“உண்மைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே அதை வெளிப்படுத்தும் முறைகளும் மாற வேண்டும்” என்று பெட்ரால்ட் பிரெக்ட் கூறியுள்ளார். அதனால் தான் அவர் தன் நாடகங்களில் அதுவரை இல்லாத பல புதுமைகளைப் புகுத்தினார்.
சினிமாவுக்கும் இது பொருந்தும். புதிய முறையில் மாறிக்கொண்டே யிருக்கும் உண்மையை மாறிக்கொண்டே இருக்கும் மனித மனதிற்கேற்ப சொல்ல முயற்சித்தபோதுதான் ஆவணப்படங்கள் ஒரு கலையாகப் பரிண மித்து பல வடிவங்களைப் பெற்றது.
சினிமா பிறக்கும்போது ஆவணப் படமாகத்தான் பிறந்தது. துவக்கத்தில் வெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்த சினிமாவில் ஆவணப்படம் என்பது முறையாக, கலையாக மாறியது பின்னாளில் தான். பல பிரபல திரைப்பட இயக்குநர்கள் தங்கள் தொழிலை ஆவணப்படங்களில்தான் தொடங்கி உள்ளனர். பல பிரபல திரைப்பட இயக்குநர்கள் தங்கள் கதைப்படங்களுக்கு இடையே ஆவணப் படங்களையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் கதைப்படங் களில் காட்டிய அதே ஆர்வத்தோடு ஆவணப் படங்களையும் எடுத்திருக் கின்றனர்.
உலகப்புகழ் பெற்ற போலந்து இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி தொடக்க காலத்தில் பல ஆண்டுகள் போலந்து அரசுக்காக ஆவணப்படங்களை எடுத்தவர்தான்.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் ஆவணப் படங்களைப் பற்றி பேசும்போது, கீஸ்லோவ்ஸ்கி எனக்கு மிக முக்கியமான நபராக தெரிகிறார். காரணம்- இத்தொடரின் தொடக்கத்தில் நான் சொன்ன கருத்தான “இந்நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனை என்பது, மக்கள் - குறிப்பாக இளம் வயதினர் வெகு விரைவாக எல்லாவற்றிலும் சலிப் படைந்து விடுகின்றனர்” என்பது ஆவணப்படங்களைக் குறித்து விவாதிக்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது. தற்போதைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் எதைச் சொன்னாலும் விரைவாகச் சொல், சுருக்கமாக சொல், மிக முக்கியமாக சுவைபடச் சொல் என்பது எழுதப் படாத விதியாகிவிட்டது.
இன்று ஆவணப்படங்கள் என்பது கதைப் படங்களுக்கு நிகராக - முடிந் தால் கதைப் படங்களைக் காட்டிலும் ஆர்வம் தூண்டும் வகையில் சொல்வது என்றாகிவிட்டது.
அப்படிப்பட்டப் படங்கள்தான் இன்று உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நான் மிக முக்கியமான விஷயத்தை என் படத்தில் சொல் கிறேன் என்று நினைத்துக்கொண்டு சுரத்தே இல்லாமல் சொன்னால், அப்படம் எடுக்கப்படும் பொழுதே இறந்துவிடும். இதைத்தான் கீவ்ஸ் லோவ்ஸ்கி அழகாகச் சொல்கிறார் “சினிமாவில் கதைப்படம், ஆவணப்படம் என்று இரண்டுவகை கிடையாது. ஆவணப்படங்களுக்கே உரிய கட்டுப் பாடுகளை மீறி வெளிப்படுவதுதான் கதைப் படம்”. கம்யூனிஸ போலந்து அரசுக்காக பல ஆவணப்படங்களை எடுத்த அவர் சொல்கிறார். “நாங்கள் அப்போது ஆவணப்படங்கள் எடுத்த போது, அதற்கென ஒரு தேவை இருந்தது. உலகை விவரித்துக் காட்டுவது என்பது அப்போது மிகுந்த பரவசத்தைத் தந்தது. கம்யூனிச உலகம் எப்படி இருக்க வேண்டும், அது எப்படி இருந்தது என்பதை உலகுக்குக் காட்டினோம். ஒரு விஷயத்தை விவரித்துக் காட்டினால்தான் அது அதிகாரப் பூர்வமாக உள்ளது என்று அர்த்தம். அதற்காக ஆவணப்படஙகள் மூலம் அந்த விஷயங்களுக்கு உயிர் கொடுத்தோம்.
