Saturday 24 September 2011

மான்சான்ட்டோ – உணவுப் பயங்கரவாதி



பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு இதழாளர் மேரி மோனிக் ராபின் (50). உறுப்புதான அறுவைச்சிகிச்சை தொடர்பான புலனாய்வு செய்திக்காக ஆல்பர்ட் லாண்ட்ரெஸ் பரிசைப் பெற்றவர். மரபணு மாற்று விதைகளைக் கொண்டு இந்தியாவை அடிமைப்படுத்த நினைக்கும் மான்சான்டோ நிறுவனம் பற்றி புகழ்பெற்ற ஆவணப் படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். தற்போது அதன் விரிவாக்கமாக "தி வேர்ல்ட் அக்கார்டிங் டு மான்சான்டோ" என்ற அவரது புத்தகத்தை துளிகா புக்ஸ் வெளியிட்டுள்ளது.
மான்சான்டோவின் குற்ற மரபணு எப்படிப்பட்டது என்பதை ராபின் இப்புத்தகத்தில் வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளார் . அந்த நிறுவனத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்கு போதுமான காரணங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளதே இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
இப்புத்தகத்தைப் பற்றி மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவை (ஜி.இ.ஏ.சி) கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளரும், மரபணு மாற்று விதைகளின் கடும் எதிர்ப்பாளரும், மூலக்கூறு உயிரியலாளருமான புஷ்ப எம். பார்கவா எழுதிய அறிமுக உரையை இங்கு கொடுத்துள்ளோம்:
உலகின் மிகப் பெரிய வணிகம் உணவுத் துறை சார்ந்ததே. உணவுத் துறையை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே உலகையும் கட்டுப்படுத்துகிறார்கள். அதைத்தான் மான்சான்டோ நிறுவனமும், அதன் ரட்சகரான அமெரிக்காவும் செய்து கொண்டிருக்கின்றன என்பதே இந்தப் புத்தகம் உறுதியாக வலியுறுத்தும் விடயம். உணவின் மீதான ஆதிக்கத்தை மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலமாக அடைய மான்சான்டோ திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் அதற்குத் தேவையான ஆதாரப்பூர்வமான குறிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.
வரலாற்று ரீதியில் பார்த்தோம் என்றால், மனித உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் பயங்கரமான நச்சு வேதிப் பொருள்களை தயாரித்து வந்ததன் தொடர்ச்சியாகவே மான்சான்டோ இந்த மரபணு மாற்று விதையை அறிமுகப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்நிறுவனத்தின் பாலி குளோரினேடட் பைபினால் புற்றுநோயை ஏற்படுத்தியது, டையாக்சின் கிளோர்ஆக்னேயை ஏற்படுத்தியது, கிளைபோசேட் என்ற பெரும் ஆபத்துடைய வேதிப்பொருளைக் கொண்ட களைக்கொல்லியான ரவுண்ட்-அப், மரபணு மாற்ற கால்நடை இயக்குநீர் (ஹார்மோன்) கால்நடைகளின் பால்காம்புகளில் வலிமிகுந்த அழற்சியை ஏற்படுத்தியது, அதேபோல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா, பருத்தி ஆகியவை காரணமாக ஏற்படும் பல்வேறு தீவிர உடல்நலக் கோளாறுகள் தற்போது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன -இவை அனைத்தையும் இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக வியத் நாம் போரில் அமெரிக்கா கட்டுப்பாடின்றி பயன் படுத்திய தாவரங்களை சிதைக்கக் கூடிய ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற உயிரிஆயுதத்தை மான்சான்டோதான் தயாரித்துக் கொடுத்தது. கிட்டத்தட்ட 3,000 கிராமங்களில், 50 முதல்- 1 கோடி எக்டேர் பரப்பிலான தாவரங்கள், மரங்கள் இந்த உயிரி ஆயுதத்தால் பாதிக்கப்பட்டன. வியத்நாம் போருக்குப் பின்னால் யுனெஸ்கோவுக்காக முதல் சர்வதேச அறிவியல் பயிற்சியை நடத்த அங்குள்ள ஹனோய் நகருக்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஏஜென்ட் ஆரஞ்ச் ஏற்படுத்திய பாதிப்பை 1982ஆம் ஆண்டு கண்கூடாகக் கண்டேன்.