Tuesday 30 August 2011

வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்.


ஆண் தெய்வமான பெருமாள் வாகனங்களில் ஏறி ஊர் சுற்றுவார். ஆதிசேஷ வாகனத்தின் மீதேறி கம்பீரமாக வருவார், பின் அனுமார் வாகனம், அடுத்தது யானை வாகனம். யானை அம்பாரியில் ஜம்மென உட்கார்ந்து வீதிகளை மேளதாள வாத்தியங்களை ஜோராக ரசித்தபடி ஆடியபடி சுற்றி வருவார் பெருமாள். அப்படியென்றால் பெண் தெய்வமான பிராட்டி? அதற்குமுன் பெண் தெய்வம் வந்த கதையைப்பார்ப்போம்.வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் என்றது வேதம்.
ஆனாலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது.

அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால் சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ‘அம்மன்’ என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

அதில் ஒன்று சொல்கிறேன் பாருங்கள். இந்த உற்சவத்துக்கு பேர் பாரிவேட்டை உற்சவம், இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.அப்படி என்ன உற்சவம்? வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம் நடக்கும்.

உற்சவ தினத்தன்று குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது, நாதஸ்வரம் இசைக்கிறது, குதிரை வாகனம் ஆடிஆடி சென்று கொண்டிருக்கிறது. பெருமாள் குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல் ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள். கொஞ்சதூரம் போன பிறகு மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்? அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் வாத்தியத்தையும் நிறுத்திவிட்டனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள். இரவு அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் தங்குகிறார்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்? பெருமாளுக்குப் பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகிறது. அதனால் என்ன நினைக்கிறார் என்றால் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியா சுற்றிவிட்டு வரலாமே என்று தன்
குதிரைமேல் ஏறுகிறார். கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.

இதன்பிறகு மறுபடியும் அந்த உற்சவக் காட்சிகளை சொல்கிறேன் பாருங்கள். காலையில் அதே குதிரையில் ஏறி கோயிலுக்கு வருகிறார். ஆடிவரும் குதிரையோடு அப்படியே விடுவிடுவென கோயிலுக்குள் பெருமாள் நுழைவதற்காக வர கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி. “எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி? அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே ஒரு தூதுவர்.

அப்படியும் பிராட்டியார் சொல்கிறார் “கற்பூரம் காட்டும்போது பார்த்தேன், இன்னமும் காயாத ஈர சந்தனம் அவர் மார்பிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே அந்த சந்தன வாசனை வேறு ஏதோ ஒரு அந்நிய வாசனைபோல் உள்ளது. அவர் எங்கே போய்விட்டு வந்தார்? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவரை உள்ளேவிட முடியாது. பெருமாள் மீது சந்தன வாசனை இதனால் பிராட்டிக்கு சந்தேக வாசனை. ரொம்ப நேரத்துக்குப் பிறகு நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி இது உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து சேவிக்கிறார்கள். இதில் சேவிக்க என்ன இருக்கிறது? ஆனால், இங்கு ஞாபகப்படுத்த ஒன்று இருக்கிறது. வேதத்தில் ஒரு வாக்கியம் வருகிறது என்று கூறியிருந்தேனே. கணவன் - மனைவியிடம் சொல்கிறான்... “நீ உன்னை எப்போதும் அழகானவளாக உன்னை வைத்துக் கொண்டிருந்தால் நான் வெளியே ஏன் போகப்போகிறேன்?” என்று. இதே போல்தான் 'பெருமாள் இந்த உற்சவத்தில் பிராட்டியாரிடம் சொல்கிறார். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த உற்சவத்தை குடும்பத்தோடு வந்து சேவிக்கிறார்கள். இந்த உற்சவத்திலே இன்னொரு விசேடம் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால் பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டும். தெய்வங்களிடையிலேயே இப்படித்தான் நடக்கிறது.

நன்றி : அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்).

No comments:

Post a Comment