Tuesday 20 September 2011

இவர்களை கொல்ல விரும்பும் அரசுகள் ! - கூடங்குளம்



இடிந்தகரை இந்த பெயரை உச்சரிக்கும் போது எதோ இனம் புரியாத அமானுஷ்யம் போல் இது ஒரு பாழடைந்த பகுதியாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு வரும் ஆனால் இடிந்தகரை மிக அழகான கடற்கரை கிராமம் கடற்கரையில் இருந்து மாதா கோவிலின் கோபுரத்தை பார்த்து ரசிக்கும் போது நமக்கு எதோ ஒரு ஐரோப்பிய கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் அந்த கோவில் அவ்வளவு அழகு அவ்வளவு நேர்த்தி

ஊரில் அனைவருமே மீன்பிடி தொழிலை ஜீவாதாரமாக கொண்ட அடித்தட்டு மக்கள் தான் தினசரி கடலுக்கு சென்றால் தான் வாழ்க்கை என்ற நிலையில் இருப்பவர்கள் வெளியுலகத்தை பற்றி அங்கு நடக்கும் ஆனாகரீகங்களை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதனால் மக்களிடம் சற்று முரட்டுத்தனம் அதிகம் இருக்கும் ஆனால் அன்போடு பழகினால் நமக்காக உயிரையும் தருவார்கள்

நான் பிறந்த ஊருக்கு பக்கத்து ஊருதான் இடிந்தகரை என்றாலும் நான் ஊரில் இருக்கும் காலம் வரை எனக்கு அந்த கிராமத்தை பற்றி அதிகம் தெரியாது எனது நண்பர் வார்த்தை சித்தர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட அமரர் திரு.வலம்புரி ஜான் எழுதிய நீர் காகங்கள் என்ற நாவலை படித்த போது அந்த ஊரை பற்றி பல விஷயங்கள் அறிந்துக் கொள்ள ஆர்வம் எனக்கு தோன்றியது உண்டு ஆனாலும் திரு.வலம்புரி ஜான் அவர்களிடம் அதை பேசியதோடு சரி பல வேலையாலோ அல்லது சோம்பேறி தனத்தாலோ அதற்க்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை 


ஆனால் இப்போது கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அறிந்தவுடன் இனம் புரியாத ஒரு பாசம் அந்த மக்கள் மீது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை அணு உலையினால் ஆக்கத்தை விட அழிவு தான் அதிகம் அதன் அழிவு எத்தகைய கோரமுடன் இருக்கும் என்பதை முன்பு ரஷ்யாவிலும் இப்போது ஜப்பானிலும் பார்த்து விட்டோம் இத்தனையும் கண்டபிறகு இப்படி ஒரு அழிவு சக்தியை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்க வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அதற்கு அரசாங்கம் சொல்லுகின்ற பதில் தீர்க்கமான முறையில் சிந்திக்கும் போது வேதனையாக இருக்கிறது

அணு சக்தியினால் நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் இதன் மூலம் பொருளாதார பலமும் வளமும் அடையலாம் என்கிறது அரசு பொருளாதார பலம் ஒரு நாடு பெறவேண்டும் என்பது எதற்க்காக? அந்த நாட்டு மக்கள் வளத்தோடு வாழவேண்டும் என்பதற்காக தான் ஆனால் அந்த மக்களையே பலிகொடுத்து பெறுகின்ற வளம் எதற்கு தேவை? குழந்தையின் கழுத்தை வெட்டி பால் வாங்குவது போலதான் இந்த கதையும் இருக்கிறது

