(‘அரிஜன்' இதழில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்பு)
கடந்த மே மாதம் லாகூர் ஜாத் பட் தோடக் மண்டலின் ஆண்டிறுதி கருத்தரங்கில், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கி இருக்க வேண்டும் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். ஆனால், டாக்டர் அம்பேத்கரின் உரை ஏற்கத் தகுந்ததாக இல்லை என்று வரவேற்புக் குழு கருதியதால் கருத்தரங்கே ரத்து செய்யப்பட்டு விட்டது. வரவேற்புக் குழு தன் விருப்பத்துக்கு ஏற்ப, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. பின்னர் அந்தத் தலைவரின் உரை ஆட்சேபிக்கத்தக்கது என்று காரணம் காட்டி, அந்தத் தலைவரையே ஏற்க மறுக்கிறது. வரவேற்புக் குழுவின் இந்தப் போக்கு, எந்த அளவுக்கு நியாயம் என்பது கேள்விக்குரியதே.
சாதி பற்றியும் இந்து மத சாஸ்திரங்களைப் பற்றியும் டாக்டர் அம்பேத்கர் கொண்டுள்ள கருத்துகள் என்ன என்பதை, வரவேற்புக் குழு அறிந்தே இருக்கிறது. இந்து மதத்தைவிட்டு வெளியேறப் போவதாக திட்டவட்டமாக அவர் அறிவித்து விட்டார் என்பதுகூட, வரவேற்புக் குழுவுக்கு மிக நன்றாகவே தெரியும். இப்படிப்பட்ட ஓர் உரையைத் தவிர, வேறு எதையும் டாக்டர் அம்பேத்கரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். சமூகத்தில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதரின் கருத்துகளை, நேரடியாகக் கேட்கிற வாய்ப்பை - பொதுமக்களுக்குக் கிட்டாமல் செய்துவிட்டது வரவேற்புக் குழு. எதிர்காலத்தில் தான் எந்த முகாமில் இருந்தாலும், மற்றவர்கள் தன்னை மறந்து விடுவதை அனுமதிக்கிறவர் அல்லர் டாக்டர் அம்பேத்கர்.
டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்திற்கு ஒரு சவால்
வரவேற்புக் குழுவால் டாக்டர் அம்பேத்கரைத் தோற்கடிக்க முடியாது. அவர் தன் சொந்தச் செலவில் தன் உரையை அச்சிட்டு, அதன் மூலம் வரவேற்புக் குழுவின் புறக்கணிப்புக்குத் தக்க பதிலடி தந்திருக்கிறார். அந்த உரையின் விலை எட்டணா. அதை 2 அல்லது 4 அணாவாகக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூற விரும்புகிறேன். சீர்திருத்தவாதி எவரும் அந்த உரையை அலட்சியப் படுத்திவிட முடியாது. வைதீகர்கள் அதைப் படித்தால் பயனடைவார்கள். இவ்வாறு கூறுவதால் உரை, மறுப்புக்கு இடமற்றதாக ஆகிவிடாது. கடும் ஆட்சேபனைக்கு உரியது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அதைப் படித்தாக வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்துக்கு ஒரு சவால். இந்துவாக வளர்க்கப்பட்டு, இந்து பாதுகாவலர் ஒருவரின் தயவால் கல்வியறிவு பெற்றவர் அவர். சவர்ண இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்களால் - அவரும் அவரைச் சார்ந்த மக்களும் நடத்தப்பட்ட முறையின் காரணமாக, அவர்கள் மீது ஆழ்ந்த வெறுப்புக் குள்ளானார். இந்த வெறுப்பு எந்த அளவுக்குச் சென்று விட்டது? சவர்ண இந்துக்களை மட்டுமல்லாது, தனக்கும் சவர்ண இந்துக்களுக்கும் பொதுவான பாரம்பரியமாகிய மதத்தையே விட்டு விலகும்படி செய்து விட்டது. அந்த மதப்பண்டிதர்களில் ஒரு பகுதியினர் மீது தனக்கு ஏற்பட்ட வெறுப்பை, அந்த மதத்தின் மேல் உமிழ்ந்து இருக்கிறார் அவர்.
