“அது எனக்கு முக்கியமான விஷயமாகப்பட்டது. அது ஆர்வத்துக்குரிய விஷயமாக இருந்தது. எனவே, அதை நான் பதிவு செய்ய விரும்பினேன்’’ என பல நேரங்களில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
‘பதிவு செய்வது’ என்பது ஆவணப்படங்களின் அடிநாதமாகவே உள்ளது. எதற்காகப் பதிவு செய்கிறோம்? பிறருக்குப் பயன்பட வேண்டும். பின்னாளில் பயன்படவேண்டும். காலத்தை வென்று சான்றாக இருக்க வேண்டும்... இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.
கடந்த கால வாழ்வு, கடந்த கால அரசியல், கடந்த கால மனிதர்கள்... பற்றிய ஆவணப்பதிவுகள் எதுவுமே இல்லாமல் போயிருந்தால் நிகழ்காலமே அர்த்த மற்றதாய்ப் போயிருக்கும்.
குகை சுவர்களில் தொடங்கிய பதிவுகள் நூறாண்டுகளுக்கு முன் சினிமா வந்த பின் சினிமாவிலும் தொடர்ந்தது.
ராபர்ட் பிளஹார்த்தியின் ‘நானுக் ஆஃப் தி நார்த்’ ஆவணப்படம் இன்றளவும் நூறாண்டு களுக்கு முன்பிருந்த எஸ்கிமோக்களின் வாழ்வு பற்றி அறிய உதவும் சாதனமாக உள்ளது.
‘ட்ரையம்ப் ஆஃப் எ வில்’ ஆவணப்படம் மனிதகுலத்துக்கே எதிராய் அமைந்த ஹிட்லரின் எழுச்சியைக் காட்டும் ஆவணமாக அமைந்தது.
எழுத்து மற்றும் ஓவியம் மூலமாக பல நூறு ஆண்டுகளாகப் பதிவுகள், ஆவணப்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் சினிமாவில் செய்யப்பட்ட ஆணவப் பதிவுகளின் தாக்கம் இந்த நூற்றாண்டுக்கே உரிய ஒன்றாகும்.
இப்போதும் உலகின் பல்வேறு இடங்கள், பண்பாடு குறித்த என் அண்மை அறிவு என்பது நான் பார்த்த பல ஆவணப்படங்கள் மற்றும் கதைப் படங்களிலிருந்து கிடைத்ததாகவே உள்ளது.
1980களில் ஜெர்மனி டெலிவிஷனுக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத் தொடர் ஒன்றை பார்க்க நேர்ந்தது. ‘ஜெர்மன் கிராமப்புற வாழ்வு’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அத்தொடர் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முதியவர்களின் பேட்டியாகும். ஒவ்வொரு பேட்டியும் 40 நிமிடங் கள் ஓடக்கூடிய தொகுக்கப்பட்ட பேட்டியாகும். அந்த 40 நிமிடங்களில் பேட்டியளிக்கும் நபர் தங்கள் கிராம வாழ்வு, அவர்கள் சிறுவர் / சிறுமியாக இருக்கும்போது எப்படி இருந்தது, பின்னர் இளைஞர்களாக இருந்தபோது எப்படி இருந்தது, தற்போது எப்படி அது மாறியிருக்கிறது என்பதை யெல்லாம் ஒரு தேர்ந்த கதைசொல்லி போல விவரிப்பர். இடை இடையே அவர்கள் பேசு வதற்குச் சம்பந்தமான பழைய புகைப்படம் இருப்பின் அது காண்பிக்கப்படும்.
வெறும் பேட்டிகளையும், ஒரு சில புகைப் படங்களையும் மட்டுமே கொண்டு மிக எளிமை யான ஒன்று போல் தோற்றமளிக்கக்கூடிய வகை யில் தயாரிக்கப்பட்ட இத்தொடர் என்னுள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. என் மாணவப் பருவத்தில் பார்த்த அத்தொடர், இன்றள வும் நான் அந்த கிராமங்களுக்கெல்லாம் சென்று வந்தது போல் ஓர் உணர்வு.
