Saturday, 13 August 2011

 சுதந்திரத்திற்கு பிறகும், சிறிதளவும் மாற்றமில்லை - தஞ்சை வெங்கட்ராஜ்


சென்னை மயிலாப்பூர் ஹாமில்டன் பாலம் அருகில் 05-12-2010 அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய  ப.சிதம்பரம் "இரட்டைக் குவளை முறை இன்னும் பல கடைகளில் இருக்கிறது. தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை ஒழிய தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். இப்படிக் கூறியவர் இந்த நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

சுதந்திரம் பெற்றது முதல் ஆதிக்க சாதிகள் தவறாமல் செய்துவருவது தலித்துகளை தீண்டாமைக் கொடுமை மூலம் ஒடுக்குவதும், அவர்களது சமூக முன்னேற்றத்தை தடுப்பதும், அவர்களது அரசியல் வளர்ச்சியை எப்பாடு பட்டாவது கெடுப்பதுமே! இன்றும் கூட ஒரு சதவிகிதம் கூட தலித்துகளின் சமூக பாதிப்புகள் குறையவில்லை என்பதுதான் இந்த நாட்டின் தலையான பிரச்சினை. தலித் மக்கள் அனுபவித்து வரும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொடுமைகள் வெளிப்படையானவை! தீண்டாமைக் கொடுமைகள் நடக்காத பகுதி எதுவுமே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இது 'ஜனநாயக நாடா' அல்லது 'சாதி வெறி நாடா' என்று தலித் இளைஞர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் எந்த பதிலும் இல்லை.

"சமூக நீதி" பற்றி பேசும்போது "தலித் அல்லாதாருக்கான நீதி மட்டும்தான் இது" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டுப் போகலாம். அந்த அளவிற்கு தலித்துகள் அனைத்து வகைகளிலும் புறக்கணிக்கப் படுகின்றனர் அல்லது ஏமாற்றப் படுகின்றனர்!  "உங்களை நசுக்கவும், அழிக்கவும் வருபவர்கள் என் பெயரையும், படத்தையும் கூட பயன்படுத்துவார்கள்! உஷார்!" என்று பாபாசாஹேப் அம்பேத்கர் தலித் இளைஞர்களை எச்சரித்தார். எப்படிப்பட்ட மாமேதை அவர்? இந்த நிலையை அன்றே உணர்ந்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆதிக்க சாதிகள் தலித்துகளை எள்ளளவும் வளர அனுமதிக்க மாட்டார்கள் என்பது அவருக்கு அன்றே தெரிந்திருக்கிறது!

இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள்...என்று எந்த ஒரு தெளிவான நிலையும் தலித் இளைஞர்களின் எதிர்காலத்தில் இல்லை என்பது நம்மை கவலை கொள்ள வைக்கிறது. ஆனால், தலித் இளைஞர்களின் நுண்ணறிவும், கடின உழைப்பும், பரந்த மனமும், சாதிக்கத் துடிக்கும் சிந்தனையும் சமூகத்தால் சரியாக மதிக்கப் படுவதில்லை. நானறிந்த வரையில், தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும், அதிகாரிகளும், டாக்டர்களும், பேராசிரியர்களும் புரிந்துவரும் சாதனைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இது ஆதிக்க சாதிகளை மேலும் கோபமடைய வைக்கிறது. எந்த ஒரு துறையிலும், தலித்துகளை நுழைய விடாமல் இருப்பது எப்படி என்று ஆராய்ச்சியே நடக்கிறது! தீண்டாமை அவர்களுக்கு சாதியில் மட்டுமில்லை; அரசியலில், கல்வியில், அறிவுசார் துறைகளில், இலக்கியத்தில் நிரந்தரமாக நிலவுகிறது. இந்த இழி நிலை மாற தலித் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

