங்களைத் திரட்ட மிகச்சிறந்த வழிமுறை களப்பணிதான்.
இன்று பல விவரங்களை வீடியோக்களிலி ருந்தும் ஒலிநாடாவிலிருந்தும் கூட பெறலாம். நீங்கள் தேடும் கருப்பொருள் / தலைப்பு குறித்து ஏற்கனவே சிலர் ஆவணப்படங்களோ, கதைப் படங்களோ எடுத்திருக்கலாம். அதையும் தேடிப் பிடித்து பார்க்கவேண்டும்.
ஒலி - ஒளி படைப்புகளும் இன்று தகவல்களைப் பெறுவதற்கான மூலங்களாகி விட்டன.
தகவல்களைத் திரட்டுவது என்கின்ற இந்த முதல் கட்ட பணி அத்தனை சுலபமானதல்ல. காரணம், இது சுவையான பணி அல்ல. பல நேரங்களில் சலிப்பைத் தரும். தகவல்களைத் திரட்டும்பொழுது, நமக்குத் தேவைப்படதாத, ஆர்வம் இல்லாத பல தகவல்களைக் கடந்து போக வேண்டியிருக்கும். ஆனால், இதை ஒருவர் செய்தே ஆகவேண்டும். தகவல் திரட்டுவதில் ஒருவர் பாரபட்சம் பார்க்கக்கூடாது. நம் ஆர்வத்துக்குட் பட்டதாக இருக்கிறதோ, இல்லையோ எல்லா வற்றையும் திரட்டியே ஆகவேண்டும். காரணம், மிகச்சிறந்த படைப்புகளைக் கொடுத்த படைப் பாளிகள் எல்லாம் அப்பணியை அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ரிச்சர்ட் அட்டன்பரோ ‘காந்தி’ படத்தை எடுத்தபோது வெறும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் படித்து எடுத்து விடவில்லை. இப்படி பல விவரங்களைத் திரட்டி யதில்தான் அப்படத்தின் படைப்புத் தன்மையின் பின்புலம் உள்ளது. பல நேரங்களில் எல்லா தகவல்களையும் திரட்ட உங்களுக்கு நேரமோ, சக்தியோ இல்லாமல் போகலாம். அந்த நேரங்களில் நீங்கள் மற்றவர் களை வைத்தும், உதவியாளர்கள் மூலமும் தகவல் திரட்டலாம். ஆனால், திரட்டிய தகவல்களை நீங்களும் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
நான் ஆவணப்படங்கள் எடுக்கின்றபோதும் இப்படித்தான் செய்யவேண்டும் என்று தெரியாமலேயே அதே வழிமுறையை ஓரளவு பின்பற்றியிருக்கிறேன்.
ஒரு முறை கேரள அரசுக்காக ‘குறைந்து வரும் பிறப்பு விகிதம் - கேரளாவிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது’ எனும் தலைப்பில் ஆவணப் படம் எடுக்க என்னை அழைத்தார்கள். தலைப்பே எனக்குச் சலிப்பூட்டியது. இது குறித்து எந்த விவரமும் தெரியாது. அதேநேரத்தில் இரண்டு மாதங்களுக்குள் படத்தை எடுக்க வேண்டும். எனக்கு ஆலோசகர்களாக இரு பொருளாதார வல்லுநர்கள் தரப்பட்டனர். முதலில் அவர்களோடு பேசினேன். அவர்களிடமிருந்து படிக்க வேண்டிய புத்தகங்கள், அறிக்கைகள், சந்திக்க வேண்டிய நபர்கள் போன்ற விவரங்களைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் அடுத்த பத்து நாட்கள் தினசரி 15 மணி நேரம் முக்கியமான நூலகத்தில் புத்தகங்கள், அறிக்கைகளைப் படிப்பதிலும், சில சமூக வல்லுநர்கள், பொருளாதார விற்பன்னர் களைச் சந்திப்பதிலும் செலவிட்டேன். இப்பணி பல நேரங்களில் மிகுந்த சலிப்பூட்டுவதாக இருந்தது. ஆனாலும், எடுத்துக்கொண்ட பணியின் பொறுப்புணர்வு காரணமாக செய்து முடிக்க வேண்டியதாயிற்று. பத்து நாட்களுக்குப் பிறகு நான் திரட்டிய தகவல்களைப் படித்தபோது, இதை வைத்துக் கொண்டு நான் எப்படி படம் எடுப்பது என்ற மலைப்புதான் வந்தது.
ஆனால், ஒரு விஷயம். எனக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு என்னவென்றே புரியாதிருந்த எனக்கு, இப்போது மெல்ல புரிய ஆரம்பித்தது. இதுபோன்று தகவல்களைத் திரட்டுவதற் கும் படைப்புத் திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கலாம். இப்படி செய்வதன் மூலம் ஒருவனுக்குச் சிறந்த கருத்துத் திட்டங்கள் வந்துவிடுமா என்ன? என்று சிலர் சந்தேகிக்கலாம். ஆனால், அடுத்த மூன்று கட்டங்களை விளக்கும்போது இந்தப் பணியின் முக்கியத்துவம் குறித்து உங்களுக்குப் புரிய வரும்.
அடுத்த மூன்று கட்டங்கள் குறித்து வரும் இதழில் பார்ப்போம்.
No comments:
Post a Comment