Saturday, 13 August 2011

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு


உலகெங்கும் சினிமா பார்ப்பதற்காக வாங்கப்படும் டிக¢கெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் வாங்கப்படுகிறது.
டிக்கெட்டு வாங்கிப் பார்க்கப்படும் சினிமாவைப்போல, டிக்கெட்டே வாங்காமல் பார்க்கப்படும் சினிமா பல மடங்கு. டெலிவிஷனில், டி.வி.டி-யில், கம்ப்யூட்டரில்... என பல ரூபங்களில் பலர் உலகெங்கும் சினிமாவை, ஒலியோடு கூடிய அசையும் பிம்பங்களை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிக்கெட் வாங்கிப் பார்த்தாலும் சரி, டிக்கெட் வாங்காமல் பார்த்தாலும் சரி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை இந்த தொழில்நுட்ப புரட்சி சினிமாவின் வளர்ச்சி ஒரு முழு வட்டத்தை பூர்த்தி செய்துவிட்டதோ என நினைக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
சினிமாவின் வயது இன்று வெறும் 115 ஆண்டுகள்தான். ஆனால், இந்த 115 ஆண்டுகள் மனித குல வரலாற்றையே சினிமாவுக்கு முன், சினிமாவுக்குப் பின் என பிரிக்கும் அளவு சக்தி வாய்ந்ததாக மாற்றிவிட்டது. சமீபத்தில் ஒரு வரலாற்றாசிரியர் “சினிமாவுக்கு முந்திய இருண்ட காலங்களில் மக்கள்... இதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள்’’ என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஒலியோடு கூடிய அசையும் பிம்பங்கள் இடைவிடாமல், நம்மைச் சுற்றிக்கொண்டும் துரத்திக் கொண்டும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், வெறும் நூறு ஆண்டுகளுக்கு முன், உலகில் சினிமா என்ற ஒன்று இல்லாமல் இருந்தது என்பதையே பலரால் நம்ப முடியவில்லை. சினிமா இல்லாத அந்தக் காலகட்டத்தில் காலம் என்பதையே, மக்கள் வேறுவிதமாகத்தான் உணர்ந்திருக்க வேண்டும். கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு பழகிவிட்ட நமக்கு அதை கற்பனை செய்வது கடினமான பணியாகும்.
சினிமா மட்டுமல்ல, எந்த ஒரு கலையுமே, தொடர்ந்து தன்னை தக்க வைத்துக்கொள்ள இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தையே சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. (நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையும் கம்ப்யூட்டரில் அடிக்கப்பட்டு, மின்னஞ்சல் வழியாகத்தான் பத்திரிகையை அடையப் போகிறது.)
சில மாதங்களுக்குமுன் சர்வதேச குறும்பட தொகுப்பு ஒன்றில், ஒரு குறும்படத்தை காண நேர்ந்தது. அதன் மூலம் அற்புதமான ஸ்வீடன் நாட்டு இயக்குநர் லூகாஸ் மூடிசன்-ஐ அறிய நேர்ந்தது. உடனே அவர் பெயரை இன்டர்நெட்டில் கூகுளில் தட்டினேன். அவர் பற்றிய, அவர் இயக்கிய படங்கள் பற்றிய மொத்த விவரமும் என் கம்ப்யூட்டர் திரையில் வந்து விழுந்தன. அவரது படமான லில்யா ஃபார் எவர் பற்றி படித்தவுடன் அதைப் பார்க்க விரும்பினேன். டோரண்ட் வலைதளத்தில் அப்படப் பெயரைத் தட்டி தேடினேன். உடனே கிடைத்தது. முழுப்படத்தையும் என் கம்ப்யூட்டரில் இறக்க (இலவசமாக) வலைதளத்தில் கட்டளையிட்டேன். சில மணி நேரங்களில் மு-ழுப்படமும் என் கம்ப்யூட்டருக்குள் வந்து சேர்ந்தது. பின்னர் என் கம்ப்யூட்டருக்குள்ளேயே உள்ள வேறொரு மென்பொருள் துணைகொண்டு, அதை DVD யாக மாற்றினேன். என் வீட்டுத் திரையில் அந்த DVD-ஐ திரையிட்டு பார்த்து மகிழ்ந்தேன்.