ஆனால், இதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், ஓர் அமைப்பையோ நிறுவனத்தையோ, அதன் பிரதிநிதிகள் நடந்து கொள்ளும் முறையைக் கொண்டுதான் மதிப்பிட முடியும். இதற்கு மேல் என்ன சொல்வது? சவர்ண இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்கள் மதத்தைச் சேர்ந்த - தீண்டத்தகாதவர் என்று தங்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களிடம் - மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; தங்களின் அந்த நடத்தைக்கு மத நூல்களை ஆதாரமாக ஆக்கிக் கொண்டார்கள். அம்பேத்கர் அந்த நூல்களை அலசிப்பார்க்கிறார். தீண்டாமைக்கும் அதன் விளைவுகளுக்கும் ஆதரவான நம்பிக்கைக்கு, ஏராளமான ஆதாரங்களை அந்த நூல்களில் காண்கிறார்.
மிகத் தெளிவான கருத்தை முன் வைக்கும் உரமுள்ள அம்பேத்கர்
அம்பேத்கரின் உரையில் காணப்படும் குற்றச்சாட்டு, மூன்று அம்சங்களைக் கொண்டது: 1. மனிதத் தன்மை இல்லாத நடத்தை 2. மனிதத் தன்மை இல்லாத கொடியவர்கள், தங்களுடைய நடத்தைக்காக வெட்கித் தலைகுனியாமல் அந்த நடத்தைக்குக் கற்பிக்கிற நியாயங்கள் 3. இவ்வாறு கற்பிக்கப்படுகிற நியாயங்களுக்கு அதிகாரம் தந்திருப்பவை, மத நூல்களே என்ற கண்டுபிடிப்பு. இவையே அந்த மூன்று அம்சங்கள். தன் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த, தனது உரை நெடுக மத நூல்களில் இருந்து உள்ளபடியே ஏராளமான மேற்கோள்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
தன்னுடைய நம்பிக்கையை (மதத்தை) தன் உயிரைவிட மேலானதாக மதிக்கிற எந்த ஓர் இந்துவும், அவருடைய குற்றச்சாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. டாக்டர் அம்பேத்கர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல; அதே வெறுப்புணர்வோடு இருக்கிற பலரிடையே தன் கருத்தைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் - மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லும் உரம் படைத்தவர் அவர். அத்தகைய மனிதர்களிலேயே அவர் மிகத் திறமையானவரும்கூட. நல்ல வேளையாக, முன்னணித் தலைவர்களின் வரிசையில் அவர் மட்டும் தன்னந்தனியராக நிற்கிறார். இந்த நிமிடம் வரை, ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினரின் பிரதிநிதியாகவே அவர் இருக்கிறார்.
ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல தலைவர்கள் அவர் கூறுவதை, அவரைப் போலவே ஆவேசத்துடன் எதிரொலித்து வருகிறார்கள். அவர்களில் ராவ்பகதூர் எம்.சி.ராஜா, திவான்பகதூர் சீனிவாசன் போன்றவர்கள் எல்லாம் - இந்து மதத்தை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுவதில்லை என்பதோடு, அரிஜனங்களில் மிகப்பெரும்பான்மையினர் ஆளாகியிருக்கிற வெட்கக் கேடான ஒடுக்குமுறைக்கு அதிலேயே மாற்று வழியும் கண்டு நிறைவடைகிறார்கள்.
சாதி இந்துக்கள் திருந்தட்டும்
இன்னும் பல தலைவர்கள், இந்து மதத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்கள் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கர் சொல்வதைப் புறக்கணித்துவிட முடியாது. சவர்ண இந்துக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நடத்தையையும் திருத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சவர்ண இந்துக்களில் கற்றறிந்த மேலோரும் செல்வாக்கு உடையவர்களுமாக இருப்பவர்கள், இந்து மத நூல்களைப் பற்றி சரியான விளக்கமளிக்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கரின் குற்றச்சாட்டு மூன்று கேள்விகளை எழுப்புகிறது :
1. இந்துக்களின் மத நூல்கள் எவை?
2. இதுவரை வெளிவந்த உரை நூல்கள் அனைத்தையுமே ஏற்றுக் கொள்வதா அல்லது ஒரு சில நூல்களை அதிகாரப் பூர்வமற்றவை என ஒதுக்கிவிடுவதா?