வியத்நாமின் அப்போதைய சுகாதார அமைச்சர் நூற்றுக் கணக்கான கி.மீ. பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்று பாதிப்புகளைக் காட்டினார். போர்க்களம் போல் காட்சியளித்த காடுகளில் எல்லா தாவரங்களும் மொட்டைமொட்டையாக நின்றிருந்த பயங்கர காட்சி இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை.
மான்சான்டோ பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் எப்படி தாவரம், விலங்கு, மனிதர்கள் மீது திருத்திக்கொள்ள முடியாத பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று ராபின் இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். கட்டுப்பாடின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள்தொகையின் பசியை ஆற்றுவதற்காக என்ற முகமூடியுடன், தனது அத்தனை பயங்கரங்களையும் அது அறிமுகப் படுத்தி வருகிறது.
அது மட்டுமின்றி தனது லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக, பொய்கள், தவறான தகவல்கள், தகவலை மறைத்தல், போலியான விளம்பரங்கள், அரைகுறை அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் சீர்கேடு, லஞ்சம், உண்மையை அம்பலப் படுத்துபவர்களுக்கு மிரட்டுவது, ஊடகங்களை கட்டுப்படுத்துவது, விவசாயிகளை பலிகடா ஆக்குவது, அமெரிக்க அரசு அமைப்பு களான சுற்றுச்சூழல் பாது காப்பு அமைப்பு (இ.பி.ஏ), உணவு - மருத்து நிர்வாக அமைப்புக்கு (எப்.டி.ஏ) எதிராக மோதுவது உள்ளிட்ட வேலைகளில்மான்சான்டோ ஈடுபட்டுவருகிறது. மேற்கண்டஎல்லா விடயங்களையுமே அது இந்தியாவில் செய்து உள்ளதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் மான்சான்டோ - மஹிகோவின் மரபணு மாற்று கத்தரிக்காய்க்கு கால வரையறையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நலன் கருதி இந்தியாவை விட்டு மான் சான்டோவை துரத்துவதற்குத் தேவையான அத்தனை காரணங்களையும் இப்புத்தகம் விளக்குகிறது. அரசு கட்டுப்பாடுகளை ஏற்காத நிலையில் இந்த நிறுவனத்தின் சொத்துகளை முடக்க வேண்டும்.
குற்றம், சட்டவிரோதம், நெறிபிறழ்வு உள்ளிட்ட அனைத்து தவறான அம்சங்களும் காலங்காலமாக மான்சான்டோவின் மரபணுக்களில் பதியப்பட்டுள்ளன போலும். இந்தோனேசியாவில் மரபணு மாற்று பருத்தியை சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமலேயே அறிமுகப்படுத்த 140 அரசு அதிகாரிகளுக்கு மான்சான்டோ லஞ்சம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தோனேசியாவுடன் இந்தியா போட்டியிடுவது கடினம்தான்! ஆனால் மான்சான்டோ - மஹிகோவின் மரபணு மாற்று கத்தரிக்காயை நாம் அனுமதிக்கவில்லை. மேலும் அமெரிக்காவிலேயே மான்சான்டோவின் ரவுண்ட் அப் ரெடி வீட் கோதுமைக்கு வரவேற்பில்லை என்பதையெல்லாம் பார்க்கும்போது, கொஞ்சமாக நம்பிக்கை துளிர்விடுகிறது.
ராபினின் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகும், இந்திய அரசு எதையும் கற்றுக்கொள்ள மறுத்தால், அதற்கு நாட்டை ஆளவே தகுதியில்லை. 
நன்றி : தெகல்கா-
தமிழில்: அமிதா 