1974ல் முதல் காதல் (First love) எனும் ஆவணப்படத்தை கீவ்ஸ்லோவ்ஸ்கி எடுத்தார். அதில் அவரது கேமரா எப்போதும் திருமணம் ஆகாத ஒரு காதல் ஜோடியின் பின்னே சென்றது. பின்னர் அப்பெண் கருவுருகிறாள். பின்னர் அவர் கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பை அப்படியே காட்டுகிறார். பிறந்த குழந்தையை கையில் எடுத்த தந்தைக்கு கட்டுக்கடங்காமல் கண்ணீர் வெளிப்படுகிறது. கீவ்ஸ்லோவ்ஸ்கியால் அந்த உண்மையான கண்ணீரை அந்த இளம் தந்தை யின் அந்தரங்கத்தை படம் பிடிப்பது மிகவும் கஷ்ட மாக இருந்தது. இன்னொருவரின் அந்தரங்கத்துள் நுழைய எனக்கு என்ன உரிமை உள்ளது என்கின்ற கேள்வி அவரைத் துளைத்தெடுத்தது. அந்த ஒரு கணத்தில்தான் ஒரு நெறிமுறையைப் பின்பற்றும் விதமாக ஆவணப் படங்களிலிருந்து கதைப்படங் களுக்குச் செல்ல தீர்மானித்ததாகச் சொல்கிறார்.
“எல்லாவற்றையும் ஆவணப்படத்தில் விவரித்துக் காட்ட முடியும் என்பது சில சமயம் முடியாத ஒன்று. காதலைப்பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கும் பொழுது, ஒரு எல்லை வரைதான் என் காமிராவால் காதலர்களைப் பின்தொடர முடியும். படுக்கை அறைக்குள் நிஜக் காதலர்கள் நுழைந்த பின் அவர்களை என்னால் காட்ட முடியாது. அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. ஆனால் அவர்களைக் காட்ட எனக்கு விருப்பம்” - இதுதான் ஆவணப்படங்களின் பிரச்சனை என கீவ்ஸ்லோவ்ஸ்கி கூறுகிறார். இதுவே கதைப் படமாக இருந்தால் என் விருப்பப்படி காட்ட முடியும். உடைகளை களைய சம்மதிக்கும் நடிகையை மட்டும் நான் தேர்வு செய்ய வேண்டும்.
கோட்டுபாடு ரீதியான இப்பிரச்சனையை கேமரா பஃப் (Camera Buff) என்ற கதைப் படமாக 1974ல் கீவ்ஸ்லோவ்ஸ்கி எடுத்தார். இப் படம் ஆவணப்படம் எடுக்கும் ஒருவனைப் பற்றிய கதைப்படம். இப்படத்தில் கதாநாயகனுக்கு கேமரா மீதுள்ள தீராத காதலால் வேலை, மனைவி, குழந்தை எல்லாமே பறிபோகிறது.
நீண்டகால ஆவணப்படம் எடுத்த அனுபவம் இல்லாமல் யாராலும் இப்படிப் பட்ட ஒரு அற்புதமான படத்தை எடுத்திருக்க முடியாது.
சென்ற இதழில் நான் விவரித்திருந்த “இன்ஸைட் ஜாப் (Inside job)”, நீரோஸ் கெஸ்ட்ஸ் (Nero’s Guests) போன்ற ஆவணப் படங்கள் அற்புத மான படைப்புகளாகும். ஆனால் இன்று ஆவணப் படங்கள் ஒதுக்கப்பட்ட, அவ்வளவாக அங்கீ கரிக்கப்படாத கலை வடிவங்களாகவே உள்ளன.