"நான் தலித்துகளுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்திருக்கிறேன்" என்று சொல்லாத அரசியல் தலைவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கட்சியில், அமைப்புகளில் ஒரு சாதி இறுக்கமும், தீண்டாமையும் நிரந்தரமாக நிலவும் என்பது தெளிவாகத்தெரியும். டாக்டர் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற தலைவர்கள் அரசியலில் வளர்ந்தால், அவர்களை எப்படி தரம் தாழ்த்திப் பேசுவது, அவர்கள் பெயரை எப்படி கெடுப்பது, அவர்களை எப்படி மோசமாக சித்தரிப்பது என்பதெல்லாம் ஆதிக்க சாதியினருக்கு அத்துப்படியான விஷயம்!. நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர் மாயாவதி. அவரை எதிர்க்க, பலவீனப் படுத்த "அனைத்து" கட்சியினரும் "இணைந்து" செயல்படுவது நம் தலித் தலைவர்களின் அரசியல் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்றும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை ஒரு ஆதிக்க சாதிப் பெண் காதலித்து அவர்கள் திருமணம் செய்யப் போனால், அது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. பொதுவாகவே, தலித் இளைஞர்கள் நேரடியாகப் பேசுபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், அறிவோடு சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, மற்ற சாதி பெண்கள் அவர்களை காதலிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக, பிள்ளைமார், முதலியார், அய்யர், அகமுடையார், செட்டியார், ரெட்டியார், நாயுடு போன்ற உயர் சாதிப் பெண்கள் அவர்களை விரும்பி, திருமணம் என்கிற நேரம் வரும்போது, தலித் இளைஞருக்கு பலத்த நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அந்த நேரங்களில், தலித் இளைஞர்கள் எந்த ஆதரவும் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
"நம் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கவும், நம்மை மேலும் பலவீனப்படுத்தவும்  ஆதிக்க சாதிகள் தயாராக இருக்கின்றன. தலித் அரசியல் இயக்கங்கள் அனைத்திலும் உள்ள சிந்தனையாளர்கள் இணைந்து கட்சி சார்பற்ற ஒரு சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முயற்சிகள் செய்து வருகிறேன். தலித்துகளின் இட ஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதுவே உண்மையான சமூக நீதி" என்கிறார் தொழிற்சங்க தலைவரும், பத்திரிக்கையாளரும், அரசியல் அறிஞருமான கவிஞர் தா.மனோகரன். "ஒவ்வொரு தனியார் மற்றும் பொது ஆலயத்திலும் கண்டிப்பாக ஒரு தலித் அர்ச்சகர் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், இந்த கோரிக்கையை தலித்துகள் தீவிரமாக வலியுறுத்த வேண்டும். இதற்காக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிப் போராட வேண்டும்" என்கிறார் ஒரு மூத்த சமூக ஆர்வலர்!

தலித்துகளுக்கு எதிரான ஜாதிய ஒடுக்குமுறையையும், வன் கொடுமையையும் கட்டுப்படுத்தவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டம் தலித் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாக இல்லை என்பது கவலைக்கு உரியது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பு ஒன்றை டெல்லியிலுள்ள தலித் சமூக நீதி இயக்கம் உருவாக்கியுள்ளது. "இந்த சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படக்கூடியதாக திருத்தம் செய்யப் பட வேண்டி உள்ளது" என்று அந்த இயக்கம் பரிந்துரைத்துள்ளது.
"இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்துக்குச் எடுத்துச் செல்வதற்கு கண்காணிப்புக் குழு அமைக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள், இந்திய தண்டனை சட்டத்தில் அளிக்கப்படும் தண்டனைகளை விட அதிகமாக இருக்கும்விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிருந்தா காரத் கூறுகிறார். மேலும், மதம் மாறியவர்களுக்கும் இச்சட்டம் செல்லும் விதமாகவும், இதுதொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்போரைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பிருந்தா காரத் வலியுறுத்துகிறார். ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொண்டு போராடும் தலித் போராளிகளை "வன்முறையை கையாள்கிறார்கள்; சாதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று ஏசுவது ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு. இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் ஆதிக்க சாதியினரின் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.

ஆராய்ச்சியாளராக, அறிஞராகபேராசிரியராகவழக்குரைஞராக,எழுத்தாளராக, உலகின் தலை சிறந்த கிளர்ச்சியாளராகஅரசியல் சட்ட மேதையாகபுத்தரின் அறிவார்ந்த சீடராகதாழ்த்தப்பட்டமக்களின் ஒப்பற்ற தலைவராக, சரித்திர நாயகனாக பல்வேறு பரிமாணங்களுடன் இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் தோன்றி மறைந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் நிலை மாறாமல் இருப்பது ஜனநாயாக சிந்தனையாளர்களுக்கு கவலை அளிக்கிறது!

No comments:

Post a Comment