இத்தொடரின் சிறப்பே, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, சரியான கேள்விகளின் மூலம் அவர்களைப் பேசவைத்து, அதன் மூலம் லட்சக் கணக்கான பார்வையாளர்களை அவர்களின் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான்.
எந்த ஒரு பதிவுமே, உண்மையாக, ஆழமாக, காட்சி மற்றும் ஒலிரீதியாக செய்யும்பொழுது எத்தனை அழகாக இருக்கும் என்பதை முதன் முதலாக உணர்ந்தேன்.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், காட்சி மற்றும் ஒலிப்பதிவுகள் என்பது பண்பாட்டு சூழலில் மட்டுமல்லாமல் பல்வேறு பயன்பாடு களுக்கும் உதவுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலான குற்றங்களைக் கண்டுபிடிக்க, சிசிடிவி மற்றும் செல்போன் பதிவுகள்தான் பயன்படு கின்றன.
ஆவணப்படங்கள் குறித்து பேசும்போது, இந்த டிஜிட்டல் யுகத்தில் அது எத்தனை சக்தி வாய்ந்த, அற்புதமான ஆயுதமாக இருக்கும் என்பதை பண் பாட்டுத் தளத்தில் பணிபுரிபவர்கள் பலர் உணர வில்லை என்றே தோன்றுகிறது.
‘கிராமப்புற வாழ்வு’ பற்றிய ஜெர்மானிய தொடர் போன்று, இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல ஆவணப்படங்களை நம் நாட்டில் உருவாக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகள் கிட்டதட்ட இல்லை என்றே சொல்லவேண்டும். காரணம், அதன் முக்கியத்துவத்தை நாம் உணராததே.
தமிழ்நாட்டில் அற்புதமான மனிதர்களைப் பற்றிய - கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிவியல் மேதைகள் பற்றிய ஆவணப்பட பதிவுகள் அங்கொன்றும் இங்கொன் றுமாக ஒரு சிலவே உள்ளன. அவையும் அரை குறையான பதிவுகளாகவே உள்ளன.
பெரியாரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவரைப் பற்றிய சரியான ஆவணப்படங்கள் ஏதும் இருப்பதாக தெரிய வில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் முக்கியமான நிகழ்வுகளைத் திரைப்பட கேமரா வில் யாரும் பதிவு செய்யாதது. இன்னொன்று, ஏற் கெனவே உள்ள புகைப்படங்கள், மற்ற ஆவணங் களைக் கொண்டு நேரடியாகவோ, புனையப் பட்டோ ஆவணப்படம் எடுக்க தற்போது யாருக் கும் ஆர்வம் இல்லாதது.
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் மக்கள் தலைவர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் வெகு குறைவு. காந்தி, நேருவைப் பற்றிக்கூட முறையான ஆவணப்படம் கிடையாது. காந்தியைப் பற்றிய எல்லா திரைப் படப் பதிவுகளும் பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசால் எடுக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.கே.செட்டியார் தன் சொந்த முயற்சியில் காந்தியைப் பற்றி எடுத்த திரைப்பட பதிவுகள்தான் இன்று காந்தியைப் பற்றிய ஒரே ஆவணப்படமாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் களாக இருந்த பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்., பி.ராமமூர்த்தி போன்றோரைப் பற்றிய எந்த ஆவணப்படமும் இல்லாதது துரதிருஷ்டமே.