சினிமாவின் இந்த இரண்டாம் நூற்றாண்டில், கதைப்படங்கள் எதிர்கொள்கின்ற அதே பிரச்சனை களை, ஆவணப்படங்களும் எதிர்கொள்கின்றன. தற்போது சர்வதேச சந்தைக்காக எடுக்கப்படும் பல ஆவணப்படங்கள் உள்ளன. பல நேரங்களில் இத்தகைய ஆவணப்படங்களுக்குக் கிளர்ச்சி யூட்டும் விஷயங்கள் கருப்பொருளாக அமை கின்றன. குழந்தை பாலியல் தொழிலாளர்கள், அரவாணிகள், யுத்தக் கொடுமைகள் ... என்று சர்வதேச சந்தையை மனதில் வைத்து ஆவணப் படங்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இப்படங்களில் ஆழமோ, அக்கறையோ இருப்ப தில்லை. இன்னொரு புறம் அறிவியல், பிரபஞ்சம், விலங்குகள் ... என ஆர்வமூட்டும் தலைப்புகளில் படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படங்கள் மிகுந்த பொருட் செலவில், அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். இப்படங்களில் பிராமாத மான இசையும், ஒலிச் சேர்க்கையும் இருக்கும். கதாபாத்திரங்கள் இல்லாத கதைப்படங்கள் போல் சுவைபட இருக்கும். பல நேரங்களில் இப்படங்கள் அடிப்படையில் பார்வையாளரைப் பரவசப் படுத்தும். இவற்றில் சொல்லப்படும் தகவல்கள் சரியானதுதானா என்று நிர்ணயிக்க முடியாத வகை யில் இருக்கும்.
ஆனாலும் ஆவணப்படங்கள் நம்முடைய கால கட்டத்தில் ஒதுக்கப்பட்ட பண்பாட்டு வடிவங் களாகவே உள்ளன. மிகச் சிறந்த ஆவணப் படங்கள் எப்போதுமே, அபூர்வமாக, சுண்டியிழுப்பதாக, மயக்கக் கூடியதாகவே இருக்கும் இது போன்ற படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகையப் படங்களை பலர் அறிவதில்லை. சிறந்த கதைப்படங்களுக்கான தேடலே நம்மிடையே வலுவிழந்து இருக்கும் போது, ஆவணப்படங்களுக்கான தேடல் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
தற்போதைய பண்பாட்டு குழப்பத்தில் இத்தகைய ஆவணப்படங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. இதனால் தான் பல நேரங்களில் மிகப்பெரிய ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் இத்தகைய ஹாலிவுட் படங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். சென்ற இதழில் விவாதித்த ஐளேனைந துடிb ஆவணப்படத்திற்குக் குரல் கொடுத்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நட்சத்திர மான மேட்டெமன் (Matt Demon) ஆவார். அவ்வாறு குரல் கொடுத்ததற்காக அவர் தன் வழக்கமான ஊதியத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட ஆவணப்படங் கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நேரங்களில் கதைப் படங்களைப் போன்று திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகின்றன. மைக்கேல் மூரின் 9/11 ஆவணப்படம் அமெரிக்கா விலும், ஐரோப்பியாவிலும் பல நூறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம். இப்படம் அந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா வில் ‘தங்கப் பனை’ விருதும் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த ஆவணப் படத்துக்கு ஆஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. நம்நாட்டில் ஆவணப்படங்களின் முக்கியத்துவம் அறிந்த பண்பாட்டு ஊழியர்களில் எத்தனை பேர் இப்படங்களைக் குறித்து அறிவர்.
நம்நாட்டில் முழு நீள ஆவணப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவது வெகு அபூர்வமாகவே நிகழ்கிறது.
நான் அறிந்து 9/11 ஆவணப்படம் சென்னையில் மட்டும் ஒரு மல்ட்டிபிளக்ஸ் அரங்கில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற “in the cove”, “Man on win” போன்ற படங்கள் இந்தியாவில் திரையிடப் படவே இல்லை. இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற inside job படம் இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் சத்யம் அரங்கில் ஒரு வாரம் ஒரு காட்சி ஓடியது. எல்லா காட்சிகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே படம் பார்த்தனர்.