அணுஉலை வெடித்தால் பல உயிர்கள் சாம்பலாகி போய் விடும் என்று சொன்னால் அரசாங்கம் அப்படி எல்லாம் எதுவும் ஆகாது முழுமையான பாதுகாப்புடனே திட்டம் செயல்படும் என்கிறார்கள் நிச்சயமாக அணுஉலை வெடிக்க வேண்டும் என்று யாரும் நினைக்க வில்லை ஆயிரம் மனித சக்தியால் பாதுகாப்பு கொடுத்தாலும் இயற்கை சீற்றம் என்று வருகின்ற போது அதன் முன்னால் நமது பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் எல்லாம் வெறும் தூசுக்கு சமம் என்பதைத்தான் அணு உலையை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் இதற்கு அரசாங்கம் கூடங்குளம் பகுதியில் எப்போதுமே சுனாமி தாக்கமோ நில அதிர்வோ ஏற்படாது என்ற உத்திரவாதத்தை தரமுடியுமா? வேண்டுமானால் மனித உயிர்களை காவு கொண்ட பிறகு ஒரு குடும்பத்திற்கு இத்தனை லட்ச்சம் ரூபாய் என்று நஷ்டயிடு கொடுக்க முடியும் அந்த பணம் ஒரு தாயின் அரவணைப்பு தருகின்ற சுகத்தை குழந்தைக்கு கொடுக்குமா? 


 மேலும் இடிந்தகரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்து மக்கள் பாதுகாப்பு பிரச்சனையை பற்றி மட்டும் பேச வில்லை கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பட துவங்கினால் தங்களது மீனவ தொழிலே பாதிக்கப்பட்டுவிடும் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் வயிற்றுக்கு சோறு இல்லாமல் நாதியற்று போவார்கள் என்றும் கூறுகிறார்கள் மிகமுக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது

ரைஸ்மில் வைத்து நடத்துபவரை நாளை முதல் நீ மாவு மில் வைத்து நடத்து என்றால் எப்படியும் பிழைத்துக் கொள்வார் பனைமரம் ஏறி பதநீர் எடுத்து வாழ்பவரை மரத்தை வெட்டி பிழைப்பு நடத்து என்றாலும் கூட பிழைக்க வாய்ப்பு இருக்கிறது ஆனால் தினசரி கடலுக்கு சென்று மீன் பிடித்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலையில் உள்ள மக்களை நீ உன் தொழிலை விட்டு விட்டு வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள் என்றால் நிச்சயம் அவர்களால் வாழமுடியாது காரணம் அவர்கள் பல ஆயிரவருடங்களாக கடலோடும் அதன் வளத்தோடும் தங்களது வாழ்க்கையை பின்னி பிணைத்து கொண்டவர்கள் அவர்களால் வேறு வேலை புதியதாக கற்றுக் கொண்டு வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத வேதனையாகும்

மீனவ மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நம்மால் சரிவர எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது காரணம் நமது வாழ்க்கை முறை வேறு கடல் சார்ந்த அவர்களின் வாழ்க்கை முறை வேறு இடிந்தகரையில் மட்டும் தான் கடல் இருக்கிறதா தூத்துக்குடியில் இல்லையா உவரியில் இல்லையா அங்கே சென்று மீன் பிடித்தால் என்ன என்று நம்மில் பலர் நினைக்கிறோம் ஆனால் இடிந்தகரை கடல் பகுதியில் கிடைக்கின்ற மீன் வகை அருகில் இருக்கும் உவரியில் கிடைக்காது உவரியில் கிடைக்கும் மீன் வகை அதன் அருகில் இருக்கும் கோடாவிளை கிராமத்தில் கிடைக்காது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே வலை போட்டு பிடித்து பழக்கப்பட்ட மீனவன் தீடிரென வேறுவகை மீனை பிடிக்க முனையும் போது பல சிக்கலையும் சவாலையும் சந்திக்க வேண்டிய நிலைமை உண்டு அதை சொல்லித் தெரிய வைக்க முடியாது அனுபவித்து தான் தெரிந்து கொள்ள முடியும்


 கூடங்குளம் அணுஉலை செயல்பட துவங்கினால் அதை சுற்றி உள்ள பல மீனவ கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கருத்து உள்ளது இது தான் அந்த மக்களை கொதிப்படைய செய்துள்ளது அவர்கள் பலநூறு வருஷங்களாக அந்த கடல் பகுதியோடு ஒன்றி வாழ்ந்து விட்டார்கள் இனி வேறு இடம் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்பது உடம்பில் இருந்து உறுப்பை வெட்டி எடுப்பதற்கு சமமாகும் அந்த இட மாற்றத்தை யாராலும் ஜீரணிக்க முடியாது