‘விவசாயிகள் தற்கொலைக்கு மான்சான்டோவே காரணம்’
மேரி மோனிக் ராபின் நேர்காணல் 
மான்சான்டோவை ஆராய்ச்சி செய்யும் நோக்கம் எப்படி எழுந்தது?
உயிர் உரிமம் மீறல் (பயோ பைரசி) தொடர்பாக எழுதுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்தேன். இந்திய பாரம்பரிய சொத்தான வேம்புக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்தது போன்ற விடயங்களே உயிர் உரிமம் மீறல் எனப்படுகின்றன. பஞ்சாப்பில் சில விவசாய அமைப்புகளிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, மான்சான்டோவைப் பற்றியும் எழுதுங்களேன் என்று கூறினார்கள். ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அந்த நிறுவனம் பற்றி இந்திய விவசாயிகள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பியது தெரிந்தது. இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய விதை நிறுவனங்களையும் அது ஏன் வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். நான் சென்ற இடமெல்லாம் மான்சான்டோ பற்றியே பேசினார்கள். அதற்குப் பிறகு அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அதன் கடந்தகாலம் நம்ப முடியாத அளவுக்கு மிக மோசமான குற்றப் பின்னணியைக் கொண்டிருந்ததை கண்டறிந்தேன். மரபணு மாற்று விதைகளிலும் அதே குற்ற நடைமுறையையே அந்நிறுவனம் பின்பற்றுகிறது, அவை: பொய் சொல்வது, ரகசியம் காப்பது, மோசடி செய்வது.
மான்சான்டோவால் நீங்கள் அச்சுறுத்தப்படவில்லையா?
இது தொடர்பாக புலனாய்வு செய்துகொண்டிருந்தபோது, நான் பயந்தேன். வழக்கமாக, தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து மிரட்டுவது அதன் பழக்கம். இதனால் எனது ஆவணப் படம், புத்தகத்தை ஒரு வழக்குரைஞர் மறுஆய்வு செய்திருக்கிறார். இனிமேல் என்ன நடந்தாலும் நான் வெற்றி பெற்று விடுவேன். ஆனால் வழக்கு நடத்தும் செலவுக்கு மட்டும் என் வீட்டை விற்க வேண்டி இருக்கும் - இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குப் பிறகுதான் பெரும் ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது. பிரான்சில் ஆவணப்படமும் புத்தகமும் வெளியானபோது, இணையத்தில் எனக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் எனக்கு எதிரான மான்சான்டோவின் செயல்பாடுகள் அடங்கிப் போயின. பிரான்ஸ், கனடா, பராகுவே, பிரேசில், அர்ஜென்டினா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் நாடாளுமன்றம், அதற்கு இணையான அமைப்புகளில் ஆவணப் படத்தைத் திரையிட்டேன். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல் எனது எழுத்தை அறிவியலாளர்கள் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை இயற்கையாக வளர்ந்த தாவரத்துக்கு இணையாக வைத்துப் பேசுவதற்கு எந்த அடிப்படை அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதுதான் எனது ஆராய்ச்சியின் அடிப்படை வாதம்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை எந்த உடல்நல, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் செய்வதற்கு முன்னதாகவே சந்தையில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பது மான்சான்டோவின் கெட்டநோக்கம். ஐரோப்பிய நாடுகள் இப்போது அதை அனுமதிக்கவில்லை. அது ஒரு பயங்கரம் என்பதால், இந்தியாவும் அதை அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன்.
இந்த புலனாய்வில் நான் கண்டறிந்த இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவை - “விதை காப்புரிமையை காப்பாற்றுவதற்காக” என்ற பெயரில் அமெரிக்காவிலுள்ள விவசாயிகளில் ஒருவர் மற்றொருவரை உளவு பார்க்கும் வேலையைத் தூண்டுவதன் மூலம் விவசாய சமூகத்தை மான்சான்டோ சீர்குலைக்கிறது. இரண்டவதாக, இந்தியாவில் மான்சான்டோ அறிமுகப்படுத்திய மரபணு மாற்று பருத்தியை பயிரிட்டதே ஆந்திரா, மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம். இந்தியாவில் விவசாயிகள் மீளமுடியாத கடன் வலைக்குள் தள்ளப்பட்டு, தற்கொலை செய்து கொள்வதற்கான தூண்டுதல் அதிகரிக்க, மரபணு மாற்றுப் பருத்தி மிக முக்கிய காரணம்.

No comments:

Post a Comment