Tuesday 13 September 2011

''வைகை... இனி, மதுரையைத் தாண்டாது!''



நன்றி: பசுமைவிகடன் 

''இன்னும் கொஞ்ச ஆண்டுகளிலேயே... 'தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வைகை என்ற ஆறு ஓடியது... அதில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது' என்று நம்முடைய குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் பாடம் படிக்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது வைகை. இதற்குக் காரணம்... வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும் மேகமலை மொட்டை அடிக்கப்படுவதுதான்!'' என்று அதிர்ச்சிச் செய்தி சொல்கிறார்கள்... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் மூலம் பாசனம் பெற்று வந்த ஆயிரக்கான ஏக்கர் நிலங்கள் வறட்சியில் சிக்கியிருக்கின்றன. இதன் காரணமாக, வைகை அணையைத் தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படவே, கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு அணையை நேரில் ஆய்வு செய்தது (இதுகுறித்து பசுமை விகடன் ஜூலை 10-ம் தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகியிருந்தது). இதையடுத்து, அணையைத் தூர்வாரி பாசனப் பரப்பை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்தான், 'வைகை... வரலாறு...' என்று திகில் கிளப்புகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த விஷயம் பற்றி வெளியில் பேசினாலே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தங்களின் முகம் மறைத்தே நம்மிடம் பேச முன்வந்தனர், அந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

''வைகை உற்பத்தியாகும் மேகமலை 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவு கொண்டது. இதில் 1,700 ஏக்கர் பட்டா நிலங்கள். இதில் 23 தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில்லாமல் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல தரப்பினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் முன்பு பஞ்சம் வந்த சமயத்தில் பட்டினிச் சாவுகளைக் குறைப்பதற்காக வருசநாடு மலையில் மக்களை குடியேற அனுமதித்தது அரசு. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு கூடிக்கொண்டே போனதன் விளைவுதான் இது. தற்போது, வனச் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிய ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பழைய ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

மேகமலையில் வனப்பகுதி எது... அரசுப் புறம்போக்கு நிலம் எது என்று பிரித்துக் காட்டக்கூடிய நில அளவைப் படத்தை இதுவரை வருவாய்த்துறை தயார் செய்யவே இல்லை. சப்-டிவிஷனும் செய்யவில்லை. அதனால் வனப்பகுதிக்குள் வருவாய்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சில எஸ்டேட் உரிமையாளர்கள் ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். அதனால்தான் வைகையின் மூலாதாரமான மேகமலை வறண்டு வருகிறது. சூரியனே தெரியாத அளவுக்கு எப்போதும் மேகங்கள் சூழ்ந்திருந்ததால்தான் இதற்கு மேகமலை என்றே பெயர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதியில் மொட்டை வெயில் அடித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால்... வைகை ஆறு மதுரையைக் கடப்பது சந்தேகமே'' என்று கவலை பொங்கச் சொன்னார்கள்.

வருவாய்த் துறையிலிருக்கும் சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சரியான நில அளவைப் படம் இல்லாததால் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள 'அ’ பதிவேட்டில் ஆறு, ஆற்றுப் புறம்போக்கு, காடு, கரடு, மேய்ச்சல் தரிசு, வனப் புறம்போக்கு, பட்டா நிலம் என மொத்தமாக 1,400 ஏக்கர் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இதனால் வைகையின் நீராதாரமாக இருக்கும் சிறு சிறு ஆறுகளின் புறம்போக்கில் வளர்ந்துள்ள வேங்கை, அத்தி, மா, பலா, தோதகத்தி... எனப் பல வகை மரங்களை எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களுடையதாக நினைத்து ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். தேனி மாவட்ட வருவாய்துறையினரிடம் மரம் வெட்ட அனுமதி வாங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். அதனால் நில அளவை விஷயத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு செல்வதில்லை'' என்று உண்மை நிலையை உடைத்துப் போட்டார்கள்.

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவியிடம் இதுகுறித்து கேட்டபோது, ''மேகமலை வனப்பகுதியில் சப்-டிவிஷன் செய்யவில்லை என்பது உண்மைதான். அதனால்தான், மலைப்பகுதியில் நில அளவை செய்து புல வரைபடம் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று சொன்னார்.

அளவெடுப்பதோடு நில்லாமல்... ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, மரங்கள் அழிப்பையும் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வைகையை யாராலும் காப்பாற்ற முடியாது!

நன்றி: பசுமைவிகடன்

No comments:

Post a Comment