Saturday 24 September 2011

அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா? - ஆந்தைகள்


அமாவாசை, தீபாவளியும் சேர்ந்து வரும் இரவில் ஆந்தையை பலி கொடுத்தால் வாழ்வில் வளம் வந்து சேரும் என்ற செய்தியால், ஒரு ஆந்தையை ரூ. 10,000 வரை விலை கொடுத்து வாங்கி, 200க்கும் மேற்பட்ட ஆந்தைகள் பலியிடப்பட்டுள்ளன - மாலை மலர்
 தொழில் நட்டத்தில் இருந்து மீள்வதற்காக ரூ. ஒன்றரை லட்சம் ரூபாய் வரை  விலை கொடுத்து வாங்கி ஆந்தைகள் பலியிடப்படுகின்றன. இதற்காக ஆந்தைகள் கடத்தல். - தினகரன்
இவற்றுடன் "ஆஸ்திரேலியப் பறவை, மனித முகம் கொண்ட அபூர்வப் பறவை" என்ற தலைப்புடன் வெண்ணிற ஆந்தையின் இறக்கையை விரித்துப் பிடித்தபடி ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை நாளிதழ்களில் பார்த்திருக்கலாம். இதைப் படிக்கும்போது ஆந்தையை பலி கொடுத்தால் வளம் வந்து சேருமா? ஆந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகின்றனவா? மனித முகம் கொண்டவையா என்பது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.
முற்றிலும் இல்லை என்பதுதான் பதில். சுற்றுசூழல் அறியாமை நிலவும் நம் நாட்டில், பணம் சேர்க்க எதை வேண்டுமானாலும் பலி கொடுக்க மனிதர்கள் தயாராகி விட்டார்கள். அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகளைப் பார்க்கலாம். 1. புள்ளி ஆந்தை (Spotted Owlet), 2. கூகை (அ) வெண்ணாந்தை (Barn Owl), 3. கொம்பன் ஆந்தை ((Great Horned Owl)
புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். சாம்பல் பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டது. உருண்டையான தலையில் காதுத் தூவிகள் எழுந்து நிற்கும். கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் முக்கிய உணவு சுண்டெலி, புழு பூச்சிகள், தத்துக்கிளி, ஒணான், சிறு பறவைகள். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. மரப்பொந்துகளில் 3-4 முட்டை இடும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
கூகை அல்லது வெண்ணாந்தைதான் அடிக்கடி நாளிதழ்களில் இடம்பிடிக்கும் "ஆஸ்திரேலியப் பறவை"! கூகைகள் மட்டுமல்ல, எந்த வகை ஆந்தையும் வலசை (Migaration)) செல்வதில்லை. இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. கூகைகள் ஆஸ்திரேலியப் பறவையோ, மனித முகம் கொண்டவையோ அல்ல. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்திக் கருக்கலில் கூட்டை விட்டு புறப்படும் முன் எழுப்பப்படும் ஒலி காரணமாக Screetch Owl என்ற பெயரும் உண்டு. இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்பட்டது.
ஆந்தைகள் இரவில் நடமாடும் இரவாடிப் பறவைகள் (Nocturnal). இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். ஒரு எலி ஓர் இரவில் இரண்டு லிட்டர் நெல்லை வீணாக்கும் தன்மை கொண்டது. இதனால் நாட்டின் 20 சதவீத உணவு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆந்தைகள் நான்கு விரல் கூர் உகிர்களால் எலி, சுண்டெலிகளைப் பிடித்து அலகால் தூக்கிச் செல்லும். ஆனால் ஆந்தைகள் ஒரே இரவில் 3-4 எலிகளை அப்படியே விழுங்கிவிடும். சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும். கூகைகள் ஆண்டு முழுவதும் மரப் பொந்துகளிலும் பாழடைந்த கட்டடங்களிலும் 4-7 முட்டைகள் இடும். மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன. கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
ஆந்தை இனங்களில் உலகிலேயே பெரிதானது கொம்பன் ஆந்தை. பருத்த தோற்றத்துடன் பழுப்பு நிற உடலில் வெளிர் மஞ்சள், ஆழ்ந்த பழுப்புக் கோடுகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவ கண்களையும் தலையின் இருபுறமும் நீண்டு நிற்கும் இறகுக் கொம்புகளும் இதன் தெளிவான அடையாளங்கள். பெரிய சண்டை சேவல் அளவில் இருக்கும்.
தமிழகம் எங்கும் ஊருக்கு வெளியே உள்ள குன்றுகள், சிறு காடு மேடுகள், ஆற்றங்கரையோர மரங்களில் கொம்பன் ஆந்தை வசிப்பதைப் பார்க்கலாம். மற்ற ஆந்தைகளுக்கு மாறாக பகல் நேரத்தில் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது. அதேவேளையில் மர நிழல், பாறை இடுக்குகளில் அமர்ந்திருக்கும். எலி, சுண்டெலி, தவளையை உணவாகக் கொள்ளும். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு எலிகள் வரை உட்கொண்டு உழவர்களுக்கு நன்மை புரிகிறது. மண்மேடுகளிலும், புதர் ஓரக் குழிகளிலும், பாறை மீதும் 4 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மே வரை.
ஆந்தை சிறப்புகள்
கூருணர்வு (Sensitive): ஆந்தை போன்ற இரவாடிப் பறவைகளின் பார்வைத் திறன் மிகுந்த கூருணர்வு மிக்கது. நமது கண்களோடு ஒப்பிட்டால் ஆந்தைகளின் கண்கள் 5 மடங்கு பெரியவை. எனவே, இவற்றின் பெரிய கண் பாவை மிகச் சிறிய வெளிச்சத்தையும்கூட உள்வாங்கி உணரும் ஆற்றல் கொண்டது. இதனால் இரவில் நடமாடும் ஆந்தைகளால் எதையும் கூர்ந்து அறிய முடிகிறது.
கழுத்து: ஆந்தைகளின் கழுத்து மிகவும் துவளக் கூடியது. மனிதர்கள், மற்ற பாலூட்டிகளின் தலைகள் இரண்டு மூட்டுகளால் கழுத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்தைகளின் தலையோ ஒரே மூட்டால் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இதன் ஒவ்வொரு கழுத்து முள்ளெலும்பும் கணிசமாக இடம்பெயரக் கூடியது. இதனால் தலையை முழுமையாக 360 டிகிரி திருப்பும் திறன் இதற்கு உண்டு.
சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. நாமும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் உள்ளோம். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பழைமை கருத்துகள், பக்தியின் பேரால் நிலவும் மூடநம்பிக்கைகளை ஆகியவற்றை அகற்றிவிட்டு, அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டுமே ஆந்தைகளின் வாழ்க்கையும், நமது வாழ்க்கையும் சிறக்கும். இல்லை என்றால், எதிர்காலச் சந்ததிகள் பாடம் செய்யப்பட்ட அவற்றின் உடலை மட்டுமே பார்க்கக் கூடிய நிலை உருவாகலாம்.
பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். சுயநலத்துக்காக மனிதன் அவற்றை சுரண்டிக் கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒரு நாள் மற்ற உயிரினங்களுக்கு முன்னதாகவே நமது அழிவு தொடங்கி விடலாம்.

No comments:

Post a Comment