Tuesday 13 September 2011

தாய்மார்களே நியாயமா?



எழுதியவர் shanmugavel 

தாய்க்கு நிகராக ஒருவர் உலகில் இருக்க முடியுமென்றால் தாய்ப்பாலுக்கு நிகராக ஓர் உணவும் இருக்க்க்கூடும்.உயிர் ஜனிக்கும் முன்பே தேவையான உணவுக்கு இயற்கை ஏற்பாடு செய்து விடுகிறது.இயற்கைக்கு இணையாக வேறொன்றை கற்பனை செய்வதும் சாத்தியமல்ல.

  ரொம்பவும் மனசை சங்கடப்படுத்தும் விஷயம் இது.தாய்ப்பால் கொடுக்காத காரணத்தால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வேலைக்கு போக வேண்டி இருப்பது ஒரு காரணம் என்றாலும் அழகு குறைந்து விடும் என்று தாய்ப்பால் கொடுக்காத தாய்களும் இருக்கிறார்கள் என்பது ஜீரணிக்க முடியாத அசிங்கம்.

  ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் தேவையில்லை.மிகவும் எளிதில் செரிக்க்க்கூடியது.போதுமான நீரும்,அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது.மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கொழுப்பு அமிலங்களும்,உயர்தர புரதமும்,இரும்புச்சத்தும் தாய்ப்பாலில் இருக்கிறது



  சிலர் புட்டிப்பாலும் தாய்ப்பாலும் மாற்றி மாற்றி கொடுக்கிறார்கள்.இது தவறான பழக்கம்.உடலில் பிரச்சினை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு வழி வகுத்து விடும்.உலகில் வயிற்றுப்போக்கால் இறக்கும் குழந்தைகள் அதிகம்.இரண்டு வயது வரை குழந்தையை நோயிலிருந்து காக்க தாய்ப்பால் போதும்.

 எவ்வளவு சுகாதாரமாக புட்டிப்பால் கொடுத்தாலும் தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு சுவாச நோய்கள்,நிமோனியா போன்றவைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இரண்டு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு சில வகை புற்று நோய்களும் வருவதில்லை.இயற்கையான கர்ப்பத்தடையும் கூட.தவிர உணர்வுப்பூர்வமான பிணைப்பு குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் இருக்கும்.போதுமான தாய்ப்பால் இல்லாத குழந்தைகள் புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள் என்கிறது உளவியல்.



  ஒரு நாளில் எட்டிலிருந்து பத்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.சத்துணவும் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு வயது வரை கொடுப்பது அவசியம்.உடல் நலம் இல்லாத போது,மார்பில் புண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.இதெல்லாம் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்ட்தே என்பது சங்கடமான விஷயம்.

 சில நேரங்களில் தனது உறவினர்களோ,பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுண்டு.இதை தவ்ர்ப்பதே நல்லது.தாய்ப்பாலில் ஒரேஒரு பிரச்சினை உண்டு.எச்.அய்.வி. தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவும் வாய்ப்புண்டு.யார் எப்படி என்று நமக்கு தெரியாது.பெற்றோர்கள்,எதிர்காலத்தில் பெற்றோர்கள் ஆகப்போகிறவர்கள் கொஞ்சம் மனதில் வையுங்கள்.

எழுதியவர் shanmugavel

No comments:

Post a Comment