15 ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு செயல், என் மனதில் வெறும் கற்பனையாய், கனவாய் மட்டுமே இருந்தது. கலைகள் மாத்திரம் அல்ல, கனவு, கற்பனை, தேடல்... கூட இன்று தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளதோ எனத் தோன்றுகிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, ஒருவித பயமும் தோன்றுகிறது. எங்கே இந்த தொழில்நுட்பம் ஓர் உச்சத்தை அடைந்து முடிந்துவிடுமோ என்கின்ற பயம்தான் அது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற ஓவியர் பால் கேகன், பாரிஸ் நகரின் பரபரப்பும் சப்தமும் பிடிக்காமல் தனிமையான, புராதன வாழ்வைத் தேடி தஹிரி தீவிற்குச் சென்றார். 1903ல் தான் இறக்கும் வரையில் அங்கேயே இருந்தார். அங்குதான் தன் அற்புத படைப்புகளான ‘நாம் யார்?’ ‘நாம் எங்கிருந்து வருகிறோம்?’ ‘நாம் எங்கே போகிறோம்-?’ போன்ற படைப்புகளைப் படைத்தார். இந்த டிஜிட்டல் யுகம் விரைவிலேயே நம்மையும் பால் கேகனைப் போல அமைதியான, எளிமையான, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடி ஓட வைத்துவிடுமோ என்கின்ற பயம் எழுகிறது.
அதே நேரத்தில், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நாம் அடைந்த பயன்கள், சுகங்கள் ஏராளம். இப்போது வாழும் இளம் தலைமுறையைப் போல, இதற்கு முந்திய எந்த தலைமுறையும் இத்தனை வசதிகளோடு, வாய்ப்புகளோடு வாழ்ந்ததில்லை.
முந்திய நூற்றாண்டுகளில் பெரும் பிரச்சினையாக இருந்தது, நோய் தீர்க்கும் மருந்துகள், கல்வி, யுத்தம்... போன்றவை. இந்த நூற்றாண்டின் பெரும் பிரச்சினையாக இருப்பது “சலிப்பு’’ந். இரண்டு வயது குழந்தைக்குக்கூட எனக்கு போரடிக்கிறது என சொல்லத் தெரிகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மிக விரைவாக எல்லாவற்றிலும் சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் எப்போதும், எல்லாவற்றிலும் தேடுவது சுவாரஸ்யம். அவர்களுக்கு பார்க்கின்ற காட்சியில், கேட்கின்ற ஒலியில், உண்ணும் உணவில், சுற்றுச்சூழலில் எல்லாவற்றிலும் ஒரு சுவாரஸ்யம் வேண்டும். அதனால்தான் இன்று பெரும் மல்டிஃபிளக்ஸ் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகின்றது. சினிமாவில் மட்டும் சுவாரஸ்யம் தேடுவதில்லை, சினிமா பார்க்கும் தியேட்டரில்கூட சுவாரஸ்யம் தேடுகிறார்கள். சுவாரஸ்யம் இல்லாவிட்டால் டெலிவிஷன் ரிமோட்டில் சேனலை மாற்றுவதைப் போல் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்கள். தங்கள் எண்ணங்களை, கருத்துகளை, கோட்பாடுகளை, அரசியலை எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், சினிமா மீதான அக்கறை, ஆர்வம் எல்லாமே புதிய பரிமாணங்களை பெறுகின்றன.
சினிமா மீதான மக்களின் ஆர்வம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீப ஐந்து ஆண்டுகளில் அந்த ஆர்வம் பல்வேறு மட்டங்களில் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. சினிமா ஆர்வம் என்பது இன்று சினிமா பார்க்கும் ஆர்வம் மட்டுமல்ல, சினிமாவைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாவின் ரகசியங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாவின் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வம், ஏன் அந்த சினிமாவை நாமே எடுத்துப் பார்க்கலாமே என்கின்ற படைப்பார்வம்... என பல மட்டங்களில் அது விரிந்துள்ளது.