3. தீண்டாமை, சாதி, சம நிலை, கலப்பு மணம், சமபந்தி என்பன பற்றி எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு அதிகாரப் பூர்வ நூல்களும், அதிகாரப் பூர்வமற்ற நூல்களும் தருகிற பதில் என்ன?
டாக்டர் அம்பேத்கர் தன் உரையில் இந்த மூன்றையும் ஆராய்ந்திருக்கிறார். அடுத்த இதழில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். டாக்டர் அம்பேத்கரின் உரையில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை விளக்குகிறேன்.
2
வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் ஆகியவை இந்து சாஸ்திரங்கள். இத்துடன் முடிந்து விடவில்லை. ஒவ்வொரு சகாப்தமும் அல்லது ஒவ்வொரு தலைமுறையும்கூட, புதிய மத நூல் ஒன்றைத் தந்துள்ளது. எனவே, அச்சில் ஏறிய எல்லாமே அல்லது சுவடிகளில் உள்ள எல்லாமே மத நூல்கள் ஆகிவிடாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, கடவுளின் சொல்லாக ஒருபோதும் ஏற்க முடியாத கருத்துகள், ஸ்மிருதிகளில் ஏராளமாக உள்ளன. ஆக, டாக்டர் அம்பேத்கர் ஸ்மிருதிகளில் இருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டுகிற எத்தனையோ சூத்திரங்கள், அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்க முடியாதவையே. எக்காலத்துக்குமான செய்தியைப் பேசுபவை மட்டுமே சாஸ்திரங்கள். திறந்த மனதுடைய எல்லாருமே ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருப்பவையே சாஸ்திரங்கள்.
சாதியின் மூலம் எனக்குத் தெரியாது !
பகுத்தறிவினால் பரிசோதிக்க முடியாத எதையும் அல்லது ஆன்மீக ரீதியாக அனுபவிக்க முடியாத எதையும் - இறைவனின் சொல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. விலக்கப்பட்ட மத நூல்கள் உங்களிடம் இருந்தாலும் கூட, சரியான விளக்கம் தந்தாக வேண்டுமே! அந்த நூல்களுக்கு விளக்கம் தருவதில் தலைசிறந்தவர்கள் யார்? நிச்சயமாகக் கற்றறிந்த மனிதர்கள் அல்ல. கல்விச் சிறப்பு தேவையானதே. ஆனால், மதம் கல்விச் சிறப்பால் இயங்கவில்லை. முனிவர்கள், முக்காலமும் உணர்ந்த ஞானிகள் ஆகியோரின் அனுபவங்களிலும், வாழ்க்கையிலும், சொற்களிலும் குடிகொண்டு இருப்பதுதான் மதம். மிகச் சிறந்த சாஸ்திர அறிஞர்கள் மறக்கப்பட்டு விடுகின்ற நிலையிலும், ஞானிகள், தவமுனிவர்கள் ஆகியோர் அடைந்துள்ள பேரனுபவங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்; மக்களின் ஆன்மீக உணர்ச்சியைத் தூண்டிவிடும் பெரும் சக்தியாகத் தொடர்ந்து இருந்துவரும்.
சாதி, மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே; சாதியின் மூலம் எது என்று எனக்குத் தெரியாது. என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக் கொள்ள, சாதியின் மூலத்தை நான் தெரிந்து கொள்ளவும் அவசியம் இல்லை.
ஆனால் சாதி, ஆன்மீக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆஸ்ரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை. வர்ணச் சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன? பரம்பரைத் தொழிலை மேற்கொண்டே, தங்கள் வாழ்க்கையை ஒவ்வொருவரும் நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தானே. வர்ணச் சட்டம், நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்துக்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப் பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்தத் தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும். எல்லா தொழில்களுமே நல்லவைதான்; சட்டத்துக்கு உட்பட்டவைதான்; எல்லா வகையிலும் சம நிலை கொண்டவைதான்.