நம்நாட்டில், பொதுப் பண்பாட்டுத் தளத்தில் ஆவணப்படங்களுக்கு இடமே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இலவசமாகத் திரையிடப்படும் மிகச் சிறந்த ஆவணப்படங் களுக்குக்கூட திரையரங்குக்கு யாரும் வருவ தில்லை.
நம் தமிழ்ப் பண்பாட்டில் தற்போது ஆவணப் படங்களுக்கு இடமே இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் எரியும் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும், இந்திய விவசாய நிலை குறித்தும், ஆதிவாசிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் குறித்தும் மிகச் சிறந்த ஆவணப் படங்கள் வந்திருக்க வேண்டும்.
மிகச்சிறந்த ஆவணப்படங்கள் என்றாலே கலை நயத்தோடு உண்மையை உரத்து பேசுதல் என்று தான் அர்த்தம். அவ்வாறு இங்கு பேசவும் ஆளில்லை, அப்படி யாராவது பேசினாலும் கேட்க ஆளில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்ப் பண்பாட்டு சூழலில்தான் இத்தகைய நிலையே தவிர, பொதுவாகப் பார்க்கும் பொழுது உலக அளவில் ஆவணப் படங்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரிவாக மிளிருகிறது.
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலிலும் டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பின் பல இளைஞர்கள் பரவலாக ஆவணப் படங்களை எடுக்கிறார்கள்.
குறும் படங்களை போலவே இந்த ஆவணப் படங்களும் தனிமனித ஆர்வ மிகுதியால் எடுக்கப்படுகின்றனவே தவிர ஒரு ஆவணப் பதிவாக, ஒரு இயக்கத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நடவடிக்கைக்கு உதவுகின்ற கருவியாகவோ எடுக்கப்படுவதில்லை.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழு வட்டத்தில் ஓரிரு திரையிடல் களுக்குப்பின் இப் படங்கள் மறைந்து போகின்றன. மாறாக, ஆவணப் படங்கள் ஒரு விவாதத்துக்கான, ஒரு நடவடிக்கைக் கான கருவியாக இயக்கம் மற்றும் ஸ்தாபனங்களால் தயாரிக்கப்படும் பொழுது அவற் றின் பயன்பாடுகள் புதிய பரிமாணங் களைப் பெறு கிறது.
உலகெங்கும் மக்கள் சார்ந்த இயக்கங்கள், ஓரளவு வசதி கொண்ட தன்னார்வ தொண்டுத் நிறுவனங்கள், பல வணிக நிறுவனங்கள் கூட தங்களின் சமூக பொறுப்புணர்வு என்ற கட்டாயத்தின் கீழ் ஆவணப்படத் தயாரிப்புக்கு நிதியுதவி செய் கின்றன.
தமிழ்நாட்டிலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங் கள் ஆவணப்படத் தயாரிப்புக்கென்றே நிதியை ஒதுக்க வேண்டும். பத்திரிகை, பிரசுரங்கள் கொண்டு வருவதற்கு செலவழிப்பது போல், ஆவணப்பட தயாரிப்புக்கும் செலவழித்தால், உலகெங்கும் இருப்பதுபோல் தமிழ்நாட்டிலும் ஆவணப்படங்கள் புதிய வடிவமாக, புதிய ஊடக மாக பயன்தரலாம்.