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், சினிமாவின் முதல் நூற்றாண்டு முடிந்ததை ஒட்டி ‘சினிமா ஓர் அற்புதமொழி’ எனும் புத்தகத்தை எழுதினேன். அப்புத்தகத்தைப் படித்த பலர், இன்றளவும் சினிமா பற்றிய தெரிந்த, தெரியாத பல ரகசியங்களை தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். அப்புத்தகத்தை இப்போது படித்துப் பார்த்தபோது, சினிமாவின் அடிப்படை ரகசியங்கள் இன்றும் அப்படியேதான் உள்ளது. ஆனால், சினிமாவை ஒரு கலாபூர்வமான, சக்திவாய்ந்த ஓர் ஆயுதமாக எடுத்து பண்பாட்டு தளத்தில் இயங்க வேண்டுமானால், தற்போதைய சூழலை மனதில் கொண்டு, சினிமாவைப் பற்றிய புதிய ரகசியங்களை, புதிய கோணத்தில், பழைய இரகசியங்களை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டியுள்ளது. அந்த நோக்கில் ‘சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு’ எனும் இத்தொடரை செம்மலரை வாசிக்கும் தோழர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் எழுத முனைகிறேன்.
இத்தொடரின் மூலம் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, டிஜிட்டல் யுகத்தில் அதன் பல்வேறு ரூபங்கள் குறித்து, சுவாரஸ்யம் குன்றாமல் புதிய கோணத்தில் பார்க்கின்ற முயற்சியாகவும் இத்தொடர் அமையும் என நம்புகிறேன். குறிப்பாக பண்பாட்டு தளத்தில் இயங்கும் படைப்பாளிகள், ஊழியர்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக, சினிமான் பல்வேறு ரூபங்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அவர்களை மனதிற்கொண்டும், இத்தொடரின் சில பார்வைகள் அமையும்.
சினிமாவின் ஆரம்பகாலந்தொட்டே படித்த பேராசிரியர்களும் சரி, பண்பாட்டுத் தளத்தில் தீவிரமாக இயங்குபவர்களும் சரி, சினிமாவை முறையாக கையில் எடுத்ததே இல்லை. காரணம், சினிமா நம்மையறியாமலேயே நம்முடைய பல்வேறு பார்வைகளில், அணுகுமுறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை அவர்கள் அறியாததுதான்.
அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இதை உணர்ந்து, இதற்காக கவலைப்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் பேல பெலாஸ். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மார்க்சிய அறிஞரான இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் ஆவார். சினிமா குறித்த முதல் கோட்பாட்டு புத்தகத்தை எழுதியவர் இவர். மேற்கூறிய கவலை குறித்து 1946ல் இவர் சினிமாவின் பொன்விழா கொண்டாட வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். என்னுடைய இந்த அறிமுகத்திற்கு அவரின் கடிதத்தை கீழே முழுமையாக பிரசுரிப்பது முத்தாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
எம்.சிவகுமார்

என் இனிய நண்பரே,
பண்பாட்டு வரலாறு குறித்த ஆய்வில் தாங்கள் மும்முரமாய் இருப்பதை அறிவேன். அதன் இடையே என் தொந்தரவுக்கு மன்னிக்கவும். உலக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வின் பொன்விழா வருவது குறித்து தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். துரதிருஷ்டவசமாக அதை தங்களுக்கு நினைவூட்ட வேண்டியது என் கடமையாகிறது. வரலாறு குறித்த தங்களின் அறிவை யாரும் குறைசொல்ல முடியாது. ஆனாலும், சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் நிகழ்ச்சியை தாங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள். அது மட்டுமல்ல, தொடர்ந்த 50 ஆண்டுகளிலும் அது குறித்து தாங்கள் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. ஆனால், அந்த நிகழ்வு கடந்த 50 ஆண்டுகளில் நம் காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய அளவில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிகழ்ச்சி நடந்த நாளை தாங்கள் குறித்து வைத்திருப்பீர்கள் என நான் எதிர்பார்க்க முடியாதுதான்.