மார்ட்டின் லூதர் கிங் பற்றி பல ஆவணப் படங்கள் உள்ளன. அவரது வாழ்வை முழுமை யாகக் காண்பிக்கக்கூடிய ஐந்தரை மணி நேரம் ஓடக்கூடிய ஓர் ஆவணப்படத்தைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் முதன்முதலாக மக்கள் முன் ஆற்றிய உரைகூட அதில் இடம் பெற்றிருந் தது. அவர் அந்த முதல் உரை ஆற்றியபோது அவர் பிரபலமாகாத தலைவராகத்தான் இருந்தார். ஆனாலும், அவரது முதல் பேச்சு முழுமையாகத் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. யாரோ அவரின் முக்கியத்துவம் அறிந்து அவரின் முதல் உரையைத் திரைப்பட கேமராவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒருவரின் வாழ்வும் நிகழ்வுகளும் அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உரியது என்கின்ற உணர்விலிருந்துதான் பதிவு செய்யும் பழக்கமே துவங்குகிறது. நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் இதன் வெளிப்பாடுதான். பல அரிய மனிதர்களின், கலைஞர்களின், எழுத்தாளர் களின், ஊர்சுற்றிகளின் நாட்குறிப்புகள் இன்று பொக்கிஷ இலக்கியங் களாக, ஆவணங்களாக இருப்பது நாம் அறிந்ததே.
இன்றைய டிஜிட்டல் உலகில் அத்தகைய பதிவுகள் ஒரு விநோத நிலையை எட்டியுள்ளன. இன்று ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களில் சிலரின் குறிப்புகளை, மேதாவித்தனங்களை, சுய தம்படங்களைப் பார்க்கும்போது, பதிவுகள் பிறருக்காக, பிற்காலத் திற்காக என்பது போய் சுயஅரிப்புக்காக என்பது போல் காட்சியளிக்கிறது. டிஜிட்டல் யுகத்தின் வேதனைகளில் இதுவும் ஒன்று. அதேநேரத்தில் டிஜிட்டல் யுகத்தின் பல பதிவுகள், ஆவணப்பட பதிவுகள் பல அற்புதங்களையும் கொண்டுள்ளன. அவை சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய ஒன்று.
மாணவர்களுக்கான வீடியோ ஆவணப்பட போட்டிக்கு நடுவராக இருந்தபோது, நான் பார்த்த ஓர் ஆவணப்படம் புதுவித நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தது.
அம்மாணவன் எடுத்திருந்த ஆவணப்படம் சென்னை நகரின் மின்சார ரயிலைப் பற்றிய படம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் மீட்டர்கேஜ் மின்சார ரயில் பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் வரை ஓடிக்கொண்டிருந்தது. எல்லா ரயில்களும் அகலப்பாதையில் ஓடிக்கொண்டிருந்த பொழுது, இந்த சென்னை ரயில்கள் மட்டும் மீட்டர் கேஜில் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு நாள் இந்த மின்சார ரயில்களும் அகலப்பாதைக்கு மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்படுவதற்கு முன்பு கடைசி நாளாக மின்சார ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. சென்னை நகரவாசிகள் பலருக்கு இந்த மின்சார ரயில் அவர்கள் வாழ்வோடு கலந்த ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என 20, 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் உண்டு. அவர்களுக் கெல்லாம் இந்தக் குறுகிய மின்சார ரயில்கள் இன்றோடு முடியப் போகின்றன என்ற செய்தி விவரிக்க முடியாத சோகத்தையும் பிரிவினையும் தந்தது. அந்தக் கடைசி நாள், கடைசி ரயில் நடுநிசி 12 மணிக்குச் சென்னை கடற்கரை ஸ்டேஷனிலி ருந்து கிளம்புகிறது. வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு அதிகாலை ஒரு மணிக்கு மேல் தாம்பரம் ஸ்டேஷனை அடைகிறது. காரணம், அந்த நடுஇரவிலும் ஒவ்வொரு ரயில் நிலையத் திலும், அதில் பல காலம் பயணம் செய்த பயணிகள் அந்த ரயிலைப் பார்ப்பதற்கும், பிரிவுபசாரம் செய்வதற்கும் காத்திருந்தனர். பலர் கண்ணீர் மல்க அந்த ரயிலைப் பார்த்தனர். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். சிலர் ரயில் ஓட்டுநருக்கு மாலை அணிவித்து திலகம்கூட இடுகின்றனர். பல காலம் பயணம் செய்த தங்கள் ரயில்பயண அனுபவங்களைப் பேட்டியில் சொல்கின்றனர். அவ்வாறு சொல்லும்பொழுது பலருக்குக் குரல் உடைகிறது. கண்களில் நீர் கட்டுகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இந்த பிரிவுபசாரத்தைப் பார்க்கும் ரயில் ஓட்டுநர் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்கிறார். இறுதியாக ரயில் தாம்பரத்தை வந்தடைந்தபோது கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. பலர் கடைசி ரயிலின் கடைசி நிமிடம் வரை இருப்பதற்காக ரயிலிலேயே பயணம் செய்து வருகின்றனர். இறுதியில் ரயில் ஓட்டுநரின் பேட்டி வருகிறது. அவர் சொல்கிறார்: “எட்டு வருடங்களாக இதே யூனிட்டை ஓட்டி வருகிறேன். நாளை முதல் இதை ஓட்ட முடியாது என் நினைக்கும்பொழுது...’’ என்று அதற்கு மேல் பேசமுடியாமல் நெகிழ்ந்து போகிறார். ஒரு கண அமைதிக்குப்பின் ரயிலின் அருகே சென்று பிரிய மான தோழியை முத்தமிடுவது போல் ரயிலின் இன்ஜின் பெட்டியை முத்தமிடுகிறார். அந்த ரயிலும் ஒரு ஜீவனுள்ள வஸ்து போல் சிலிர்ப்ப தாய் நமக்குத் தோன்றுகிறது.
அந்த மாணவன் எடுத்த ஆவணப்படம் இது தான். அவன் விளையாட்டாய் தன் சாதாரண டிஜிட்டல் வீடியோ கேமராவால் அந்த ரயிலின் கடைசி நாளின், கடைசிப் பயணத்தைப் படம் பிடித்திருக்கிறான்.
அப்படத்திற்கு இரண்டாம் பரிசு கொடுத்து அவனை அழைத்தபோது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். “என்னால் நம்ப முடியவில்லை சார். நான் விளையாட்டாய்ப் பதிவு செய்த படம். இதற்கு ஏன் பரிசு கொடுத்தீர்கள்’’ என்று அப்பாவி யாய் கேட்டான். அவன் விளையாட்டாய், வெறும் பதிவாய் எடுத்திருக்கலாம். ஆனால், அவனை அறியாமலேயே அந்தப் பதிவில் சில அற்புதங் களும், பல நெகிழ்வுகளும் விழுந்துவிட்டன. அதுதான் அந்த ஆவணப்படத்தின் சிறப்பு. டிஜிட்டல் யுகத்துக்கே உரிய சரியான தருணங்களின் பதிவு.
பல நேரங்களில் சரியான பதிவுகள் கடந்த காலத்திற்கும், நிகழ்வுகளுக்கும் மட்டும் இட்டுச் செல்வதில்லை. மனிதர்களின் மனதிற்குள்ளும் சிந்தனைகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது.
இந்திய அறிவியல் மேதையான, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் வாழ்வு மற்றும் அறிவியல் குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கலாம் என ஓர் ஆலோசனையை மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதற்காக சந்திரசேகர் குறித்த பல விவரங்களைப் படித்தேன். சந்திரசேகர் தற்போது உயிருடன் இல்லை. அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க, ஏற்கனவே அவரைப் பற்றி பதிவு செய்யப்பட் டுள்ள ஆவணங்களைத்தான் உபயோகப்படுத்தி யாக வேண்டும். அந்த ஆவணப்பதிவுகளில் பெரும்பாலானவை அவரைப் பற்றி அவரோடு நெருங்கிப் பழகியவர்களும், பணி செய்தவர்களும் வார்த்தைகள் மூலமாக செய்த பதிவுகள்தான்.
அவர் நியூட்டன் பிரின்ஸிபியாவை எல்லோருக் கும் புரியும் வகையில் விளக்கி புத்தகமாக எழுதி னார். அவரின் ‘ப்ளாக் ஹோல்ஸ்’ பற்றிய கண்டு பிடிப்பைப்போல், இதுவும் அவரின் மிகமுக்கியச் சாதனை.