‘பார்ப்பனர் தொழிலும், தோட்டி தொழிலும் சமமானதே'
ஆன்மீக குருவாக இருக்கும் பார்ப்பனரின் தொழிலும், தோட்டி ஒருவரின் தொழிலும் சமமானவையே; தத்தமக்குரிய கடமைகளை, பார்ப்பனரும் தோட்டியும் சரிவரச் செய்வது, கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்புடையதாகவே காட்சியளித்தது. ஒரு காலத்தில் மனிதனிடம் இருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்றுவந்ததாக தெரிய வருகிறது. பார்ப்பனர் ஆனாலும் சரி, தோட்டியானாலும் சரி, வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே - அவர்கள் அத்தொழில்களை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் அல்ல.
இன்றும்கூட கிராமங்களில் இந்தச் சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதற்குரிய சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில், பார்ப்பனர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத் தாழ்வு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சீரழிந்த இந்தக் காலத்திலும், நான் சில உண்மையான பார்ப்பனர்களைப் பார்க்கிறேன். அந்தப் பார்ப்பனர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும் பிச்சையால் உயிர் வாழ்ந்து வருகிறார்கள்; தங்களுடைய ஆன்மீக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள்.
தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு, அதே நேரத்தில் அந்த வர்ணத்துக்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் - வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக் கூத்துகளைக் கொண்டு, வர்ணச் சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது; முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தையும் விட, தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வர்ணம் என்று எந்த வர்ணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. இவ்வாறு செய்வது, வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும். தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வர்ணச் சட்டத்தில் இல்லை (சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பதே இந்து மதத்தின் சாராம்சம்).
'எதிர் வாதத்தால் நான் மாறப்போவதில்லை'
டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து - இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது, எனக்கு மிக நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின்படிதான் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை, அந்த விளக்கத்துக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயன்று வருகிறேன்.
டாக்டர் அம்பேத்கர் தன் உரையில், சந்தேகத்துக்கு இடமான நூல்களில் இருந்தும், தம் மதத்துக்கு உண்மையுள்ள முன்மாதிரியாக வாழாமல், சீரழிந்து போன இந்துக்களின் வாசகங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார். இதுவே அவர் செய்துள்ள மிகப் பெரும் தவறு என்பது என் கருத்து. டாக்டர் அம்பேத்கர் கூறும் அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்று நடப்பில் உள்ள எல்லா மதங்களுமே அதன் முன்னால் தோற்றுத்தான் போகும்.
தனது திறமையான உரையில் அறிவாளியான டாக்டர், தன் தரப்பு நியாயத்தை வரம்பை மீறியே நிரூபித்து உள்ளார். சைதன்யர், ஜயன்தேவ், துக்காராம், திருவள்ளுவர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன் ராய், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், விவேகானந்தர் இன்னும் எளிதில் பேர் சொல்லிவிடக் கூடிய ஏராளமானோரும் ஏற்றுக் கொண்ட ஒரு மதமானது, டாக்டர் அம்பேத்கர் தம் உரையில் சித்தரித்துக் காட்டி உள்ளபடி - முழுக்க முழுக்க தகுதி இல்லாதது ஆகிவிட முடியுமா? ஒரு மதத்தை, அதன் மோசமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அவற்றை மட்டுமே பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகப் பயன்படுத்த முடியும். அதற்கு மேலேயும் போக வேண்டும் என்பது வேறு செய்தி.
- ‘அரிஜன்', சூலை 18, 1936
3
வர்ணம் # சாதி
லாகூர் ஜாத்பட்தோடக் மண்டலைச் சேர்ந்த திரு. சான்ட் ராம்ஜி பின்வரும் கடிதத்தை நான் வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார் :
டாக்டர் அம்பேத்கரைப் பற்றியும் லாகூர் ஜாத் பட்தோடக் மண்டலைப் பற்றியும் நீங்கள் எழுதியுள்ள குறிப்புகளை வாசித்தேன். அது தொடர்பாகப் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறேன்.
"டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக, எங்கள் மாநாட்டுக்கு அவரைத் தலைமை தாங்க அழைக்கவில்லை. ஏனெனில், தீண்டத்தக்க இந்துவுக்கும் - தீண்டத்தகாத இந்துவுக்கும் இடையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. இந்து சமூகத்தைப் பீடித்துள்ள கொள்ளை நோயைப் பற்றிய அவரது ஆய்வு, எங்களுடையதோடு ஒத்துப்போனதால்தான் நாங்கள் அவரை அழைத்தோம். அதாவது, இந்துக்களின் சீர்குலைவுக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணம், சாதி அமைப்புதான் என்றே அவரும் கூறுவதால்தான் அவரை அழைத்தோம்.
டாக்டர் பட்டத்துக்கான அவரது ஆய்வுரை, சாதி அமைப்பைப் பற்றியதே ஆகும். அதில் சாதி அமைப்பை அவர் முழுமையாக ஆய்வு செய்துள்ளார். சாதிகளை ஒழிக்குமாறு இந்துக்களை வற்புறுத்துவதே - எங்கள் மாநாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்து அல்லாத ஒருவர் சமூக, மதச் செயல்பாடுகளில் அறிவுரை கூறுவது என்பது, இந்துக்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது. தம் உரையின் இணைப்புப் பகுதியில் ஓர் இந்து என்ற முறையில், அதுவே தன் இறுதி உரையாக இருக்கும் என டாக்டர் அழுத்திக் கூறி இருக்கிறார். மாநாட்டின் நலன்களுக்கு இது பொருத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல, கெடுதல் செய்வதாகவும் இருந்தது. எனவே, அந்த வாசகத்தைத் தவிர்த்து விடுமாறும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதை அவர் எளிதில் வெளியிட்டுக் கொள்ள முடியும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
;
ஆனால், அவர் மறுத்து விட்டார். நாங்களும் அதற்கு மேல் எங்கள் நிகழ்ச்சியை வெறும் ‘பந்தா' பண்ணிக் காட்டுவதில் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. இதெல்லாம் இருந்தாலும் அவரது உரையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை, இது மிகவும் அறிவார்ந்த ஆய்வுøரயாகும். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்த்து வெளியிடத் தகுதியானதுமாகும்.
அடுத்து, சாதிக்கும் வர்ணத்துக்கும் இடையில் நீங்கள் காட்டும் தத்துவார்த்த வேறுபாடு, மிக நுணுக்கமானது என்பதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பொதுமக்களால் அந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் சாதியும் வர்ணமும் ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றுதான். அதாவது, இரண்டுமே கலப்பு மணத்தையும் சமபந்தியையும் தடுக்கின்றன.
உங்கள் வர்ணக் கோட்பாட்டை, தற்காலத்தில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை. வருங்காலத்தில் அது புத்துயிர்ப்பு பெறும் என்பது போலவும் தெரியவில்லை. ஆனால், இந்துக்கள் சாதியடிமைகள். சாதியை ஒழிக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே, நீங்கள் உங்கள் கற்பனை லட்சியமான - வர்ணக் கோட்பாட்டை முன்வைக்கும்போது, அதில் அவர்கள் தத்தம் சாதியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டு இருப்பதற்கு நியாயத்தைக் காண்கிறார்கள். ஆக, உங்கள் வர்ணப் பிரிவினையின் கற்பனையான பயன்பாட்டை அறிவுறுத்துவதன் மூலம், நீங்கள் சமுதாய சீர்திருத்தத்துக்குப் பெரும் கெடுதியையே ஏற்படுத்தி வருகிறீர்கள்.
ஏனென்றால், அது எங்கள் வழிக்குத் தடையாக இருக்கிறது. வர்ணக் கோட்பாட்டின் ஆணிவேரைத் தாக்காமல் - தீண்டாமையை நீக்கிவிட முயல்வது, நோயின் வெளி அடையாளங்களுக்கு சிகிச்சை செய்வது போன்றது; நீர்மேல் ஓவியம் வரைவது போன்றதாகும். ‘துவிஜர்'கள் (மேல்சாதி இந்துக்கள்) தங்கள் அடிமனதில் தீண்டத்தக்க - தகாத சூத்திரர் எனப்படுவோருக்கு ச மூக சமத்துவம் வழங்க விரும்புவதில்லை.