மானுட வளர்ச்சியின் புதிய அத்தியாயம் இந்நிகழ்ச்சி. நீங்கள் இதை கவனிக்க தவறியதற்கு காரணம் உண்டு. அது, உங்கள் பல்கலைக்கழக ஆய்வுகள் இந்நிகழ்ச்சியை அங்கீகரிக்க மறுத்ததுதான். 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய கலை பிறந்தது என்பதையே உங்கள் பல்கலைக் கழகங்கள் கண்டு கொள்ளவில்லை. அது, சிறந்த கலைகளின் வரிசையில் புதிய ஒன்றாக வந்து சேர்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத கலை அது. முதல் அசையும் படம் - சினிமா - 1895ஆம் ஆண்டு வெளிவந்தது.
மாபெரும் வரலாற்று நிகழ்வு என்று இதை நான் சொல்வதை அதிகபட்சம் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அது அதற்கும் மேலானது. ஈடு இணையற்ற பரபரப்பான நிகழ்ச்சி அது. உலக வரலாற்றில் அதற்கு முன்பு அதுபோல் நிகழ்ந்ததில்லை. மனித குலம் அதுபோல் அதற்கு முன் பார்த்ததில்லை. காரணம், வரலாறு பதிவு செய்வது தொடங்கியது முதல் எந்த ஒரு புதிய கலையும் பிறக்கவில்லை. நீங்கள் வரலாற்றாசிரியர். உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. மற்ற கலைகளின் தொடக்கம் வரலாற்றுக்கு முந்திய குழப்பமான அனுமானமாகத்தான் உள்ளது. அந்த அனுமானங்கள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளன. ஆனால் 1895ஆம் ஆண்டு முற்றிலும் புத்தம் புதிய கலை, வித்தியாசமான கலை பிறந்ததை மனிதகுலம் நேரடியாக காண நேரிட்டது.
50 ஆண்டுகளுக்கு முந்திய இந்த நிகழ்ச்சி வெகுவேகமாக வளர்ந்தது. மனிதன் அதை முழுமையான புதிய பன்முக கலையாக வளர்த்தான். அதன் வளர்ச்சியினூடே, மற்ற எந்த கலைகளைக் காட்டிலும் அது சமூகத்தை அதிகமாக பாதித்தது.
இக்கலை குறித்து பல்கலைக்கழகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால், அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாக இல்லை. நம் இளைய தலைமுறையினர் ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால், அது சினிமாதான். ஆனால், பள்ளி பாடத்திட்டத்தில் சினிமா, அதன் அழகியல் பற்றி எதுவுமே கிடையா-து. ஆனாலும், சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக, துரதிருஷ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொள்கிறது. மக்களின் மனோநிலையை, கருத்துகளை சினிமா உருவாக்குகிறது. சினிமா குறித்த தேர்ந்த ரசனை மக்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு தரப்படவில்லை. சினிமா பற்றிய அறிவு, ரசனை அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமாசக்தியின் முன் அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.
சினிமா கடந்த 50 ஆண்டுகளில் முக்கிய சக்திவாய்ந்த கலையாய் உலகம் முழுதும் வளர்ந்துள்ளது. ஆனால், பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பரே, இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரை கற்றறிந்தவராக ஏற்றுக்கொள்வீர்களா?. இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு சினிமாக்கலை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு. 1895ஆம் ஆண்டில் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக ஒளிரும் பிம்பங்களை காண்பித்தபோது பிறந்தது ஒரு புதிய கலை மட்டுமல்ல, அப்போது மனித மூளையில் உணர்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு புதிய அமைப்பு தோன்றியது. அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. “நல்ல இசை உணர்வுக்கு, அடிப்படை சூழ்நிலையும், இசை உணர்வுக்கான மூலமும், இசையறிவும் தேவைப்படுகின்றன. அதேநேரத்தில் இசை நம் காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப்படுத்துகிறது. மாற்றுகிறது’’ என்ற காரல் மார்க்சின் அற்புதமான கூற்று சினிமாவுக்கும் பொருந்தும். கடந்த 50 ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.