அவரின் மனைவி லலிதா (100 வயதைக் கடந்து தற்போது சிகாகோ நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்) சந்திராவைப் பற்றி ‘என் அணையா தீபம்’ என்ற கட்டுரையில் மிக அற்புத மாக தன் கணவரைப் பற்றி விவரிக்கிறார். அதில் ஓர் அற்புதமான பதிவு: “அவரின் ‘பிரின்ஸிபியா’ குறித்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று நாங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆவணப் பாதுகாப்பக நூலகத்திற்குச் சென்றபோது நிகழ்ந் தது. நியூட்டன் பிரின்ஸ்பியா குறித்து தன் கைப்பட எழுதிய ஆவணங்களைப் பார்ப்பதற்குத்தான் அங்கு சென்றோம். நியூட்டன் தன் ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காக இப்படித்தான் வரைபடம் வரைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதே கோட்பாட்டை விளக்க சந்திராவும் ஒரு படத்தை வரைந்திருந்தார். நியூட்டனின் ஆவணங்களைப் பார்த்தபோது எனக்கு தாங்க முடியாத ஆச்சர்யம். நியூட்டனின் வரைபடமும் சந்திராவின் வரை படமும் அச்சு அசலாக ஒத்திருந்தது. நான் சந்திராவிடம் சொன்னேன்: “சந்திரா, நீ நியூட்ட னின் மூளைக்குள்ளேயே நுழைந்து, அது எப்படி செயல்பட்டது என்பதை அறிவதில் வெற்றி பெற்றுவிட்டாய்’’ என்றேன்.’’
இதைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. லலிதாவின் இந்த அற்புதமான பதிவுகளால், வாசகனாகிய நானே சந்திராவின் மனதிற்குள் நுழைந்ததைப்போல் உணர்ந்தேன். வெறும் வார்த்தை பதிவுகளுக்கே இத்தனை சக்தி என்றால், திரைப்பட பதிவுகளில் இதை நான் என் ஆவணப் படத்தில் கொண்டு வந்தால் எத்தனை பேரை சந்திராசின் மனதிற்குள் அழைத்துச் செல்லமுடியும் என்று நினைத்த போது சுகமாக இருந்தது.
மாபெரும் மனிதர்களைப் பற்றிய ஆவணப் படங்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. வாழ்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் மனிதர் களைப் பற்றி முழு நீள ஆவணப்படங்கள் எடுக்க வேண்டியது சினிமாவின் இரண்டாம் நூற்றாண் டில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி ஒரு வேளை எடுக்காமல் போனால் அதற்கு ஒரே காரணம், சினிமாவின் முதல் நூற்றாண்டில் எப்படி அதன் சக்தி அறியாமல், அதற்கான இடத்தை பண்பாட்டு தளத்தில் தராமல் போனார்களோ, அதே போல சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் அதன் சாத்தியப்பாடுகள் அறியாமல் அதைப் பயன்படுத் தாமல் தவறவிடுவதுதான்.
இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் மனிதர்களான நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஹியூகோ சாவெஸ் போன்றவர் களைப் பற்றி பல ஆவணப்படங்கள் எடுக்கப்பட் டுள்ளன.
அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற இயக்கு நரான ஆலிவர் ஸ்டோன் எடுத்த முதல் ஆவணப் படம் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியது.
தன் வழக்கமான மாபெரும் ஹாலிவுட் கதைப் படங்களிலிருந்து ஒரு மாறுதல் தேடி ஃபிடல் காஸ்ட்ரோவை குறித்து ஒரு படம் எடுக்க 2002 ம் ஆண்டு ஹவானா செல்கிறார். காஸ்ட்ரோவும், ஆலிவர் ஸ்டோனை ஏற்கனவே அவரின் படங்கள் மூலம் அறிந்திருந்தால் தன்னை குறித்து படமெடுக்க அனுமதிக்கிறார். அதற்கு காஸ்ட்ரோ விதித்த ஒரே நிபந்தனை மூன்று நாட்கள் முழுமையாக தன்னோடு இருந்து படம் பிடிக்கலாம். அதே நேரத்தில் தேவையில்லை என்று தான் நினைத்தால் படப்பிடிப்பை நிறுத்த எந்த நேரத்திலும் தனக்கு உரிமை உண்டு என்பதுதான்.