இன்று நம் உலகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ரீதியாக ஒன்றோடொன்று இணைகின்ற உலகமாக உள்ளது. தொலைக்காட்சியும், இணைய மும் ஒன்றோடொன்று இணைந்தே வருகின்றது. பேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் இவையெல்லாமும் அதன் ஒரு பகுதியாக மாறுகிறது. நாளை உருவாகப் போகும் உலகம் இதன் அடிப்படையிலேயே உருவாகும். முற்போக்கு மற்றும் மக்கள் சார்ந்த அரசியல், பண்பாட்டு இயக்கங்கள் இந்த நாளைய உலகிற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளா விட்டால், அவர்கள் வெகுவாகப் பின்தங்கி விடுவர். நாளைய உலகுக்கான இந்தத் தயாரிப்பில், ஆவணப் படங்கள் எடுப்பதும் ஒரு அம்சமாக இருக்கும். சிறந்த ஆவணப்படங்கள், முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவு மற்றும் விவாதத் தேடலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இன்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய அறிவு மற்றும் விவரத் தேடல் அதிகமாகவே உள்ளது. அதற்கு ஆவணப்படங்கள் அழகாக உதவுகின்றன என்பதை நான் என் அனுபவத்திலேயே கண்கூடாகப் பார்த்தேன்.
சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டறையில் ஒருநாள் ஆவணப்படங்கள் குறித்து பேச என்னை அழைத் தார்கள். அன்று நான் ஆவணப்படங்கள் குறித்த ஒரு சிறு அறிமுகத்துக்குப் பின் வோட் ஃபார் மீ (vote for me) எனும் சீன ஆவணப்படத்தை திரையிட்டேன். பிபிசி தயாரிப்பான இப் படம் முதன்முதலாக சீனப் பள்ளி ஒன்றில் வகுப்பு தலைவனை தேர்ந் தெடுக்க நடத்தும் தேர்தல் பற்றிய ஆவணப்படம் மிக அற்புதமான இந்த ஆவணப் படம் ஒரு சுவாரஸ்மான கதைப்படத்தைவிட அதிகமாக மாணவர்களை வசிகரித்தது.
படத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல், தேர்ந்தெடுப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு ஏதும் தெரியாது. காரணம் தேர்தல் என்பதே அதற்கு முன்பு அங்கு நடந்தது கிடையாது. அதைப்பற்றி ஆசிரியை மாணவர் களுக்கு விளக்குகிறார். பின்னர் மூன்று மாணவர்கள் போட்டியிட முன்வருகிறார்கள். மூன்று பேரில் ஒருவர் மாணவி. அப்பா இல்லாமல் அம்மாவால் மட்டும் வளர்க்கப்படும் நடுத்தரக் குடும்பத்து பெண். இன்னொரு மாணவனுக்கு அம்மா, அப்பா இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொரு மாணவன் பணக்கார வகுப்பைச் சேர்ந்தவன். அப்பா அரசு அதிகாரி, அம்மா உயர்ந்த வேலையில் இருக்கிறார்கள்.
மூன்று மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தேர்தலுக்காக எப்படியெல்லாம் தயார்ப்படுத்துகிறார்கள் என்பதுதான் படம். அப்பாவியான அக்குழந்தைகள் பெற்றோர்களால் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை இயற்கையான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது படம்.
இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய எனது வகுப்பு, நான்கு மணி நேரத்துக்கும் கூடுத லாக நீடித்தது. மாணவர்கள் முழு ஆர்வத்தோடு காரசாரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நேர்மை, ஊழல், தனி மனித ஒழுக்கம், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்... என்று பல விஷயங்களைக் குறித்து ஆசிரியர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு மாணவர் கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இறுதியில் அப்பட்டறையின் மிகச் சிறந்த வகுப் பாக அது இருந்தது என ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. அந்த ஆவணப்படம்தான்.
அந்த சீன ஆவணப்படம் சீனாவைப் பற்றிய புதிய புரிதலையும் மாணவர்களுக்குத் தந்தது.
சமீப காலங்களில் சீனாவைப் பற்றிய மிக அற்புதமான ஆவணப்படங்கள் வந்து கொண்டிருக் கின்றன. சமீபத்திய சீன ஆவணப்படம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. அதைப்பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
அப்படத்தின் பெயர் “லாஸ்ட் ட்ரெய்ன் ஹோம்” (Last train home) படத்தின் இயக்குநர் லிக்சின் ஃபான் (Lixin Fan) இவர் கனடாவில் வசிக்கும் சீனர்.
