Saturday 24 September 2011

சலவைக்காரனின் ஈரப்பொழுதுகள்..


மாபெரும் சுவர் அமைத்தவர்களால்
உழன்று கொண்டிருக்கும்
நீர் மிருகத்தைப் போல
கரைகளேயன்றி
ஈரத்திலேயே இழைக்கப்படுகிறது
இவர்களின் அன்றாடம்
உருப்படிகள் வாங்குபவர்கள்
உருப்படிகளாய் தானும்
கைமாற்றப்படுகிறார்கள்
வெவ்வேறு நிற உருப்படிகளிடம்...
களைந்து உலர்ந்த உடல்கள்
உற்றார் உறவினர் கதைகளோடு
உள்ளூர் சினிமாவோடு
உஷ்... உஷ்... இசையெழுப்பி
ஓயாத சக்கரத்துள்
சுழன்று ஓய்கிறது.
மேலே விழுகின்ற சாட்டையடிகளுக்கேற்ப
மாட்டின் வலியைச் சொல்லும்
கழுத்து மணியாய்
ஒவ்வொரு தோய்ப்புக் கற்களும்
வாழ்வாதாரக் கருவியாக்கிக் கொண்டவனை
பாடிப் பாடிக் கரைகின்றது
இரவில் சமாதியானவைகள்
பகலில்விழவு கொண்டன.
தன்மேல் நிரந்தரமாய்
பிணைத்துக் கொண்டவர்களோடு
கழிவுகளை வெளியேற்றும்
மாட்டுப் பண்ணையாகவும்
அச்சலவைத்துறை
மாறிப் புரக்கின்றது.

பெருமரங்களை இழக்கும் பறவைகள்

வெள்ளைப் புறாக்களின்
குரல்வளையை நெறித்த பேயன்று
ஆடிக் கொண்டு, துருத்திய நாக்கொரு
காட்டையே வேட்டையாடிற்று
கடலில்
இரத்த நதியின்
ஓயாத
சங்கம் அலையோசை
தொன்மொழி மூச்சையும்
அதன் மீதான வாஞ்சையையும் கொண்டு
வடிவமைத்த இருக்கையில் அமர்ந்தவர்களும்
மரமாகிப் போனார்கள்
பெருமரக் கலங்களை இழந்த
சிறகொடிந்த, அலகிழந்த பறவைகளின்
கண்ணீர் ஓலம்
அற்றலைந்தபடி அலைவுற்றன
நெஞ்சத்தில்
ஓயாத எரிமலைக் குழம்பாய்
திசையெங்கிலும் எறியப்பட்ட
சுதந்திரப் பறவைகளின் சுவாசம்
தீட்டப்படும் ஒலி நுகர்ந்து
நுதல்விழி விரிய
தொல்குடி உறைகின்றன
காத்திருப்பின் வாயிலில்...!

No comments:

Post a Comment