ஆனால் காஸ்ட்ரோ தன் அதிகாரத்தை பயன் படுத்திப் படபிடிப்பை நிறுத்தவே இல்லை.
மூன்று நாட்களில் முப்பது மணி நேரம் மூன்று கேமரா கொண்டு தொடர்ந்து படம் பிடிக்கப் பட்டது. அந்த 30 மணி நேரமும் காஸ்ட்ரோவும், ஆலிவர் ஸ்டோனும் மனம் விட்டு பேசினர். “ஏ” ஜோக்குகள்கூட பகிர்ந்து கொண்டனர். அந்த மூன்று நாட்களும் காஸ்ட்ரோ எங்கெல்லாம் சென்றாரோ கூடவே ஆலிவர் ஸ்டோனும், அவரது கேமராக்களும் சென்றன. அவர்அலுவலகம், மருத்துவக் கல்லூரி, அருங்காட்சியகம், சாலை களில் இறங்கி மக்களோடு கலப்பது... என்று எல்லா இடங்களிலும் கேமரா காஸ்ட்ரோவை தொடர்ந் தது.
பின்னர் சில மாத படத்தொகுப்பு வேலைக்கு பின், 30 மணி நேர படக்காட்சிகள் கமாண்டேன்ட் என்ற பெயரில் ஒன்றரை மணி நேரப் படமாக எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் காஸ்ட்ரோவை ரத்தமும் சதையுமாய், சிரிப்பும் கும்மாளமுமாய், சிந்தனை யும் கோபமுமாய் 100 நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பது ஒரு கிடைத்தற்கரிய அனுபவம்.
வெறும் மூன்றே நாட்களில் நடந்த பட பிடிப்பைக் கொண்டு இத்தனை அற்புதமான ஆவணப்படத்தை உருவாக்க முடியும் என்றால் அதற்குக் காரணம் இப்படத்திற்கு உபயோகப் படுத்தப்பட்ட டிஜிட்டல் வீடியோ கேமராக்கள் தான்.
இது போன்றதொரு சாத்தியப்பாடு சினிமா வின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய ஒன்று இது போன்றதொரு ஆவணப்படத்தை சினிமா வின் முதல் நூற்றாண்டில் எடுக்க மிகுந்த நேரமும், உழைப்பும், செலவும் செய்ய வேண்டியிருந் திருக்கும். ஆலிவர் ஸ்டோன் தன் இந்த முதல் ஆவணப்பட அனுபவத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:
“இதற்கு முன் படப்பிடிப்பு என்பது எனக்கு மிகுந்த களைப்பைத் தந்தது. காரணம் அவற்றின் பிரம்மாண்டம், செலவு மற்றும் போலித்தன்மை. இந்த ஆவணப்படத்தின் போது மிகுந்த உற்சாகத் தோடு சுதந்திரத்தை அனுபவித்தேன். காரணம் நான் உபயோகப்படுத்திய டிஜிட்டல் தொழில் நுட்பம் தான்...”
எல்லா முக்கிய நிகழ்வுகளும் இன்று வெறும் அச்சிலும், புகைப்படமாகவும் மட்டும் பதிவு செய்தால் போதாது. கூடவே, அசையும் பிம்பமாய் ஒலியோடும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
அதன் காரணமாகத்தான் நோபல் பரிசுக் குழு கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு பெறுபவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுக்கிறது. கூடவே அவர்களின் நீண்ட பேட்டியையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவு செய்கிறது. இவை யாவும் பிற்காலப் பயன்பாட்டிற்காக அவர்களின் ஆவணப் பயன்பாட்டிற்காக அவர் களின் ஆவணப் பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப் படுகிறது.
No comments:
Post a Comment