எனவே, அவர்கள் சாதியை உடைக்க மறுக்கிறார்கள். தீண்டாமையை அகற்ற அவர்கள் தாராள நிதி வழங்குவது, பிரச்சனையை ஓரம் கட்டவே செய்யும். தீண்டாமையையும் சாதியையும் அகற்ற சாஸ்திரங்களின் உதவியை நாடுவது, சேற்றை சேற்றால் கழுவப் பார்ப்பது போன்றதே ஆகும்.''
வர்ணத்தை மறுப்பவன் இந்துவாக இருக்க முடியாது
கடிதத்தின் பின்பகுதி, முன்பகுதிக்கு முரணாக உள்ளது. மண்டல்காரர்கள் சாஸ்திரங்களின் உதவியை நிராகரிப்பார்களானால், அவர்களும் டாக்டர் அம்பேத்கர் செய்த அதே செயலையே செய்கிறவர்கள் ஆகிறார்கள். அதாவது, இந்துக்கள் அல்லாமல் போகிறார்கள். பிறகு எப்படி அவர்கள் ‘இதுவே என் கடைசி உரையாக இருக்கும்' என்று சொன்னதற்காக அம்பேத்கரை ஆட்சேபிக்க முடியும்? எதன் சார்பாக திரு. சாண்ட்ராம் பேசுவதாக கூறிக் கொள்கிறாரோ, அந்த மண்டலே டாக்டர் அம்பேத்கரின் உரை முழுவதன் சாரமான வாதத்தைத் தூக்கிப்பிடிக்கிறபோது, நிலைமை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.
ஆனால், மண்டல், சாஸ்திரங்களை நிராகரிக்கிறது என்றால், வேறு எதை நம்புகிறது என்று கேட்பது ஏற்புடையதே ஆகும். குரானை மறுத்த பிறகு ஒருவர் எப்படி முஸ்லிமாக நீடிக்க முடியும்? பைபிளை மறுத்த பிறகு ஒருவர் எப்படி கிறித்துவராக நீடிக்க முடியும்? சாதியும் வர்ணமும் ஒன்றுதான் என்றால், இந்து மதத்தை வரையறுக்கிற சாஸ்திரங்களிலிருந்து பிரிக்க முடியாத பகுதியே வர்ணக்கோட்பாடு என்றால், சாதியை அதாவது வர்ணத்தை மறுக்கிற எவரும் - எப்படி தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
திரு. சாண்ட்ராம், சாஸ்திரங்களைச் சேற்றுடன் ஒப்பிடுகிறார். எனக்குத் தெரிந்தவரை டாக்டர் அம்பேத்கர், சாஸ்திரங்களுக்கு இதுவரை இப்படிப்பட்ட சித்தரிப்பை வழங்கவில்லை. இன்று நிலவுகிற தீண்டாமையை சாஸ்திரங்கள் ஆதரிக்குமானால், நான் என்னை ஒரு இந்து என்று அழைப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று, நான் சொன்னது வெறும் பேச்சுக்கல்ல. அது போலவே, சாதியை இன்று நாம் அறிந்துள்ள அதன் எல்லா அசிங்கங்களோடும் சாஸ்திரங்கள் ஆதரிக்குமானால், நான் என்னை இந்து என்று சொல்லிக் கொள்ளவோ, இந்துவாக நீடிக்கவோ முடியாமல் போகலாம். ஏனெனில் கலப்பு மணத்தின் மீதோ, சமபந்தி மீதோ எனக்கு எவ்விதக் காழ்ப்பும் கிடையாது. சாஸ்திரங்கள் மற்றும் அவற்றில் உள்ள இடைச்செருகல்கள் குறித்த என் நிலைப்பாட்டை நான் திரும்பவும் கூறத் தேவையில்லை. இது மட்டுமே அறிவுப்பூர்வமாக சரியானதும் ஒழுக்கப் பூர்வமாக வலுவானதும் ஆன நிலைப்பாடு என்று திரு. சாண்ட்ராமுக்கு நான் துணிந்து சொல்லிக் கொள்கிறேன். இப்படிச் சொல்வதற்கு, இந்து மரபில் போதிய சாட்சியங்கள் உள்ளன.
- "அரிஜன்', ஆகஸ்டு 15, 1936