சீனாவின் அபரிமிதமான தொழில் வளர்ச்சி இன்று உலகையே வியக்க வைக்கிறது. கிராமப்புற விவசாய நாடாக இருந்த சீனா இன்று திடீரென உலகின் மிகப்பெரிய தொழில்துறை நாடாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தினால் சீனா, அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இப்பிரச்சனைகளை இப்படம் மிக பிரம்மாண்டமாக மிக அழகாக விவரிக்கிறது. சீனாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக, பல பெரு நகரங்கள் தற்போது சீனாவில் உருவாகியுள்ளன. இந்தப் பெருநகரங்களில்தான் உலகெங்கும் விநியோகிக்கப்படும் பல நுகர்ப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலை களில் வேலை செய்ய சீனாவின் தொலை தூர கிராமங்களில் இருந்து விவசாயிகள் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றனர். காரணம், விவ சாயத்தை காட்டிலும் இங்கு இவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. பல கிராமங்களில் வயதானவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தவிர யாருமே இருப்பதில்லை. குழந்தைகள் தனியாகவும், தாத்தா பாட்டியிடமும் தான் வளர்கின்றனர்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெற் றோர்கள் அதிகபட்சம் வருடத்திற்கு ஒரு முறை தான் கிராமங்களில் உள்ள தங்கள் வீட்டுக்குச் செல் கின்றனர். அதுவும் சீன புத்தாண்டின் போது எல் லோரும் வீட்டிற்குச் செல்கின்றனர். கிட்டதட்ட 20 கோடி பேர் ரயில்கள் மூலமாக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ரயில் நிலையங்களும், ரயில்களும் இந்த 20 கோடி மக்களால் கட்டுப்படுத்த முடியாத வகையில் நிரம்பி வழிகின்றன. மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்நாட்டு குடிப் பெயர்ச்சி இதுதான் என பத்திரிகைகள் சொல்கின்றன. இந்த ரயில் நிலையங்களும், ரயில் பயணமும் இதுவரை சினிமாவில் பார்த்திராத ஒன்று.
படத்தின் இயக்குநர் வெறும் இந்த பிரம் மாண்டத்தை மட்டும் காட்டவில்லை. படம் முழுக்க கதையாக அவர் சொல்வது ஒரு குறிப்பிட்ட விவசாய தம்பதியைப் பற்றியது. சாங்-கும் அவர் மனைவியும் பல ஆண்டுகளாக ஒரு ஏற்றுமதி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகின் றனர். மகனும், வயது வந்த பெண்ணும் கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் பள்ளியில் படிக்கின்றனர். எல்லாம் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக என்றுதான் பெற்றோர் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனால் சாங்கின் மகள் படிக்க விருப் பம் இல்லாமல் தானும் நகரத்திற்கு தொழிலாளியாக வருகிறாள். பெற் றோர்களின் எதிர்ப்பை மீறி, அவர்களோடு சண்டை யிட்டுக் கொண்டு அவள் அவ்வாறு செய்கிறார். சாங்கும் அவன் மனைவியும் மனமுடைந்து போகி றார்கள். நகரத்திற்கு வந்த மகள், பெற்றோர்களை விட்டு நிரந்தரமாகப் பிரிகிறாள். கிராமத்தில் இருக்கும் தன் மகனுக்காக, சாங்கின் மனைவி மட்டும் கிராமத்துக்குத் திரும்புகிறாள். அந்த பிரம்மாண்ட கூட்ட நெரிசலில் மனைவியை வழியனுப்ப சாங் ரயில் நிலையம் வருகிறான். அவர்களின் வாழ்க்கையும், அவர்கள் பட்ட கஷ்டமும் அர்த்தமற்றுப் போகிறது.
பொருளாதார வல்லரசாக மாற சீனா மனிதத்துவ ரீதியாக எத்தனை பெரிய விலையைத் தரவேண்டியுள்ளது என்பதை இந்த ஆவணப்படம் கன்னத்தில் அறைவது போல் சொல்கிறது. தொடர்ந்து ஆவணப்படங்கள் குறித்து வரும் இதழ்களில் பார்ப்போம்.
No comments:
Post a Comment