உங்களில் பல்கலைக்கழக புத்தக அலமாரிகளில் பார்வை குறித்த அறிவுபூர்வமான பல புத்தகங்கள் இருக்கலாம். ஆனால், சினிமாக்கலை மூலம் எப்படி நாம் புதிதாக பார்க்க கற்றுக் கொண்டோம்? காட்சிரீதியாக கருத்துக்களை அறியக் கற்றுக்கொண்டோம்? காட்சி குறியீடுகளை, மௌன உடலசைவுகளை புரிந்துகொள்ள கற்றுக்கொண்டோம் என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது.
சினிமா நமக்கு இவற்றை கற்றுத்தந்தது என்று சொல்லும்பொழுது உங்களையும் சேர்த்துதான் சொல்லுகிறேன். ஆனால், இந்த உண்மையை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. நீங்களும் சினிமா பார்ப்பவர்தானே. மனைவியின் சந்தோஷத்துக்காக நீங்களும் பலமுறை சினிமா பார்ப்பவர்தானே, சினிமா பார்த்தபின் அதன் கதை பற்றி ஆஹா ஓஹோ என்று, பேசுபவர்தானே. இங்கு உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் புரிந்துகொண்டதாக சொல்லும் இதே சினிமாவை இருபது வருடங்களுக்கு முன் உங்களால் புரிந்துகொண்டிருக்கவே முடியாது. காரணம் உங்களின் பார்த்து உணரும் சக்தி அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அப்போது வளர்ந்திருக்கவில்லை. நான் சொல்வதை உங்களால் நம்பமுடியவில்லையா? நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.
சினிமா வரலாற்றில் இதற்கான நிருபணங்கள் உள்ளன. சினிமாவின் தந்தை எனக் கருதப்படும் ஹாலிவுட் இயக்குநர் கிரிஃபித் முதன்முதலாக க்ளோசப்புகளை உபயோகித்தார். கை, கால்களின் க்ளோசப்புகள் திரை முழுவதும் காண்பிக்கப்பட்டன. அதை முதன்முதலாக கண்ட பார்வையாளர்கள் பீதிகொண்டு சினிமா அரங்கை விட்டு வெளியே ஓடினார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவில் ஒரு விவசாயப் பெண்ணைச் சந்தித்தேன். அவள் சைபீரியாவிலிருந்து வந்திருந்தாள். நல்ல புத்திசாலி அவள். இயந்திரங்களைப் பற்றி அறிந்தவள். அதற்கு முன் அவள் நகரத்தை பார்த்தது கிடையாது. சினிமாவுக்கு போனதே கிடையாது. (ஆனால், இன்று அப்படி ஒரு பெண்ணை சைபீரியாவில்கூட பார்க்க முடியாது) எனவே, அவளை ஒரு சினிமா பார்க்கச் சொன்னேன். சினிமாவிலிருந்து திரும்பிய அவள் பேயறைந்ததுபோல் இருந்தாள். “ஏன், சினிமா பிடிக்கவில்லையா?’’ என்று கேட்டேன். “பிடிப்பதா? அது யாருக்காவது பிடிக்குமா என்ன?’’ என்று அச்சம் கலந்த குரலில் பதிலுரைத்தாள். “ஏன்?’’ ஆச்சரியமாக கேட்டேன். அவள் கூறினாள், “அப்பப்பா என்ன பயங்கரம். மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடக்கிறார்கள். இடுப்புவரை, கழுத்துவரை வெட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய தலைகள் வெட்டப்பட்டு இருந்தன. ஆனாலும் அவை அசைந்தன, பேசின, சிரித்தன.’’
அந்த புத்திசாலி பெண் பேன்யாவை பலமுறை சினிமா பார்க்குமாறு வற்புறுத்தினேன். விரைவில் சினிமா அவளுக்கு புரியத் தொடங்கியது. துண்டுத்துண்டு பிம்பங்களை ஒன்றிணைத்து புரிந்துகொள்ள கற்றுக் கொண்டாள். இன்று குழந்தைக்குகூட இருக்கும் அந்த புரிந்துகொள்ளும் சக்தியை முழுமையாக அடைந்தாள். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் பார்வையாளர்களால் இந்த அற்புத கண்டுபிடிப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் மக்கள் சினிமாவைப் பார்க்க கற்றுக்கொண்டனர். பார்த்து உணர்வதற்கான புதிய சக்தி அவர்களுக்கு வளர்ந்தது.