இது மட்டும் அல்ல இவர்கள் பல காலமாக மீன் பிடித்து கொண்டிருக்கின்ற கடல் பகுதியில் இனி மீன் பிடிக்க கூடாதாம் அந்த இடங்களை விட்டு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டுமாம் இது அவர்களது தொழிலையே நாசப்படுத்தும் பயங்கர வன்முறையாகும்

நமது நாட்டில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டு தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தால் நிதிஅமைச்சரே இறங்கி வந்து சலுகைகள் வழங்குவார் ஆனால் பாடு பரதேசிகள் அன்றாடம் காச்சிகள் எக்கேடு கெட்டாலும் அதை பற்றி கவலை பட யாருக்கும் அவகாசம் இல்லை அக்கறையும் இல்லை இது தான் இந்தியர்களின் நித்திய தலையெழுத்து அப்பாவியான மீனவ மக்கள் இத்தனை நாள் பட்டினி போராட்டம் நடத்திய பிறகும் நமது மாநில முதல்வர் ஒரு நாள் அணுஉலை வேண்டும் என்கிறார் மறுநாள் வேண்டவே வேண்டாம் என்கிறார் இப்படி கருத்து குழப்பத்தில் முதல்வர் என்றால் முடிவு எடுக்க வேண்டிய பிரதம மந்திரியோ நான் அமெரிக்கா போகிறேன் வந்த பிறகு பேசலாம் என்கிறார் அதாவது அவர் போய் வரும் வரை இங்கு எத்தனை பேர் செத்தாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை என்பதே இதன் பொருளாகும்


 பொதுவாக மீனவ மக்கள் தினம் தினம் மரணத்தை சந்திப்பவர்கள் சாவு என்பது அவர்களுக்கு ஒரு சம்பவமே தவிர சரித்திரம் அல்ல இதனால் அவர்கள் தங்கள் உயிர் போவதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் மற்றவர் உயிர் கெடுவதை பற்றியும் அச்சப்பட மாட்டார்கள் தங்கள் கடல் சார்ந்த சமூகத்திற்கும் தரை சார்ந்த சமூகத்திற்கும் சிறிய சண்டை சச்சரவுகள் வந்து விட்டாலே பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் மூர்க்கமாக மோதுவார்கள் அப்படி பட்ட மக்கள் இன்று அண்ணல் மகாத்மா வழியில் அறப்போராட்டம் நடத்துவதே பாராட்ட வேண்டிய விஷயம் அவர்களின் நியாயமான வேண்டுகோளை உடனடியாக பரிசீலிக்க அரசாங்கம் தவறுமேயானால் நாடு மிக மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் இதை சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்

அணுஉலையை மூடினால் ஒன்றும் குடிமுழுகி போகாது மின்சாரம் எடுப்பதற்கு அதை தன்னிறைவாக ஆக்கி கொள்வதற்கு எத்தனையோ மாற்று வழிகள் நம் நாட்டில் உண்டு மின்சாரத்தை காற்றில் இருந்து எடுக்கலாம் நீரல் இருந்து எடுக்கலாம் சூரியனிடம் இருந்து எடுக்கலாம் குப்பைகளை எரித்துக் கூட எடுக்கலாம் அணுவை உடைத்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது பாதுகாப்பான முறைகள் எத்தனையோ இருக்கிறது அவைகளை விட்டு விட்டு இதில் அரசு பிடிவாதம் பிடித்தால் இது மக்கள் நல அரசு அல்ல மக்கள் விரோத அரசே ஆகும்



தமிழக அரசு உண்மையாகவே அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால் கூடங்குளம் திட்டத்தை நிறுத்தக் கோரி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் அப்படியும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்க மறுத்தால் தமிழக மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு நம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் இப்படி செய்யப்பட்டால் தான் வாழும் தமிழக மக்களும் நாளைக்கு வாழப்போகும் தலைமுறையும் பாதுகாப்பாக வாழ்வை நடத்த முடியும்

இவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய வசதி படைத்தவன் தரமாட்டான் வயிறு பசித்தவன் விடமாட்டான் என்ற பாடல் வரியை நினைத்து பார்த்தால் எல்லா ப்ரச்சனைகளையுமே சுலபமாக தீர்த்து விடலாம்.

No comments:

Post a Comment