என் இனிய நண்பரே, சினிமாவை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆனால், அதன் மூலம் கிடைத்த புதிய பார்த்துணரும் சக்தியை, பண்பாட்டை நீங்கள் புரிந்துகொள்வதில்லை. பிம்பங்களின் பேச்சு அது. தொழில்நுட்பம் மூலமான காட்சி வெளிப்பாடு அது. இதைப் புரிந்துகொள்ளும் திறன் நமக்கு தற்போது செழுமையாய் வளர்ந்துள்ளது. சில நேரங்களில் புதிய திரைப்படங்களை முதல் காட்சியில் பார்க்கும்போது மனம் மகிழ்கிறோம். ஆனால், ஐந்தாண்டுகளுக்கு முன் அதே அளவு மனம் மகிழ்ந்திருப்போமா என்பது சந்தேகம். காரணம், படத்தில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள், மறைமுக அர்த்தங்கள் அல்ல. மாறாக, அந்த பிம்பங்கள் அர்த்தப்படுத்துவது என்ன என்பதை அப்போது நாம் அறிந்திருக்க மாட்டோம்.
இங்கு நான் சாப்ளினின் அழகான திரைப்படம் ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன். சாப்ளின் ரயில் நிலையத்துக்கு ஓடிவருவார். அவர் நேசிக்கும் பெண் அங்கு ரயிலில் செல்ல காத்திருக்கிறாள். சாப்ளின் தாமதமாக வருகிறார். பிளாட்பாரத்தை நோக்கி விரைகிறார். இப்போது நாம் பார்ப்பது, ரயிலையோ, தண்டவாளத்தையோ அல்ல. மாறாக, அந்த மாலைப்பொழுதில் திரை முழுவதும் ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் சாப்ளினின் முக க்ளேசப். அவரின் முக அசைவும், கண்களும் எதையோ தேடுகின்றன. இப்போது அவர் முகத்தில் ஒளியும் இருளும் மாறி மாறி கடந்து செல்கிறது. படிப்படியாக கடந்து செல்லும் ஒளி இருளின் வேகம் அதிகரிக்கிறது.
முதன் முதலாக பெர்லினில் இப்படம் காட்டப்பட்டபொழுது, ஒரு சிலரே இக்காட்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டனர். ஆறு மாதங்களுக்குப் பின் எல்லோருமே அக்காட்சியை புரிந்துகொண்டனர். ரயில், ஸ்டேஷனை விட்டு கிளம்புகிறது. அப்போது ஓடும் ரயிலின் ஒளிதான் சாப்ளின் முகத்தில் விழுகிறது என்பதை படம் பார்த்த குழந்தைகூட புரிந்துகொண்டது.
சினிமாவில் காட்சி ரீதியாக விளக்கப்படுவது இன்று உயர்நிலையில் உள்ளது. எல்லாவற்றையும் காண்பிக்கவேண்டும் என்பது அவசியமில்லாமல் போய்விட்டது. படிக்கும்பொழுது இரு வரிகளுக்கிடையே உள்ள அர்த்தத்தை உணர்வதுபோல், இன்று இரு பிம்பங்களுக்கிடையேயான அர்த்தத்தை உணர்கிறோம். என் இனிய நண்பரே நீங்களும் அவ்வாறு உணர்வீர்கள். மேலே சொன்ன காட்சியை நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள். மேலே சொன்ன காட்சியை நீங்களும் புரிந்துகொண்டீர்கள் என்பது தெரியும். சினிமா பற்றிய அறிவு, இலக்கியம் பற்றிய அறிவைக் காட்டிலும் வேகமாக வளர்ந்துள்ளது.
இதனால்தான், பழைய படங்களை பார்க்கும்பொழுது கோமாளித்தனமாக தெரிகிறது. அதே படங்களை 15 ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது, குழந்தைத்தனமாக தெரியவில்லை. நான் சொல்லும் விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? பண்பாட்டு வரலாறு குறித்த பிரச்சினையாக இது உங்களுக்குத் தெரியவில்லையா? கடந்த கால கலைப் படைப்புகள் எவ்வளவுதான் பழையதாக இருந்தாலும், அதைப் பார்த்து நாம் நகைப்பதில்லை.
சினிமா பற்றிய புரிதல் எத்தனை வேகமாக வளர்ந்துள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. மற்ற கலைகளைப் பொறுத்தவரை, பழைய கலைப் படைப்புகள் கடந்துபோன தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒரு சரித்திர கால உடையைக் கண்டு நாம் நகைப்பதில்லை. ஆனால், பழைய திரைப்படங்களை பார்த்து நாம் அவ்வாறு உணர்வதில்லை. அந்தப் படங்களை உருவாக்கியது நாம்தான். அந்த உடைகளை நாம்தான் அணிந்திருக்கிறோம். எனவே அதை பழைய உடை என்று பார்ப்பதற்கு பதிலாக, பழையதாகிப் போன ஒரு நாகரிகமாக பார்க்கிறோம். வரலாற்று கண்ணோட்டத்தில் அதைப் பார்ப்பதில்லை. மாறாக, நம் சொந்த காலகட்டத்தின் குரூரமான, திருப்திதராததொரு வடிவமாக பார்க்கிறோம். ஒரு பழைய பாய்மரக்கப்பலை பார்க்கும்போது அழகாக தெரிகிறது. ஆனால், பழைய ரயில்வண்டி நமக்கு நகைப்பாகத் தெரிகிறது. இதற்கு பின்னால் இருப்பது, ஐம்பது ஆண்டுகால சினிமாவின் மாபெரும் வளர்ச்சியாகும்.
என் இனிய அமெரிக்க நண்பரே, இலக்கியவாதி என்ற உச்சாணிக் கொம்பில் இருந்துகொண்டு, சினிமாவைத் தாழ்வாக பார்ப்பதாய் இருந்தால் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் போன்ற பெயர்களை மேற்கோள் காட்டுவதை விட்டுவிடுவீர்களா? பல திரைப்படங்கள் மோசமாக உள்ளதை நானும் அறிவேன். ஆனால், அதைவிட அதிக எண்ணிக்கையில் மோசமான புத்தகங்களும் உண்டு. நன்றாக ஓடுகின்ற பல திரைப்படங்கள் தரமானவை. ஐம்பது ஆண்டுகால சினிமாவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. என் இனிய நண்பரே, அதற்குரிய மரியாதையைத் தர நீங்களும் கற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
சினிமாவுக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்குரிய மரியாதையோடு அதை நடத்த வேண்டாமா? முதலில் சினிமா தொடர்பான நிறுவனங்கள் இதை விமரிசையாக கொண்டாட வேண்டும். சினிமாவின் தொடக்க வரலாறு பற்றி பேசவேண்டும். மிகச்சிறந்த மௌனப்படங்களை திரையிடவேண்டும். அவை குறித்து கருத்தரங்குகள் வேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிகழ்ச்சியை நடத்துவதில் பண்பாட்டு அமைப்புகள் பங்குகொண்டு, அதன் வெற்றியை அனுபவிக்க வேண்டும். நம் கல்விச் சாலைகள், பல்கலைக் கழகங்கள் குறிப்பாக பண்பாட்டு அமைச்சகம் இதை உணர வேண்டாமா? இது பண்பாட்டோடு தொடர்புடையது. குறிப்பாக, வெகுஜன பண்பாடோடு தொடர்புடையது.
வரலாற்று ரீதியான வளர்ச்சிக்கு, வரலாற்று ரீதியான விழிப்புணர்வு அவசியம். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் சினிமா, சினிமா பண்பாடு குறித்து மக்களுக்கு உணர்த்தும். இந்நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவை மேன்மைப்படுத்தினால், சினிமா தன் உயர்தரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். சினிமா பொன்விழா கொண்டாட்டத்தின் பாகமாக, என் இனிய நண்பரே, நீங்களும் சினிமா பற்றி உரை நிகழ்த்தவேண்டும். எது எப்படி இருந்தாலும் இதற்கான ஏற்பாடுகளை ஃபெனிசாரோ அமைப்பு செய்து வருகிறது. விழாவுக்கான ஆலோசனைகளை அது பலரிடமிருந்து வரவேற்கிறது.
  - பேல பெலாஸ்

No comments:

Post a Comment